எந்த நேரத்திலும் எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

அவரும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களும் இவ்வாறு கூறுவது முதல்முறை அல்ல. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், சிறிது காலம் அடங்கியிருந்த அவர்கள், பின்னர் இதனையே கூறி வருகிறார்.

“எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் பொதுத் தேர்தலை நடத்தினால், அதற்கு நாங்கள் தயார். ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால், அதற்கும் நாங்கள் தயார். அதைப் பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று இப்போது மஹிந்த குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் போட்டியிடுவதற்கு தங்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பஷில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ , மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் குறிப்பிட்டாலும்- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகப் பொருத்தமான நபர் தங்களிடம் இல்லை என்பதை பஷில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னரே ஒப்புக்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆறாவது தடவையாக பேச்சுக்களை நடத்திய பின்னர் தான், அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறாயின் மஹிந்த ராஜபக்ஷ எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் தயார் என்று எப்படிக கூற முடியும்?

எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும் ஒரு கட்சி, ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப் பொருத்தமான வேட்பாளரை இதுவரைக்கும் அடையாளம் கண்டு இருக்க வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களில் இறங்கி இருக்க வேண்டும்.

ஆனால் இன்னமும் ரணில் விக்கிரமசிங்கவுடன் அந்த கட்சி பேச்சுக்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க தான் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறார்.

வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவையும் ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவில்லை.

ஆனால் அவர் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கின்ற பிற கட்சிகளைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களும் அதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனினும் அவரை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்து தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம், அவர் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. இதனை மஹிந்த ராஜபக்ஷவே அண்மையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.

கடைசியாக பஷில் ராஜபக்ஷவை சந்தித்தபோது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவை விரைவாக அறிவிக்குமாறு, ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டிருந்தார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதற்கு, சரியான பதிலை கொடுக்கவில்லை. ஜூன் 16ஆம் திகதிக்கு பின்னர் தான், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.

ஆனாலும் அதற்கு முன்னதாக- கூடிய விரைவில் முடிவை அறிவிக்குமாறு பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் .

ரணில் விக்கிரமசிங்க தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு கொடுத்துள்ள காலக்கெடுவுக்கு இன்னமும் சுமார் ஒரு மாதம் இருக்கிறது.

அதில் இருந்து ஒரு மாதத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயத்துடனான இணக்கப்பாடு மற்றும் கடன் வழங்குனர்களுடனான இணக்கப்பாட்டுக்கு பின்னர் தமது முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தாலும்- அது சரியான காரணமா என்ற சந்தேகங்கள் உள்ளது.

அவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதை தடுக்க நினைக்கிறாரா- அல்லது அவர்களின் அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ள நினைக்கிறாரா என்று கேள்விகள் இருக்கின்றன.

கடந்தமுறை கோட்டாவை நிறுத்திய போது இவர் தான் நாட்டை வழிநடத்த மிகப் பொருத்தமான ஒரே நபர். இவரை விட்டால் வேறு எவராலும் நாட்டை காப்பாற்ற முடியாது என்று பிரச்சாரம் செய்த ராஜபக்ஷ தரப்பு, இந்த முறை தங்களிடம் பொருத்தமான வேட்பாளர் இல்லை என்று கூறுவது அந்தக் கட்சி பலமான நிலையில் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது.

தங்களிடம் பொருத்தமான வேட்பாளர் இல்லை என்று ஒப்புக்கொண்டு விட்டு, கடைசி நேரத்தில் யாரையாவது நிறுத்த முயன்றால் அது அவர்களையே பாதிக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதில் பொதுஜன பொதுஜன பெரமுன உறுதியாக இருக்கிறது. அதனூடாக தங்களின் கட்சியை மீள கட்டியெழுப்பும் திட்டம் அவர்களிடம் இருக்கிறது.

இதனை செய்வதற்கு ரணிலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள்- தாங்கள் வரைந்த கோட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அவர்களுக்கு முக்கியம். அதற்கான முயற்சிகளையே பஷில் ராஜபக்ஷ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இணையான தந்திரசாலி. இலங்கை அரசியலில் ‘குள்ளநரி’ என்று கூறப்பட்ட ஜே. ஆர். ஜயவர்த்தனவின், வளர்ப்பு – வாரிசு அவர். அப்படிப்பட்டவரை தங்களின் வளையத்துக்குள் கொண்டு வருவது ராஜபக்ஷவினருக்கு அவ்வளவு இலகுவானது அல்ல என்பது இப்போது புரிந்து இருக்கும்.

ராஜபக்ஷவினரின் உதவியுடன் போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்க இணங்கி இருப்பாரேயானால்- அவர்கள் கூறுவதை எல்லாம் அவர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ரணில் விக்கிரமசிங்க, இந்த பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் ராஜபக்ஷவினரின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.

அது அரசாங்கத்தையும் ரணில் விக்கிரமசிங்கமையும் பற்றிய எதிர்மறையான கருத்து தீவிரமடைவதற்கு காரணமாக அமையும்.

இதனால் தான் பஷில் ராஜபக்ஷவின் பிடிக்குள் அகப்படாமல் ரணில் விக்கிரமசிங்க நழுவிக் கொண்டிருக்கிறார்.

இது ராஜபக்ஷவினருக்கு தெரியாத ஒன்று அல்ல. அவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்தது தான். ஆனாலும் வேறு வழி அவர்களுக்கு இல்லை.

அவர்களே தங்களிடம் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் பந்தயத்திடலில் ஓடுகின்ற ஏதோ ஒரு குதிரையின் மீது பந்தயம் கட்டுவதை விட வேறு வழி இல்லை.

அதற்கு சரியான பொருத்தமான நபராக ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார் என்பது அவர்களின் கருத்து.

மஹிந்த ராஜபக்ஷவின் பால்ய நண்பரான ரணில், அவரை எதிர்த்து அரசியல் நடத்தியவர். ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டவர்.

அப்படியிருந்தும், ரணில் விக்கிரமசிங்கவை நம்பியாக வேண்டிய – அவருக்குப் பின்னால் அலைய வேண்டிய கட்டாயம் ராஜபக்ஷவினருக்கு வந்திருக்கிறது. இது தான் அவர்களின் தலைவிதி.

ஆனாலும், விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில், எந்த தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயார் என்பது போன்ற, வாய்ஜாலங்களுக்கு மட்டும் அவர்களிடம் எந்தக் குறைச்சலும் இல்லை.

இதன் ஊடாக தங்களின் செல்வாக்கு உயர் நிலையில் இருக்கிறது என்று நம்ப வைக்க முனைகிறார்கள். அது சாத்தியப்படுமா என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.

– சத்ரியன்

Share.
Leave A Reply