இப்ராஹிம் ரைசியின் எதிர்பாராத மற்றும் சோகமான மரணமானது, புவிசார் அரசியலின் உண்மையான கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது. மனித உயிர்கள் இழக்கப்படுவதைப் பற்றி நாம் முதலில் துக்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விடயமாகும். எனினும், அந்த சோகத்திலும் அரசியல் மாற்றங்களை மையமாகக் கொண்டதாகவே, பெரும்பாலும் அனைத்து ஊடக செய்திகளும் அமைந்திருந்தன.
இதுவொரு துரதிர்ஷ்டமான நிலை என்ற போதிலும், தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. ஈரான் தற்போது பதற்றத்தின் மையமாக உள்ளதோடு, இதுபோன்றதொரு சம்பவத்தை, மனித அவலத்தை கடந்தும் பார்க்க தூண்டுகிறது. மேலும், பாரிய கேள்விகளுக்கு நாம் பதில் தேடவும் வேண்டியுள்ளது.
ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அடுத்த வருடம் நடைபெறவிருந்த தேர்தலை, தற்போது 50 நாட்களுக்குள் நடத்தியாக வேண்டும். ரைசியின் மறைவுக்குப் பின்னர், ஜூன் மாதம் 28ஆம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓர் அடிப்படையான கண்ணோட்டத்துக்கு, மூன்று முக்கிய விடயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்:
(i) உள்ளூர் விளைவுகள்
(ii) பிராந்திய விளைவுகள்
(iii) சர்வதேச விளைவுகள்
உள்ளூர் மட்டத்தில் மிக முக்கியமான தாக்கம் ஏற்படுமென கருதுவது பாதுகாப்பானதாகும். ஈரானின் உண்மையான நிறைவேற்று அதிகாரம், அந்நாட்டின் உயரிய தலைவரிடத்திலேயே உள்ளது. மாறாக ஜனாதிபதியிடம் அல்ல. எவ்வாறாயினும், அந்நாட்டு அரசியல் ஸ்தாபனத்தால் ரைசி ஆழமாக நம்பப்பட்டதோடு, அலி கமேனிக்குப் பின்னர் ரைசியே அந்நாட்டின் உயரிய தலைவராக ஒருநாள் பொறுப்பேற்பார் என கடந்த காலத்தில் சிலர் ஊகித்தனர்.
உள்நாட்டை பொறுத்தவரையில், அடுத்து யார் பொறுப்பேற்பார்கள் என்பதில் சாத்தியமான சிக்கல் காணப்படுகிறது.
மேலும் இந்த வாரிசு சிக்கல் உருவாகத் தொடங்குவது போல் தெரிகிறது. கமேனியின் மகன் மொஜ்தபா புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என சிலர் விரும்பும் அதே சந்தர்ப்பத்தில், அவ்வாறு வழங்கினால் அது உறவினர்களுக்கான தனிச்சலுகையின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக கருதப்படும் என மற்றொரு சாரார் வாதிடுகின்றனர்.
இந்த நெருக்கடி மோசமடைந்தால், அதிகாரத்துக்கான வெற்றிடம் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். சோகமான இந்த விபத்தில் ஈரானின் வெளியுறவு அமைச்சரும் காலமானார் என்பதை யாரும் மறக்கக்கூடாது. அந்த வகையில், வாரிசு நெருக்கடி தொடர்பாக ஒன்றல்ல, இரண்டு பிரச்சினைகள் அங்கு உருவாகியுள்ளன.
சிலர் கவலைப்படுவதைப் போல பிராந்திய மற்றும் சர்வதேச சூழ்நிலைகள், பயப்படும் அளவுக்கு மாறாது என்று வாதிடலாம். ஈரானின் கொள்கைகள் பொதுவாக அதன் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பங்களால் அல்லாமல் கருத்தியல் கொள்கைகளால் இயக்கப்படுகின்றன.
ஆகவே, புதிய ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் நியமிக்கப்பட்டாலும், அந்நாட்டின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமில்லை.
உதாரணமாக, ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான அதிகார பரிமாற்றம் என்பது ஜனாதிபதி பதவியை விட மிகப் பெரியதாகும்.
குறிப்பாக, ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் உலகில் முக்கிய சக்திகளாக இருப்பதால், அவர்கள் மிக முக்கியமான விடயங்களில் உறுதியான நிலைப்பாட்டை வைத்திருக்கின்றனர்.
விபத்தின் ஆரம்ப கட்டங்களில் ஜனாதிபதியின் நிலை நிச்சயமற்றதாக காணப்பட்ட சந்தர்ப்பத்தில், தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளில் முதலில் உதவி வழங்கியவர்களில் சவூதி நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை, ஈரானின் இடைக்கால ஜனாதிபதி முகமது மொக்பர் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் மே 25ஆம் திகதி மீண்டும் உறுதிப்படுத்தினர்.
சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் தமது இறுக்கமான உறவை சரிசெய்வதில் சமமான உறுதியுடன் இருக்கும் வரை, அதிகார வெற்றிடமானது விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
இஸ்ரேலுடனான அவர்களின் உறவும் மாறுவதற்கான வாய்ப்பில்லை. குறிப்பாக, கடந்த மாதம் இராணுவ பதற்றங்களின் அதிகரிப்பை கருத்திற்கொள்ளும்போது இது தெளிவாகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே (ஆரம்ப முரண்பாடுகளுக்குப் பின்னர் பதற்றம் தணிந்துள்ளது) ஒரு முழு அளவிலான இராணுவ மோதல் வெடிக்கும் என்பது இன்னும் சாத்தியமற்றதாக தோன்றினாலும், அடிப்படை நிலைமை அப்படியே உள்ளது.
இஸ்ரேலியர்களை கொல்வதற்கு பினாமி செயற்பாட்டாளர்களுக்கு ஈரான் பயிற்சியளிக்கிறது என்று இஸ்ரேல் நம்புகின்றது. ஒக்டோபர் 7 தாக்குதல்களில் ஈரான் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்றும் நம்புகின்றது.
இஸ்ரேல் ஒரு இனப்படுகொலை நாடு என்று ஈரான் உறுதியாக நம்புகின்றது. மற்றும் இரு நாடுகளின் தீர்வு யோசனையை தெஹ்ரான் வெளிப்படையாக நிராகரித்து, இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது.
மற்றொரு முக்கியமான உறவான, சிரியாவுடனான தொடர்பும் மாறுவதற்கு வாய்ப்பில்லை. 1979ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், சிரியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான நட்பு கூட்டணி விசேடமானது.
2011இல் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பின்போது, இந்த பிணைப்பு இன்னும் வலுப்படுத்தப்பட்டது.
கூட்டணிகள் மிகவும் அவசியமான காலகட்டத்தில், சிரிய அரசாங்கத்துக்கு அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கி, ஜனாதிபதி அசாத்தின் உறுதியான ஆதரவாளர்களில் தெஹ்ரானும் முக்கிய பங்கு வகித்தது.
பிராந்தியத்தில் ஈரானின் மூலோபாய மற்றும் மக்கள்தொகை தொடர்பான நலன்களை கருத்திற்கொண்டு, ரைசி இருந்தாலும் இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் உறுதியான நட்பு நாடாக சிரியா தொடர்ந்து காணப்படும்.
சர்வதேச அளவில், இதன் தாக்கம் இன்னும் குறைவாகவே இருக்கும். அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்தது மற்றும் எதிர்பார்த்தது போல் மேற்கொண்டு எதுவும் இடம்பெறவில்லை.
வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் 1980ஆம் ஆண்டிலிருந்து முறையான இராஜதந்திர உறவுகள் இல்லை. ஈரானின் அணுசக்தி அபிலாஷை மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அதன் நிலைப்பாடு காரணமாக பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஜனாதிபதி ட்ரம்பை விட ஜனாதிபதி பைடன், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மிகவும் வெளிப்படையான நிலையில் இருந்தாலும், ஈரானை கணிசமான சந்தேகத்துடன் நோக்க வேண்டும் என்ற உணர்வு வொஷிங்டனில் இன்னும் நிலவுகிறது.
ஈரான் தனது சிவிலியன் அணுசக்தி வளங்களை இராணுவமயமாக்கினால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா முதன்மையானதாக இருக்கும் என உறுதியாக நம்ப முடியும்.
உலகின் ஏனைய இரண்டு புவிசார் அரசியல் ஜாம்பவான்களான ரஷ்யாவுடனும் சீனாவுடனும் காணப்படும் ஈரானின் நிலையான நட்பு, அனைத்து சாத்தியக்கூறுகளிலும் நிலையானதாக இருக்கும்.
ரைசியின் இழப்பு குறித்து இரு நாடுகளும் தமது இரங்கலைத் தெரிவித்ததோடு, தெஹ்ரானுடனான தமது உறவுகள் வலுவாக இருக்குமென ஈரானுக்கு உறுதியளித்தன.
தெஹ்ரான், மொஸ்கோ மற்றும் பெய்ஜிங் இடையே அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி பற்றிய கலந்துரையாடல்களுக்கு மத்தியில் மூன்று நாடுகளின் தற்போதைய இராஜதந்திர வழி, மாறாமல் காணப்படும்.
இறுதியாக, உலக அரசியலின் வளர்ந்துவரும் மாபெரும் நாடான இந்தியாவும் இந்த சோகத்தின்போது ஈரானுடன் முதன்முதலில் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
இந்தியாவில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகளவில் உள்ள நிலையில், சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் மிகவும் நட்புறவைப் பேணுகின்ற உலகின் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஜனாதிபதி ரைசியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களில் (உலகில் மிகப் பெரிய சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்கும் அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர்) பகிரங்கமாக தனது இரங்கலை தெரிவித்தார்.
இந்த அனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் துயர மரணம் ஒரு பிராந்திய அல்லது சர்வதேச மட்டத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்மானிப்பது கடினமாகும். இதன் விளைவுகள் ஈரானிய உள்நாட்டு அரசியலில் முதன்மையாக தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பகுப்பாய்வு சிந்தனையில் ஈடுபடுவதை விட, மனித உயிரிழப்பின்போது இரங்கல் தெரிவிப்பதிலேயே எமது முதன்மையான கவனம் இருக்க வேண்டும் என்பதையே இது நினைவூட்டுகிறது.