கர்நாடக மாநிலத்தில் உள்ள வேலைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அம்மாநில அரசு கொண்டு வந்த சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இது சாத்தியமா?
கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் சட்டம் ஒன்றுக்கு ஜூலை 15ஆம் தேதி கர்நாடக மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகளிலும் பிற நிறுவனங்களிலும் நிர்வாகப் பதவிகளில் 50 சதவீதத்தையும் மற்ற வேலைகளில் 70 சதவீதப் பணியிடங்களையும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். அடுத்த வாரம் கூடவிருந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவிருந்தது.
ஆனால், இந்தச் சட்டத்திற்கு தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரிடம் இருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து சட்டத்தை மறு பரிசீலனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.
“இந்த மசோதா இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று சித்தராமைய்யா கூறியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், “இந்த மசோதா திரும்பப் பெறப்படவில்லை. இந்த மசோதாவின் சில அம்சங்கள் மட்டுமே மறுபரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
சித்தராமையா இதற்கு முன்பாக முதலமைச்சராக இருந்தபோது, 2016லும் இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.
அப்போது தனியார் துறையில் C & D பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் கன்னடர்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும் என அந்தச் சட்டம் கூறியது. ஆனால், இது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 16ஐ மீறுவதாகக் கூறி நிறுத்தி வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?
சர்ச்சைக்கு உள்ளான இந்தச் சட்டத்தின் பெயர் ‘தொழில்துறை, தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கர்நாடக மாநில சட்டம், 2024’ (The Karnataka State Employment of Local Candidates in the Industries, Factories and Other Establishments Bill, 2024).
இந்தச் சட்டத்தின்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகள், மேலாண்மைப் பதவிகள் போன்ற உயர் பதவிகளில் 50 சதவீதம் உள்ளூர்வாசிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
நிர்வாகமல்லாத பணிகளில், அதாவது எழுத்தர் வேலைகள், திறன் தேவைப்படாத வேலைகள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவை நிறுவனங்களில் உள்ள பணிகள், ஒப்பந்த ஊழியர்கள் பணியிடங்கள் ஆகியவற்றில் 75 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகளாக இருக்க வேண்டும்.
அதேபோல, தனியார் துறையில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணிகளில் 100 சதவீத பணிகளையும் உள்ளூர் மக்களுக்கே அளிக்க வேண்டும்.
உள்ளூர்வாசி என்பவர் கர்நாடக மாநிலத்தில் 15 ஆண்டுகள் வசித்தவராகவும் கன்னட மொழியில் பேசவும் எழுவதும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கென உள்ள முகமை நடத்தும் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளியில் கன்னடம் படிக்காதவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டும்.
உள்ளூர்வாசிகள் கிடைக்காதபோது, இந்தச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கும்படி அரசுக்கு அந்த நிறுவனம் விண்ணப்பிக்கலாம். அரசு ஒரு விசாரணை நடத்திய பிறகு இது தொடர்பாக உரிய ஆணைகளைப் பிறப்பிக்கும்.
விதிவிலக்கு கிடைத்தாலும்கூட, நிர்வாகப் பதவிகளில் 25 சதவீதமும் நிர்வாகமல்லாத பணிகளில் 50 சதவீதமும் உள்ளூர்வாசிகளைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள் 10,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
ஒரு தொழில்துறைக்கோ, தொழிற்சாலைக்கோ சரியான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கவில்லையெனில் அரசு அமைப்புகளுடன் இணைந்து, உள்ளூர்வாசிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணியில் சேர்க்கலாம். மூன்று ஆண்டுகளுக்குள் இதைச் செய்ய வேண்டும்.
தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு
இந்தச் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகள், மேலாண்மைப் பதவிகள் போன்ற உயர் பதவிகளில் 50% உள்ளூர்வாசிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
இந்தச் சட்டம் குறித்து தொழில்துறையினர் பல்வேறு விதமான கவலைகளையும் ஏமாற்றத்தையும் பதிவு செய்தனர்.
இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்காக பெங்களூரு நகரை உயர்த்த அந்நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலை இந்தச் சட்டம் அழித்துவிடக்கூடாது எனப் பலர் குறிப்பிட்டனர்.
பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜூம்தார் ஷா, இந்த நடவடிக்கையால், தொழில்நுட்பத் துறையில் நம்முடைய முன்னணி இடத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது எனப் பதிவிட்டார்.
இந்தச் சட்டம் குறித்து தொழில்துறையினர் பல்வேறு விதமான கவலைகளையும் ஏமாற்றத்தையும் பதிவு செய்தனர்.
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான ‘நாஸ்காம்’, இந்த நடவடிக்கை குறித்து ஏமாற்றத்தையும் கவலையையும் பதிவு செய்தது. மாநில அரசு அதிகாரிகளுடன் தொழில்துறை பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை நடத்தவும் கோரிக்கை விடுத்தது.
