காஸா பகுதியில் போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வகுக்காவிட்டால் பதவி விலகுவதாக இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பென்னி காண்ட்ஸ் (Benny Gantz ) மிரட்டல் விடுத்துள்ளார்.
ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆறு இலக்குகளை முன்வைத்த பென்னி காண்ட்ஸ், அவற்றை அடைவதற்கான காலக்கெடுவை ஜூன் 8 வரை நிர்ணயித்தார்.
காஸாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருதல், அங்கு ஒரு பன்னாட்டு சிவில் நிர்வாகத்தை நிறுவுதல், காஸாவில் ஹமாஸால் கைப்பற்றப்பட்ட அனைத்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக் கைதிகளையும் மீட்பது மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இடம்பெயர்ந்த பாலத்தீன குடிமக்கள் வடக்கு காஸாவுக்கு திரும்புவது உட்பட ஆறு “மூலோபாய இலக்குகள்” அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
“நீங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தள்ளி வைத்து தேசியத்தை முன் நிறுத்தினால், நாங்கள் உங்களுடன் தோள் கொடுத்து பக்கபலமாக நிற்போம்.
ஆனால் நீங்கள் வெறியர்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழிக்கு இட்டுச் சென்றால், நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.” என்று அறிவித்துள்ளார்.
காண்ட்ஸ் (Benny Gantz ) வெளியிட்ட அறிக்கையை நிராகரித்த நெதன்யாகு, அமைச்சரின் கருத்துகள் மோசமான, வலிமையற்ற வார்த்தைகள் என்றும் இது இஸ்ரேல் தோல்வியுற்றதாக பொருள்படும் என்றும் குறிப்பிட்டார்.
காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றான ரஃபா மற்றும் வடக்கு நகரமான ஜபாலியாவில் இஸ்ரேலியப் படைகள் செயல்பட்டு வருகிறது.
ஹமாஸ் படையினர் இங்கு இல்லை என்று இஸ்ரேல் முன்பு குறிப்பிட்ட பகுதியில் அதன் ராணுவம் முகாம் அமைத்து மீண்டும் செயல்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இஸ்ரேலின் மற்றொரு போர் குழு உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், `காஸாவை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க இஸ்ரேலுக்கு எந்தத் திட்டமும் இல்லை’ என்று பகிரங்கமாக அறிவிக்குமாறு நெதன்யாகுவை வலியுறுத்தினார்.
அவரின் அறிக்கைக்கு சில நாட்களுக்குப் பிறகு காண்ட்ஸ் பதவி விலகுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பிரச்னை குறித்து பல மாதங்களாக கேள்வி எழுப்பியும் நெதன்யாகு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கேலண்ட் கூறியுள்ளார்.
`காஸாவில் ராணுவக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது இஸ்ரேலின் பாதுகாப்பு அபாயங்களை அதிகரிக்கும்’ என்பதே கேலண்ட் மற்றும் காண்ட்ஸின் ஒருமித்த கருத்து.
அதே சமயம் இஸ்ரேல் அரசாங்கத்தில் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியின் தீவிர வலதுசாரி உறுப்பினர்கள் உட்பட்டோர் ஹமாஸைத் தோற்கடிக்க தொடர்ச்சியான ராணுவ கட்டுப்பாடு அவசியம் என்று நம்புகிறார்கள்.
(Benny Gantz )
சனிக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், காண்ட்ஸ் நெதன்யாகுவை குறிப்பிட்டு “இஸ்ரேல் மக்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களின் நிலைப்பாடு என்ன? சியோனிசமா (இஸ்ரேலின் தேசிய சித்தாந்தம்) இழிவான செயல்பாடா? ஒற்றுமையா பிரிவினையா? பொறுப்பா அக்கிரமமா? வெற்றியா பேரழிவா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள் ? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“இரான் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான விரிவான செயல்முறை வகுக்க வேண்டும். அதன் பகுதியாக, சவுதி அரேபியா உடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்று காண்ட்ஸ் குறிப்பிட்டார்.
போர்க்குழு அமைச்சர் காண்ட்ஸின் உரைக்கு பதிலளித்த நெதன்யாகு, “காண்ட்ஸின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அது போரின் முடிவு மற்றும் இஸ்ரேலின் தோல்விக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பணயக் கைதிகளை கைவிட நேரிடும். ஹமாஸை அப்படியே விட்டுவிட்டு பாலத்தீன அரசை நிறுவவும் வழிவகுக்கும்” என்று கூறினார்.
காஸாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய பகுதி மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேலின் போர் அமைச்சரவை நிறுவப்பட்டது. காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் 35,386 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி (Herzi Halevi), , நெதன்யாகுவிடம் தனிப்பட்ட முறையில், போருக்கு பிந்தைய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் ஜபாலியா போன்ற வடக்கு காஸாவின் சில பகுதிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளது. அப்பகுதிகளில் ஹமாஸ் படை இல்லை என்று அறிவித்த பின்னர் தற்போது ராணுவம் சென்றுள்ளது.
“காஸாவில் எதிர்கால மாற்று அரசாங்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்படும் அதே வேளையில், அங்கு பொதுமக்களுக்கான விவகாரங்களை நிர்வகிக்க கூடிய அமெரிக்க, ஐரோப்பிய, அரபு மற்றும் பாலத்தீன நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இஸ்ரேல் பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஓரளவுக்கு பராமரிக்க முடியும்” என்று காண்ட்ஸ் விவரித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஜபாலியாவில் தாங்கள் பாலத்தீன ஆயுதக் குழுக்களுடன் சண்டையிட்டதாகக் கூறினர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன மருத்துவர்கள் தெரிவித்தனர். `ஜபாலியா மீது இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்’ என்று ஹமாஸ் தரப்பு கூறியது.
கடந்த வாரம், இஸ்ரேல் ரஃபாவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ஹமாஸின் கடைசி புகலிடங்களை தகர்க்க ராணுவப் படை நகரத்திற்குள் நுழைய வேண்டும் என்று கூறியது. சனிக்கிழமை அன்று, அது நகரின் கிழக்கில் உள்ள இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடங்கியது.
சனிக்கிழமை மாலை, இஸ்ரேல் வடக்கு காஸாவின் சில பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறும்படி உத்தரவுகளை வெளியிட்டது, ஆயுதக் குழுக்கள் அதன் எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியதாக கூறியது.
ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் பிலிப் லாஸரினி காஸாவின் சூழலை விவரிக்கையில், “சுமார் 800,000 பாலத்தீனர்கள் இப்போது ரஃபாவை விட்டு வெளியேறி, சிதைந்து போயிருக்கும் கான் யூனிஸ் நகரத்திலோ அல்லது கடற்கரை ஓரத்திலோ தஞ்சம் புகுந்துள்ளனர்.
காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி பலமுறை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”
“மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் போது, அவர்கள் செல்லும் பாதைகள் பாதுகாப்பானதாக இல்லை.
அதே சமயம் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படும் போது, அவர்கள் தங்களிடம் உள்ள சில உடமைகளை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மெத்தைகள், கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் அடிப்படை பொருட்களை கொண்டு செல்லவோ அல்லது போக்குவரத்துக்கு பணம் செலுத்தவோ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”
“காஸாவில் உள்ள மக்கள் ‘பாதுகாப்பான’ பகுதிகளுக்குச் செல்லலாமே என்று கேள்வி எழுப்புவது தவறானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணிக்கும் போது, அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.” என்று பிலிப் லாஸரினி விளக்கினார்.
அமெரிக்க அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
குடிமக்களைப் பாதுகாக்கும் திட்டம் இல்லாத நிலையில், ரஃபா மீதான எந்தவொரு முழு அளவிலான இஸ்ரேலிய தாக்குதலுக்கும் பைடன் நிர்வாகத்தின் எதிர்ப்பை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன், சல்லிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது குறித்தும், பாலத்தீன அரசு அந்தஸ்தை அடைவது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்தது.
பிபிசி செய்தி
தொடர்புடைய ஆங்கில செய்தி
Israel war cabinet minister vows to quit if there is no post-war plan for Gaza