குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, இந்திய அரசின் உதவியுடன் கேரளா வந்தடைந்தன.
தமிழ்நாடு அரசு சார்பாக அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தீ விபத்தில் இறந்த நபர்கள் யார்?
குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த தொழிலாளர் குடியிருப்பில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உட்பட 50 இறந்தனர்.
மேலும் பலர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் பலியான தமிழர்களின் விவரங்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
வீராசாமி மாரியப்பன், தூத்துக்குடி மாவட்டம்
சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மாவட்டம்
சிவசங்கர் கோவிந்தன், சென்னை மாவட்டம்
ராஜூ எபமேஷன், திருச்சி மாவட்டம்
கருப்பண்ணன் ராமு, ராமநாதபுரம் மாவட்டம்
புனாஃப் ரிச்சர்ட் ராய், தஞ்சாவூர் மாவட்டம்
முகமது ஷெரிஃப், விழுப்புரம் மாவட்டம்
இந்தியா வந்த உடல்கள்
தீ விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை குவைத் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் குவைத் சென்றிருந்தார்.
அங்கிருந்து இந்திய விமானப் படையின் விமானம் மூலமாக இந்தியாவுக்கு இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன.
குவைத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானப் படையின் விமானத்தில், 45 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள், கேரளாவைச் சேர்ந்த 24 பேரின் உடல்கள் உள்பட மொத்தம் 45 பேரின் உடல்கள் கொச்சின் வந்தடைந்தன.
இங்கிருந்து தமிழர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
கொச்சின் வந்தடைந்த உடல்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
படக்குறிப்பு, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்து இருந்தார்.
முன்னதாக குவைத் தீ விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது,” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக குவைத் தீ விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களின் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தவிர இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அயலகத் தமிழர் நல வாரியம் மூலமாக உதவிகள் வழங்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
மேலும் இன்னும் சில தமிழர்கள், இந்த தீ விபத்தில் இருந்து தப்பி பிழைத்து ம்ருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
‘ஊருக்கு வருவதாக சொல்லி இருந்தார்’
படக்குறிப்பு, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கருப்பண்ணன் ராமு
குவைத் நாட்டிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் இந்த தீ விபத்தில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவரது மகன் சரவணக்குமார் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
26 வருடங்களாக குவைத்தில் பணியாற்றி வந்த கருப்பண்ணன், விபத்து நடந்த கட்டிடத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். தீயால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி தனது தந்தை மருத்துவமனையிலேயே இறந்து விட்டதாக குவைத்தில் உள்ள அவரது நண்பர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
“26 வருடமாக வேலை பார்த்து விட்டு, விரைவில் ஊருக்கு வந்து குடும்பத்துடன் செட்டிலாக இருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு என்னிடம் பேசும் போது சீக்கிரம் உன்னை வந்து பார்க்கிறேன் என்றார். இனி எப்போது அந்த குரலை கேட்பேன் என தெரியவில்லை. என் அப்பாவின் உடலை எனக்கு கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும்,” என்றார் அவரது மகன் சரவணக்குமார்.
‘புதிதாக கட்டிய வீட்டில் வாழ கொடுத்து வைக்கவில்லை’
படக்குறிப்பு, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ரிச்சர்ட் ராய்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவரான புனாஃப் ரிச்சர்ட் ராய் என்பவரும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
28 வயதான ரிச்சர்ட் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக கட்டிய வீடு குடிபுகும் நிகழ்வுக்காக வந்திருந்தார் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவரது பெரியப்பாவான கிருபை ராயப்பன், ”என் மகனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவன் இறந்து விட்டான் என அமைச்சர் சொல்கிறார். அப்படி நடந்திருந்தால் அவனுடைய உடலை ஊருக்கு கொண்டு வரவேண்டும்,” என்று கூறினார்.
28 வயதான ரிச்சர்ட், குவைத்திலுள்ள என்.பி.டி.சி என்ற கட்டுமான நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரிச்சர்டின் தந்தை மனோகர் தனது மகனின் நிலை குறித்து தகவலறிந்த பிறகு புதிதாக கட்டிய வீட்டுக்கு முன்பு கதறி அழுது கொண்டிருந்தார்.
‘என் தந்தைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை’
குவைத் தீ விபத்தில் சிக்கிய திருச்சியைச் சேர்ந்த நபரின் உடல்நிலை குறித்து உண்மை நிலை தெரியவேண்டும் என குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்திருந்தனர்.
முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்கள் ஐந்து பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு
திருச்சியை அடுத்த நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜூ எனமேஷன் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
ராஜூவின் மகன் குணசீலன், தனது தந்தைக்கு என்ன ஆனது என தெரியவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
“என் தந்தை குவைத்தில் 6 வருடமாக ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். தீ விபத்திற்கு பிறகு அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை. அங்குள்ள நண்பர்களிடம் கேட்டால் தீவிர சிகிச்சை பிரிவில் என்னுடைய தந்தை சிகிச்சை பெறுவதாக கூறுகின்றனர். கம்பெனியில் கேட்டால் என் தந்தை இறந்து விட்டதாக சொல்கிறார்கள். அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. அவருக்கு என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவேண்டும்,” என்று பிபிசியிடம் பேசிய போது கூறினார்.
பின்னர் அவர் இறந்ததை இந்திய அரசும், தமிழ்நாடும் அரசும் உறுதி செய்து அவரது உடல் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது.
’அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை’
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கரனின் மனைவி ஹேமகுமாரி, தனது கணவரின் இறப்பை ஏற்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறார்.
குவைத்தில் ஓட்டுநராக பணியாற்றிய வந்த தனது கணவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று சிவசங்கரனின் இறப்புச் செய்தியை அறிந்த பிறகு கதறி அழுதார்.
அதே போல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் இறப்பு செய்தியைக் கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
கடந்த 20 வருடங்களாக குவைத்தில் பணியாற்றி வந்த மாரியப்பனும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கடந்த மார்ச் மாதம் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த இவர், அண்மையில்தான் குவைத் சென்று மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
குடும்பத் தலைவரை இழந்த மனைவி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரிஃப் என்பவர் கடந்த 14 வருடமாக குவைத்தில் உள்ள ஒரு மெட்டீரியல் ஸ்டீல்சில்வர் கம்பெனியில் போர்மேனாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு நடந்த தீ விபத்தில் இவரு உயிரிழந்துள்ளார்.
முன்னதாக முகமது ஷெரிஃப்பை அவரது மனைவி தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. குவைத்தில் இருக்கும் கணவரின் நிலை குறித்து அறிய முடியாமல் ஷெரிஃபின் மனைவின் அஃப்ருனிஷா பல சிரமங்களை எதிர்கொண்டார்.
”அரசின் உதவி எண்கள் எதுவும் வேலை செய்யவில்லை. என் கணவரிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவருக்கு என்ன ஆனது என எதுவுமே தெரியவில்லை,” என ஷெரிஃபின் இளம் மனைவி அழுதுகொண்டே பிபிசியிடம் பேசினார்.
அதன் பிறகு தமிழ்நாடு அரசு மூலமாக ஷெரிஃப் இறந்த செய்தி குடும்பத்துக்கு சொல்லப்பட்டது. கணவரின் ஆதரவின்றி இரண்டு குழந்தைகளையும் கவனிப்பது எப்படி என்று தெரியவில்லை என்றார் அஃப்ருனிஷா.
இரண்டு வாரத்தில் சொந்த ஊருக்கு வர இருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை. இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணமானது என சின்னதுரையின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குவைத் தீ விபத்து – இதுவரை நடந்தது என்ன?
குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் இறந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த குவைத் செல்லும் முன்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர், “உயிரிழந்தவர்கள் பலரது உடல்கள் முழுவதும் கருகியுள்ளன.
எனவே டிஎன்ஏ சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்ட உடன், உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
குவைத்தின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன் கிழமை(ஜூன் 12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்தியாவை சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்கியிருந்த அந்த கட்டிடத்தில் திடீரென தீ பிடித்ததில் இந்தியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
கட்டிடத்தின் சமையலறையிலிருந்து தீப்பற்றியது என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து குவைத் நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய தூதரகம் தீ விபத்து குறித்த முழு தகவல்களையும் குவைத் அதிகாரிகளிடமிருந்தும் அந்த நிறுவனத்திடமிருந்தும் திரட்டிக் கொண்டு வருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அதன், ஜபர், ஃபர்வானியா, முபாரக் அல் கபீ, ஜஹ்ரா ஆகிய ஐந்து மருத்துவமனைகளில் அனுமத்கிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முறையாக மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகின்றது. சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இந்திய தூதரகத்தின் உதவி எண் : +965-65505246 ( வாட்ஸ் ஆப் மற்றும் சாதாரண அழைப்பிலும் பேசலாம்)
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901