இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, ரைசியின் இந்த மரணம் இஸ்லாமியப் பிராந்தியமான மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான அரசியல் தாக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, ரைசியின் இந்த மரணம் இஸ்லாமியப் பிராந்தியமான மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான அரசியல் தாக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது.

அதேநேரம் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் காலநிலை என்று சொல்லப்பட்டாலும்கூட, இதன் பின்னணியில் இஸ்ரேல் – அமெரிக்க உளவு அமைப்புகளின் சதிவேலைகள் இருக்கலாம் என்றகோணத்திலும் சந்தேக அலைகள் வீசத்தொடங்கியிருக்கின்றன.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஆட்சியில்…

கடந்த 2021-ம் ஆண்டு முதல் இரானின் வலிமை மிக்க அதிபராக இப்ராஹிம் ரைசி இருந்துவந்தார். நாட்டின் உச்சத் தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்தப் பொறுப்பை இப்ராஹிம் ரெய்சியே கவனிக்கும் நிலையில் இருந்தார்.

ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மை பெற்ற இரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் கூட இரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற போது, நூற்றுக்கணக்கானோர் மீது அந்நாட்டின் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கியது.

அப்போதே, `இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ச்சியை தடுப்பதும்தான்; இதன்பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கிறது’ எனக் குற்றம்சாட்டினார் அதிபர் இப்ராஹிம் ரைசி.

இரானுக்கு எதிராகத் தொடர்ந்த தாக்குதல்கள்:

அந்த நிலையில், கடந்த 2024 ஜனவரி 3-ம் தேதி இரானில் மிகப்பெரிய இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது.

அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் தாக்குதலில் 2020-ம் ஆண்டு உயிரிழந்த இரானின் உயர்மட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, தென்கிழக்கு இரானின் கெர்மன் நகரிலுள்ள சுலைமானி நினைவிடத்தை நோக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருக்கின்றனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர சம்பவத்துக்கு, தங்களின் எதிரி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவை சம்மந்தப்பட்டிருக்கிறது என இரான் சந்தேகித்தது.

மேலும், இரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி, `இரானின் எதிரிகள் மீண்டும் ஒரு பேரழிவை உருவாக்கியிருக்கின்றனர். இந்த அப்பாவி மக்களின் உயிர்த் தியாகத்துக்கு மோசமான பதிலடி நிச்சயம் உண்டு!’ என எச்சரிக்கை விடுத்தார்.


இஸ்ரேலில் தாக்குதலுக்குள்ளான இரான் தூதரகம், சிரியா

இரான் தூதரகம் மீதான தாக்குதல்:

இந்த நிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கும் இரானை எச்சரிக்கும் விதமாக, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இதில், தூதரகத்தில் தங்கியிருந்த இரானின் முக்கிய ராணுவ கமாண்டர் உள்பட 12 தூதரக அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக, ஏப்ரல் 13-ம் தேதி இஸ்ரேல் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி வான்வழித் தாக்குதலை நடத்தியது இரான்.

இருப்பினும், இஸ்ரேல் தனது `அயர்ன்-டோம்’ பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் இரான் ஏவிய 99% ஏவுகணைகளை தனது நாட்டின் எல்லையைத் தொடும் முன்பே வழிமறித்து தாக்கி அழித்தது.

அந்த தாக்குதல் குறித்து அப்போது பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இரான் தயாராகியிருக்கிறது.

அதேசமயம் நாங்களும் எங்களின் தற்காப்புக்காக எல்லாவிதமான பதிலடிக்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கு நாங்களும் கெடுதல் செய்வோம். எங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன” எனத் தெரிவித்தார்.

அதேசமயம், இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி, “இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் என்பது, சிரியாவில் இரான் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடியே.

எங்களின் தற்காப்புக்காக நாங்களும் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலை நாங்கள் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை.

ஆனால், இஸ்ரேல் எங்களை மீண்டும் தாக்கினால் அதற்காக நாங்கள் கொடுக்கும் பதிலடி இதைவிடப் பெரிதாக இருக்கும். இஸ்ரேலுக்கு ஆதரவாக குறுக்கே அமெரிக்கா வந்தாலும் அவர்களுக்கான பதிலடியைக் கொடுப்போம்!” என எச்சரிக்கை விடுத்தார்.

சவுதி அரேபியாவுடன் புதுப்பிக்கப்பட்ட நட்பு:

போர்களுக்கிடையே தனது பழைய பங்காளிகளுடன் இருந்த மோதல்போக்கை கைவிட்டு, நட்பை புதுப்பிக்கும் முயற்சியிலும் இப்ராஹிம் ரைசி தலைமையிலான இரான் அரசாங்கம் முன்னிறங்கியது.

இரானுக்கு எதிரணி முகாமில் அமெரிக்காவுடன் கைகோர்த்திருந்த சவுதி அரேபியாவின் பகைமையை முடித்துக்கொண்டு, சீனாவின் முயற்சியுடன் திடீர் நட்பு பாராட்டியது இரான்.

இதன்விளைவாக, ஏழாண்டுகளாக முறித்துக்கொள்ளப்பட்டிருந்த இரான் – சவுதி அரேபியாவின் தூதரக உறவு கடந்த மார்ச் மாதம் மீண்டும் மலர்ந்து, இருநாடுகளிலும் தூதரகங்கள் திறக்கப்பட்டன.