வேலையின்மை பிரச்னையைச் சமாளிக்க அரசு குறுக்கு வழியை நாடுவதாக பிபிசியிடம் தெரிவித்தார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான வி. பாலகிருஷ்ணன்.
“இந்தியாவிலும் சரி, இந்த மாநிலத்திலும் சரி வேலைவாய்ப்புகள் தொடர்பாகத் தீவிரமான சிக்கல் இருக்கிறது.
நாம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. ஆனால், உள்ளூர் மக்களுக்கென இட ஒதுக்கீட்டை ஏற்படுத்துவது அரசுக்கு எளிதாக இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்ற அடிப்படைப் பிரச்னையை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அரசு குறுக்குவழியை நாடுகிறது” என்கிறார் வி. பாலகிருஷ்ணன்.
பெங்களூருவின் ஐடி துறையில் 40 சதவீதப் பணியாளர்கள் “மாநிலத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்.
இங்கே சூழல் சிறப்பாக இருப்பதாலும் இரவு வாழ்க்கை நன்றாக இருப்பதாலும் தொழில்துறை வெளியில் இருந்து ஆட்களை ஈர்க்கிறது. இந்தச் சூழலை அழித்துவிட்டால் இதை மீண்டும் உருவாக்குவது கடினம்” என்கிறார் அவர்.
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான ‘நாஸ்காம்’, இந்த நடவடிக்கை குறித்து ஏமாற்றத்தையும் கவலையையும் பதிவு செய்தது.
தாங்கள் கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்க நினைத்தாலும் அதற்கான ஆட்கள் எங்கே இருக்கிறார்கள் எனக் கேள்வியெழுப்புகிறார் கர்நாடக சிறு தொழிற்சாலைகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான சி.கே. பத்மநாபா.
“நாங்கள் கன்னடர்களுக்கே 70 சதவீத பணிகளைத் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
8 மணிநேர வேலைக்கு நம் ஆட்கள் வருவதில்லை. இந்தத் துறையில் கடின உழைப்பு தேவைப்படும். ஆனால், சில காரணங்களால் அவர்கள் சேவைத் துறைக்கே செல்ல விரும்புகிறார்கள்” என்கிறார்.
சிறுதொழில் கூடங்களில் உதவியாளர்களாக வேலை பார்க்கக்கூட பிற மாநிலங்களில் இருந்து ஆட்கள் பெங்களூருவுக்கு வருகிறார்கள் என்கிறார் பத்மநாபா.
ஆனால், இந்தச் சட்டம் சரியானதுதான் என பிபிசியிடம் தெரிவித்தார் தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட்.
“இது பணிகளில் இட ஒதுக்கீடு அளிப்பதல்ல. இது ஓர் உறுதியளிக்கும் திட்டம். 70% பேர் கன்னடர்களாக இருப்பது கட்டாயம் எனச் சொல்லவில்லை. 70 சதவீதம் கொடுப்பது சாத்தியமில்லையென்றால் 20 சதவீதமாவது கொடுங்கள் என்கிறோம். இளைஞர்களிடம் பெரும் விரக்தி இருக்கிறது. நம் இளைஞர்களைக் காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருக்கிறது” என்கிறார் சந்தோஷ்.
ஒரு தொழிலதிபர் கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்யும்போது “பிகாரில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும்தான் ஆட்களை எடுப்போம் என்று சொல்வதில்லை.
ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறதென்றால் அந்த நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி, உள்ளூர் ஆட்களைச் சேர்க்காமல் தன்னுடைய மாநிலத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து வருகிறார்” என்கிறார் சந்தோஷ் லாட்.
வேலைவாய்ப்பை வழங்கத் தேவையான திறன் மிகுந்த பணியாளர்கள் மாநிலத்தில் இல்லை என்ற விமர்சனம் சரியானதில்லை என்கிறார் சந்தோஷ்.
“தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மாநில அரசை அணுகி, இந்தத் திறமை கொண்டவர்களை உருவாக்க வேண்டுமெனச் சொன்னதுண்டா, தேவைப்படும் திறன்களைக் கொண்ட ஆட்களை உருவாக்குவது அவர்களுடைய தார்மீகக் கடமையில்லையா?
இங்கே மிகப்பெரிய நேச்சுரோபதி இன்ஸ்டிடியூட் இருக்கிறது. அதில் 2,500 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் வேலை பார்க்க 20 பேர் எங்கள் மாநிலத்தில் இருந்து கிடைக்கவில்லையா? தயவு செய்து சொல்லுங்கள்” என்கிறார் சந்தோஷ்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்காக பெங்களூரு நகரை உயர்த்த அந்நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலை இந்தச் சட்டம் அழித்துவிடக்கூடாது எனப் பலர் குறிப்பிட்டனர்.
வேறு மாநில அரசுகள் இதுபோன்ற சட்டத்தை உருவாக்கியபோது அவை உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் கர்நாடக மாநில முன்னாள் அட்வகேட் ஜெனரலான அஷோக் கர்ணஹல்லி.
பிபிசியிடம் பேசிய அவர், “2020இல் ஹரியாணா அரசு இதேபோன்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.
ஆனால், அந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19ஐ மீறுவதால் அந்தச் சட்டம் ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றங்களால் செல்லாது என அறிவிக்கப்பட்டது. தொழில் செய்வதற்கான உரிமையை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது” என்கிறார் அஷோக்.
கடந்த 1984ஆம் ஆண்டின் தீர்ப்பு ஒன்றையும் அஷோக் சுட்டிக்காட்டுகிறார். டாக்டர் பிரதீப் vs இந்திய அரசு என்ற அந்த வழக்கில் “அரசியலமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதை, இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று மட்டுமே பொருள்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டது.
முன்னாள் அரசு வழக்கறிஞரான பிடி வெங்கடேஷ் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது என்கிறார்.
“முழுக்க முழுக்க இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. சிலரது பிடிவாதத்திற்காக இதைக் கொண்டு வருகிறார்கள்.
இது நடந்தால், இந்தியா ஒரு நாடாகவே இயங்க முடியாது. கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டுமென மாநில அரசு சொல்ல முடியாது. மாறாக, எல்லோரையும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்க வேண்டும் எனச் சொல்லலாம்” என்கிறார் அவர்.
பெங்களூரு என்பது ஒரு குட்டி இந்தியா. இந்தச் சட்டம் பெங்களூருவின் பணிச் சூழலையே ஆட்டம் காணச் செய்துவிடும் என்கிறார் பிராண்ட் நிபுணரான ஹரீஷ் பிஜூர்.
“இங்கே எல்லா இடங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகிறார்கள். எல்லாவிதமான மொழிகள், கலாசாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடை-உடை பாவனைகளைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நாம் ஒரு குட்டி இந்தியா. பெங்களூருவில் உள்ள பணி மற்றும் தொழில் சூழலையே இந்தச் சட்டம் ஆட்டம் காணச் செய்துவிடும்” என்கிறார் ஹரீஷ்.
தமிழ்நாட்டிலும் கோரிக்கை
இங்கே சூழல் சிறப்பாக இருப்பதாலும் இரவு வாழ்க்கை நன்றாக இருப்பதாலும் தொழில்துறை வெளியில் இருந்து ஆட்களை ஈர்க்கிறது.
தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல மாநிலங்களில் இதற்கு முன்பாக எழுந்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பலமுறை இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.
தமிழ் தேசியவாதிகள் பல தருணங்களில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் தற்போதய ஆளும் கட்சியான தி.மு.கவும் தனது 2021ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் இது தொடர்பாக வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளது.
அதில், “தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியும்கூட பல தருணங்களில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 80% வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்குவதற்கான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரியக்கம் நீண்ட காலமாகவே இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் வேலைகளில் 90 சதவீத வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென அந்த அமைப்பு கோரி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு மற்றும் தனியார் பணிகளில் 80 சதவீத இடங்களை தமிழர்களுக்கே அளிக்க சட்டம் நிறைவேற்ற வேண்டுமெனப் பலமுறை கூறியிருக்கிறார்.
இதுதவிர, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணிகளில் வேறு மாநிலத்தவரை பணிக்கு எடுப்பது குறித்துப் பல அரசியல் கட்சிகளும் சுட்டிக்காட்டி, அந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியிருக்கின்றன.
இந்தத் தருணத்திலாவது தமிழ்நாடு அரசு அதுபோன்ற ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்கிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் அருணபாரதி.
“கர்நாடக அரசு இப்போது இதுபோல ஒரு சட்டத்தை உருவாக்கி இருந்தாலும், நீண்ட நாட்களாகவே இந்தத் திசையில் பயணம் செய்தது.
1986லேயே கன்னட மொழி, கன்னட மக்களின் மேம்பாடு குறித்து ஆராய ஒரு கமிஷனை அமைத்தது. அந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளின் பேரில், கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள வேலைகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அதுபோல ஒரு பரிந்துரைதான். இந்தியாவின் பல மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் வெவ்வேறு விதங்களில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படியில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தனது தேர்தல் அறிக்கையில் இதை ஒரு வாக்குறுதியாக அளித்தது.
ஆனால், இப்போதுவரை அதை நடைமுறைப் படுத்தவில்லை. இந்தத் தருணத்திலாவது அதைச் செய்ய வேண்டும். உடனடியாக இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்” என்கிறார் அருணபாரதி.
ஆனால், இதுபோன்ற சட்டத்திற்கான முயற்சிகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் சேர்வதாக புகார்கள் எழுந்த நிலையில், தமிழ் தெரிந்தவர்களை மட்டும் பணியில் சேர்க்கும் வகையில் ஓஓர் அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கிறது.
அதன்படி தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
10ஆம் வகுப்பு தரத்தில் உள்ள தமிழ்த் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே அரசுப் பணிகளில் தகுதிபெற முடியும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் தமிழ் தெரியாதவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்வது தடுக்கப்பட்டது.
பிபிசி தமிழ்