பொதுவாக, இந்தப் பொற்காலம் என்கிற பதத்துக்குச் சரியான வரையறை ஏதும் கிடையாது. மழை பொழிந்தால் பொற்காலம். நிலம் விளைந்தால் பொற்காலம். வரிச்சுமை குறைவாக இருந்தால் பொற்காலம். மன்னன் கொடுங்கோலனாக இல்லாமல் இருந்தால் பொற்காலம். கலை வளர்ந்தால் பொற்காலம் என்று மிகவும் மேலோட்டமான காரணங்களையே பொற்காலத்துக்கு நமது சரித்திர நூல்கள் இதுவரை தந்துவந்திருக்கின்றன.
உண்மையில், மாபெரும் இனப்போர்கள் மூள்வது வலுக்கட்டாயமாகத் தவிர்க்கப்படுமானால், அந்தக் காலகட்டத்தைத்தான் பொற்காலம் என்று சரியான சரித்திர வல்லுநர்கள் சொல்லுவார்கள். அநாவசிய யுத்தங்களைத் தவிர்த்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஆக்கபூர்வமாகப் பங்காற்றிய மன்னர்களையே பொற்கால மன்னர்கள் என்று அழைக்க முடியும்.
இந்த வகையில் பார்க்கும்போது, பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம் என்று இன்றளவும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுவது, கலீஃபாக்களின் ஆட்சிக்காலங்களை மட்டுமே. இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் அல்ல; யூத, கிறிஸ்துவ ஆசிரியர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.
அப்படியரு காலம் அங்கேயும் இருந்தது என்பதை இன்றைய பாலஸ்தீன் அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து உணர்வது சிரமம். ஆனால் அதைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், பாலஸ்தீன் மண்ணில் நூறு வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது மிகப்பெரிய அரசியல் மாறுதல் ஏற்பட்டு, குறைந்தது பத்தாயிரம் பேராவது ஊரைவிட்டு வெளியேறி வந்திருக்கிறார்கள்.
இது ஆதிகாலம்தொட்டே அங்கே நிகழ்ந்து வந்திருக்கிறது. நூறு வருடம் என்பது ஒரு தோராயக் கணக்குதான். சரித்திரகாலம் முடிவடைந்து, நவீன அரசியல் ஆளத் தொடங்கியபிறகு நூறு நாட்களுக்கு ஒருமுறை கூட அப்படி நேர்ந்திருக்கிறது. ஆனால், சரித்திர காலங்களில், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் அங்கே மக்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்தே தீரவேண்டியிருந்திருக்கிறது.
பைசாந்திய இனத்தவர்களைப் போரில் வென்று உமர் அங்கே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது நேர்ந்தது, நம்ப முடியாததொரு விதிவிலக்கு. பைசாந்தியர்கள், யூதர்களை வெளியேற்றி, கிறிஸ்துவர்களை முதல்தரக் குடிமக்களாக அறிவித்தார்கள். முஸ்லிம்கள் பாலஸ்தீனை வென்றபோது, பைசாந்தியர்கள் வெளியேற்றிய யூதர்களைத் திரும்ப அழைத்து வாழச் சொன்னார்கள். அதுவும் கிறிஸ்துவர்களுடன் இணைந்து வாழும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
மத மாற்றங்கள் அரேபிய இனத்துக்குள் மட்டுமே நிகழ்ந்தனவே தவிர கிறிஸ்துவர்களையோ, யூதர்களையோ முஸ்லிமாகும்படி யாரும் சொல்லவில்லை. அவர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு இஸ்லாமியப் பிரசாரகர்கள் போகக்கூட மாட்டார்கள்.
யூதர்கள் சுயதொழில் தொடங்கி நடத்தவும், தமது மதப்பள்ளிக்கூடங்களை இடையூறின்றி நடத்திக்கொள்ளவும், கடல் வாணிபங்களில் ஈடுபடவும் இன்னபிற காரியங்களுக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
ஆனால் இதெல்லாமேகூட இன்னொரு நூற்றாண்டின் தோற்றம் வரைதான். கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 717 – 720) இரண்டாவது உமர் கலீஃபாவானபோது, பாலஸ்தீனில் முஸ்லிம் அல்லாதோரை நடத்தும் விதத்தில் மெல்ல மெல்ல மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. (பாலஸ்தீனில் மட்டுமல்ல. இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் பரவியிருந்த அத்தனை இடங்களிலுமே. இன்னும் குறிப்பாகச் சொல்லுவதென்றால் பாரசீக வளைகுடாவிலிருந்து இன்றைய மொராக்கோ வரை.)
இந்த இரண்டாம் உமரின் காலத்தில் முஸ்லிம் அல்லாதோரை “திம்மிகள்” (Dhimmis) என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்தச் சொல்லுக்கு, “பாதுகாக்கப்பட்ட இனத்தோர்” என்று பொருள் வரும். அதாவது, யூதர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியப் பேரரசால் பாதுகாக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது பாதுகாப்பு, இஸ்லாமியச் சக்ரவர்த்தியின் பொறுப்பே. ஆனால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு அது. சில நிபந்தனைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் அவர்கள் உட்பட்டாக வேண்டும்.
உதாரணமாக, இரண்டாம் உமர் காலத்தில் பாலஸ்தீனில் யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சிறப்பு வரிகள் சில விதிக்கப்பட்டிருந்தன. இந்த வரிகள் முஸ்லிம்களுக்குக் கிடையாது. வரி வசூலிக்கும் அதிகாரிகள் வரும்போது, யூதர்களும் கிறிஸ்துவர்களும் தலை குனிந்து வணங்கித்தான் வரிப்பணத்தைச் செலுத்தவேண்டும் என்றுகூட ஒரு சட்டம் இருந்திருக்கிறது! இந்தத் தலைவணக்கம் என்பது, பேரரசின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைக் குறிப்பால் தெரிவிப்பதற்காக!
இன்னொரு உதாரணமும் பார்க்கலாம். யூதர்களும் கிறிஸ்துவர்களும் கடைகள் வைத்து வியாபாரம் செய்யலாம். ஆனால் அந்தக் கடைகள் முஸ்லிம்களுடைய கடைகளைக் காட்டிலும் உயரத்திலோ, அகலத்திலோ, பரப்பளவிலோ பெரிதாக இருக்கக்கூடாது. எந்த ஒரு யூதரின் வீடும் அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டைக்காட்டிலும் பெரிதாக இருந்துவிடக்கூடாது.
திம்மிகளின் நிலங்களுக்குக் கூடுதல் வரி அவசியம் வசூலிக்கப்படும். வரிக்குறைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வரி வசூலிப்பவர் சொல்லும் தொகையைக் கேள்வி கேட்காமல் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். வரி கொடுக்காவிட்டால் ஊரை காலி செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் இரண்டாம் உமர் காலத்தில் அமுலில் இருந்த இந்தச் சட்டங்களைச் சுட்டிக்காட்டும் யூத சரித்திர ஆசிரியர்கள், ஐரோப்பிய தேசங்களில் யூதர்கள் பட்டுக்கொண்டிருந்த சிரமங்களுடன் ஒப்பிடுகையில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை; கலீஃபாக்கள் கருணையுள்ளவர்களே என்று குறிப்பிடுகிறார்கள்.
கலீஃபாக்களாவது, யூதர்கள் வீடு கட்டி வசிக்கலாம், வரிதான் கொஞ்சம் அதிகம் என்று வைத்தார்கள். ஐரோப்பாவில் யூதர்கள் அப்போது ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாது. யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் கடைகள் முஸ்லிம் கடைகளைக் காட்டிலும் பெரிதாக இருக்கக்கூடாது என்றுதான் பாலஸ்தீனில் சட்டம் இருந்தது.
பல ஐரோப்பிய தேசங்களில் யூதர்கள் வியாபாரம் செய்வதையே தடை செய்திருந்தார்கள். ஆட்சியாளர்கள் வரும்போது யூதர்கள் தலைகுனிந்து வணங்கவேண்டும் என்பதே பாலஸ்தீன் சட்டம். ஐரோப்பிய தேசங்களில் அதிகாரிகளின் முன்னால் யூதர்கள் வரக்கூட அனுமதி கிடையாது.
இவற்றைச் சுட்டிக்காட்டும் யூத சரித்திர ஆசிரியர்கள், “கிறிஸ்துவ தேசங்களில் யூதர்கள் பட்ட சிரமம் அளவுக்கு கலீஃபாக்களின் ராஜ்ஜியத்தில் நிச்சயம் இல்லை” என்று சொல்கிறார்கள்.
யூத மத குருமார்களையும் முன்னாள் ராஜ வம்சத்தைச் சேர்ந்த யூதக் குடும்பங்களையும் மிகுந்த மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று இரண்டாம் உமர் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் தனியே யூத நீதி மன்றங்கள் அமைத்துக்கொள்ளவும் வரி வசூலிக்கவும்கூட உரிமைகள் இருந்திருக்கின்றன.
கி.பி. 762-ல் கலீஃபாக்களின் தலைநகரம் மெசபடோமியாவுக்கு (சரியாகச் சொல்வதென்றால் இன்றைய ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரம்) இடம் பெயர்ந்தபோது யூதச் சபைகளுக்கு இன்னும் கூடப் பல சௌகரியங்கள் செய்துதரப்பட்டிருக்கின்றன.
புராதன ஹீப்ரு மொழியில் உள்ள யூத மத நூல்களையும் மதச்சட்டங்கள் அடங்கிய பிரதிகளையும் எளிமையான மொழிக்கு மாற்றி, யூத சமூகம் முழுவதும் பயன்படுத்தும் விதத்தில் மறு உருவாக்கம் செய்வதற்காக யூத குருமார்கள் சபை சில பண்டிதர்களை நியமித்திருந்தது. அவர்கள் கடல்தாண்டிப் பல தேசங்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் ஆய்வுகள் செய்வதற்கும் வேண்டிய ஏற்பாடுகளை கலீஃபாவே முன்னின்று செய்துகொடுத்திருக்கிறார்.
இதுதவிர, யூதர்கள் இன்றளவும் தினசரி பிரார்த்தனைக்குப் பயன்படுத்தும் “சித்துர்” (Siddur) என்கிற புனிதப் பிரதி உருவாக்கத்துக்கும் (தோரா மற்றும் தால்மூத் பிரதிகளின் அடியற்றி இதனை உருவாக்கியவர் ரவ் அம்ரம் (Rav Amram) என்கிற ஒரு ரபி.) இஸ்லாமிய ஆட்சியாளர்கள் உதவி செய்திருக்கிறார்கள்.
ஒரு சில வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, கலீஃபாக்களுக்கு யூதர்களையும் “திம்மி”களின் பட்டியலில் சேர்க்கும் எண்ணம் ஆரம்பத்தில் இல்லை. குறிப்பாக கிறிஸ்துவர்களை மட்டுமே சிறப்புச் சட்டங்களுக்கு உட்படுத்த அவர்கள் நினைத்திருந்தார்கள் என்றும், யூதர்கள் தொடர்ந்து முகம்மது நபியின் மீது அவநம்பிக்கை தெரிவித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசி வந்ததன் விளைவாகத்தான் அவர்களுக்கும் மேற்சொன்ன சில சட்டதிட்டங்கள் திணிக்கப்பட்டதாகவும் எழுதுகிறார்கள்.
“தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் யூதர்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டே இருந்த நிலையில் இஸ்லாமிய கலீஃபாக்கள் அவர்களை பெருமளவு கௌரவத்துடன் நடத்தியதை கவனித்தால், யூதர்களின்மீது அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான விரோதம் இருந்ததேயில்லை என்பது புலனாகும்” என்கிறார் எச்.டபிள்யு. மொசே என்கிற ஒரு யூத சரித்திர ஆசிரியர்.
ஆனாலும் யூதர்களால் ஏன் பாலஸ்தீன் முஸ்லிம்களுடன் சுமுக உறவு பேண முடியவில்லை?
இந்தக் கேள்விதான் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் மையப்புள்ளி. யூதர்களால் முஸ்லிம்களுடன் மட்டுமல்ல; கிறிஸ்துவர்களுடனும் நல்லுறவு கொள்ள முடியவில்லை. நம்ப முடியாத அளவுக்குப் பெருகியிருந்த அவர்களது உயர்வு மனப்பான்மைதான் இதன் அடிப்படைக் காரணம்.
கடவுளுக்கு உகந்த இனம் தங்களுடையதுதான் என்கிற புராதன நம்பிக்கையின் வாசனையை இன்றளவும் தக்கவைத்துக்கொண்டு அதையே சுவாசித்துக் கொண்டிருப்பது இன்னொரு காரணம். தங்களது புத்திக்கூர்மை, தொழில் தேர்ச்சி, கல்வித்தேர்ச்சி, கலாசார பலம் போன்றவை அளிக்கும் தன்னம்பிக்கை மற்றொரு காரணம். தலைமுறை தலைமுறையாக, நூற்றாண்டு நூற்றாண்டாக இவற்றைக் கைவிட்டுவிடாமல் தொடர்ந்து அவர்கள் கடைப்பிடித்துவருவது எல்லாவற்றுக்கும் மேல் மிக முக்கியக் காரணம்!
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி – பத்தாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் யூதர்கள் தம்மைத் தனித்து அடையாளம் காட்டிக்கொள்ளும் விதத்தில் புதிதாக ஒரு வழக்கத்தை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். மஞ்சள் நிறத் தலைப்பாகை அணிவதுதான் அது! பாலஸ்தீனில் மட்டுமல்ல. யூதர்கள் எங்கெல்லாம் பரவியிருக்கிறார்களோ, அங்கெல்லாமும் அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் கண்டுகொள்ளலாம்.
தரையில் புரளும் அங்கி, மார்பு வரை நீண்ட தாடி, மஞ்சள் தலைப்பாகை. அதோ, அவர் ஒரு யூதர் என்று எத்தனை தூரத்திலிருந்தும் அடையாளம் கண்டு சொல்லிவிடமுடியும். மத குருக்கள்தான் என்றில்லை. சாதாரண மக்களும் இத்தலைப்பாகையை அணிய ஆரம்பித்தார்கள்.
(யூத மத குருமார்கள்தான் இத்தலைப்பாகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று ஒரு சில சரித்திர ஆசிரியர்களும், கி.பி. 996லிருந்து கி.பி. 1021 வரையில் ஆட்சி செய்த கலீஃபா அல் ஹக்கிம் என்பவரால் திணிக்கப்பட்ட அடையாளம் இதுவென்று இன்னும் சில ஆய்வாளர்களும் வேறு வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் யூதர்களைப் போலவே கிறிஸ்துவர்களும் நீல நிறத் தலைப்பாகை அணிந்ததைச் சுட்டிக்காட்டி, இது கலீஃபாவின் உத்தரவாக மட்டுமே இருக்கமுடியும் என்றும் சிலர் முடிவுக்கு வருகிறார்கள்.)
அதுநாள் வரை இல்லாதிருந்த ஒருவித தற்காப்பு உணர்வு மேலோங்கியவர்களாக அடிக்கடி சமூகக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்கள். பல சமயங்களில் இத்தகைய கூட்டங்கள் ரகசியமாக இரவு வேளைகளில் நடைபெற்றன. நிச்சயமாக யூதர்களுக்கு மீண்டும் ஒரு பேராபத்து வரப்போகிறது என்கிற செய்தி காட்டுத்தீ போல பாலஸ்தீன் முழுவதும் பரவியிருந்தது.
இதற்குக் காரணம், அப்போது ஆண்டுகொண்டிருந்த கலீஃபா அல் ஹக்கீம், பாலஸ்தீனிலும் எகிப்திலும் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். அவரது காலத்தில் பாலஸ்தீனில் இருந்த யூத, கிறிஸ்துவ தேவாலயங்கள் பல திடீர் திடீரென்று இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. “திம்மி”களுக்கான சிறப்பு வரிகள் தாங்கமுடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டன.
இந்த வரிவிதிப்பைத் தாங்கமுடியாத எளிய மக்கள் பலர் வேறு வழியின்றி சொந்த நிலங்களை விட்டுவிட்டுக் கிளம்பவேண்டி வந்தது. வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து, சிறு வர்த்தகங்கள் செய்து பிழைக்க வேண்டியதானது. பெரும்பாலும் ஆடுகள் மற்றும் ஒட்டகங்களின் தோல்களைப் பதப்படுத்தி, தோல் பொருட்கள் செய்து விற்று வந்தார்கள்.
வாழ்வதற்குப் பிரச்னை இல்லை. ஆனால் சொந்த நிலம் வைத்துக்கொள்வதுதான் கஷ்டம் என்று ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய தேசங்களில் படும் அவஸ்தைகளை பாலஸ்தீனிலும் பட வேண்டிவருமோ என்று யூதர்கள் அச்சப்பட்டார்கள். ஆனால் நிலைமை அத்தனை மோசமடைந்துவிடவில்லை.
ஆசியாவின் எல்லையைக் கடந்து ஐரோப்பாவில் குறிப்பாக அப்போதுதான் ஸ்பெயினில் இஸ்லாம் காலூன்றியிருந்தது. ஸ்பெயினின் ஆட்சிப்பீடத்தில் இஸ்லாமியர் ஏறியபோது யூதர்கள் விரோதிகளாக அல்லாமல், நண்பர்களாகவே நடத்தப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் ராணுவக் குழுவின் தளபதியாக, தகுதி அடிப்படையில் ஒரு யூதரே நியமிக்கப்படும் அளவுக்கு நல்லுறவு பேணப்பட்டது.
இதைத்தான் பொற்காலம் என்று சொன்னார்கள். ஆனால் பொதுவாக, பொற்காலம் என்பது வெகுகாலம் நீடிக்கிற வழக்கம் எங்குமே இருந்ததில்லை.