இந்த சம்பவங்களெல்லாம் இரானின் பரம எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தின என்கிறார்கள் சர்வதேச் அரசியல் நோக்கர்கள்.

விமான விபத்தில் மரணமும், கிளம்பும் சந்தேகங்களும்:

இந்த நிலையில்தான், இரான் – அஜர்பைஜான் எல்லையில் இருக்கும் கிஸ் கலாசி, கோடாஃபரின் ஆகிய அணைகளைத் திறக்கும் விழாவில் அஜர்பைஜான் அதிபருடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் கலந்துகொண்டார்.

நேற்று நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் இரானின் வர்செகான் நகருக்கு அருகே விபத்துக்குள்ளானது.

இதில், இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் சேர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாயன், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படைவீரர்கள், விமானிகள் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்ததாக இரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடுமையான பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கும் என கூறப்படும் நிலையில், வேறு புறக் காரணிகளும் இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது இரான்.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்கான பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ஈடுபட்டிருக்கக்கூடும் என பல்வேறு சர்வதேச ஊடகங்களும் பூடகமாக விவாதித்து வருகின்றன.

மத்திய கிழக்கில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?

மத்திய கிழக்கைப் பொறுத்தவரையில், அங்கிருக்கும் இஸ்லாமிய நாடுகள் இரண்டு முக்கியக் காரணிகளால் இரண்டுபட்டு நிற்கின்றன.

ஒன்று அமெரிக்கா ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு மற்றொன்று ஷியா – சன்னி மதப் பிரிவு. குறிப்பாக, சவுதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகவும், பரஸ்பர பெட்ரோலிய ஒப்பந்தங்களை பேணிவரும் நாடுகளாகவும் இருக்கின்றன.

அதேபோல, சிரியா, லெபனான், குவைத், இராக், கத்தார் போன்ற நாடுகள் இரான் பக்கமும் நிற்கின்றன. மற்ற நாடுகள் இருதரப்பிலும் சமமான உறவில் இருந்துவருகின்றன.

இரான் ஷியா பிரிவை பின்பற்றும் இஸ்லாமியர்களின் நாடு என்பதால் சன்னி பிரிவை பின்பற்றும் பிற இஸ்லாமிய நாடுகளுடன் உரசல்போக்கையும் கையாண்டு வருகிறது.

எனவே, இந்தப் பிரிவுகளை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மத்திய கிழக்கில் தங்களின் எண்ணெய் அரசியலை கச்சிதமாக செய்துகொண்டிருக்கின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்லாண்டு காலமாக மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சிம்ம சொப்பனமாக முன்னணியில் இருந்துவரும் நாடாக இரான் உள்ளது.

செறிவூட்டப்பட்ட யூரேனியம் தயாரிப்பு, அணுஆயுதங்கள், டாலரில் பெட்ரோலிய வர்த்தகத்தை செய்யாதது என அமெரிக்காவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. மேலும், அரபு நாடுகளில் இருக்கும் அமெரிக்க, இஸ்ரேலிய எதிர்ப்பு கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுத உதவி, பண உதவியையும் கொடுத்து மறைமுகமாகப் பயிற்றுவித்து வருகிறது.

குறிப்பாக, இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் ஹமாஸ் போராளிக் குழுக்களுக்கும், ஹைதி போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் இரான் பக்கபலமாக இருந்துவருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தாக்கினால், இரான் இஸ்ரேலைத் தாக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது. எனவே இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை இரான் மீது சுமத்தியிருக்கிறது. தவிர, காசிம் சுலைமானி போன்ற இரான் பல்வேறு முக்கியத் தலைவர்களைக் குறிவைத்தும் கொன்றிருக்கிறது.

(இருப்பினும், சீனா, இந்தியாவுக்கு மிக அதிகளவில் பெட்ரோலிய ஏற்றுமதியை செய்யும் நாடாக இன்றுவரையிலும் இரான் இருந்து வருகிறது.) இந்த நிலையில்தான், அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பிருக்கிறது. அதற்கேற்ப அமெரிக்காவின் தலைவர்களும் இரான் அதிபரின் மரணத்தை வரவேற்று பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்பத்தியிருக்கிறது.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி

மேலும், மத்திய இரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் பலவீனமாகவும் அமையும், அதேநேரம் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சாதகமான வாய்ப்பையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, பாலஸ்தீனம் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் கை ஓங்கும். சவுதி அரேபியா இரான் உறவில் மீண்டும் விரிசல் விழலாம். சில நாடுகள் அணிமாறலாம். பெட்ரோலிய ஏற்றுமதியில் சிக்கல் எழலாம். கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கலாம்.

ஒருவேளை இப்ராஹிம் ரைசியில் மரணத்தில் அமெரிக்க, இஸ்ரேலின் கைரேகைகள் இருக்கிறது என்ற சந்தேகம் உறுதியானால் அந்த நாடுகளின் மீது இரான் பதிலடி போர்த் தொடுக்கலாம்’ என பல்வேறு தாக்கங்கள் எதிர்காலத்தில் நிகழும் வாய்ப்பிருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply