தமிழகத்தில் சில கிராமங்களில் இந்துக்களும் மொஹரம் தினத்தை அனுசரித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன?
இஸ்லாமிய நாள்காட்டியின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை, மொஹரம் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
குறிப்பாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் தற்போது இராக்கில் உள்ள கர்பாலாவில் கி.பி. 680-ஆம் ஆண்டு முகம்மது நபியின் பேரனான ஹுசைன் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூறும் நாளாக மொஹரத்தை கடைபிடிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 17) முஸ்லிம் சமூகத்தினரால் மொஹரம் அனுசரிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணைந்து மொஹரம் தின வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர்.
இரு மத கலாசாரமும் இணையும் விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொஹரம் தின வழிபாடு புதன்கிழமையன்று நடைபெற்றது.
”எங்கள் கிராமத்தில் ‘நாகூர் ஆண்டவர்- அல்லா சாமி’ கூடம் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் மொஹரம் மாதத்தில் மட்டுமே இங்கு 10 நாட்களுக்கு வழிபாடு செய்வோம்” என்கிறார் வஞ்சினிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்.
”எனக்கு விவரம் தெரிந்தது முதல் மொஹரம் வழிபாட்டைப் பார்த்து வருகிறேன். முன்பு இங்கு முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர். இப்போது மிகவும் குறைவான முஸ்லிம்களே வாழ்கின்றனர்.”
”இருந்தபோதிலும் முஸ்லிம்-இந்துக்கள் இடையே இருந்த நல்லிணக்கத்தைப் பறைச்சாற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மொஹரம் தின வழிபாட்டை கிராமத்தில் பொதுவாக நடத்துகிறோம்” என்கிறார் 43 வயதான ரமேஷ்.
காலம் காலமாக இந்துக்களின் கலாசாரமும், முஸ்லிம்களின் கலாசாரமும் இணையும் ஒன்றாக இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாகக் கூறுகிறார் ரமேஷ்.
“எங்கள் கிராமத்தில் இந்துக்களே பெரும்பான்மையாக உள்ளனர். முஸ்லிம் குடும்பங்கள் நான்கு மட்டுமே. மொஹரத்தின்போது மட்டும் வெளியூரில் வசிக்கும் 50 முஸ்லிம்கள் கிராமத்திற்கு வருவார்கள்,” என்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா.
“இந்த வழிபாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து- முஸ்லிம் சமூகத்தினர் இணைந்தே செய்து வருகிறோம்” என்கிறார் அவர்.
”மொஹரம் அனுசரிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் 10 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டுதலுடன் தொடங்கும்.
மொஹரத்திற்கு முந்தைய நாள் இரவு, ‘பஞ்சா’ எனப்படும் உள்ளங்கை உருவங்கள் கொண்ட பல்லக்கை ஊர் முழுக்க வீதி உலா கொண்டு செல்வோம். உள்ளங்கை உருவத்தை ‘அல்லா சாமி’யாக நாங்கள் கருதுகிறோம்.
பிறகு கிராமத்தில் அமைக்கப்பட்ட பூக்குழியை 3 முறை பல்லக்கு சுற்றி வரும். அதன் பிறகு பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்குவார்கள்,” என்கிறார் சுப்பையா.
”ஊர்வலத்திற்கு முன்பு அல்லா சாமி கூடத்தில் வைக்கப்படும் பஞ்சாவை மக்கள் வழிபாடு செய்வார்கள். ஊர்வலத்தின்போது மல்லிகைப் பூ, சர்க்கரை, பச்சைத் துண்டு ஆகியவற்றை வழங்கி கிராம மக்கள் வழிபாடு செய்வார்கள்” என்றார் அவர்
தமிழ்நாடு: மொஹரம் தினத்தில் அல்லாவுக்கு தீ மிதித்த இந்துக்கள், பிரசாதம் வழங்கிய முஸ்லிம்கள்
தீக்குண்டத்தில் இறங்கும் ஆண்கள், இரு கைகளால் நெருப்பை அள்ளி வாரி இறைக்கின்றனர். பெண்கள் தங்களது மடியில் நெருப்பை வாங்கிக்கொண்டு கீழே கொட்டுகின்றனர்.
இறுதியாக, அதிகாலையில் தீக்குண்டத்தில் உள்ள சாம்பலைப் பிரசாதமாக இந்துக்களுக்கு முஸ்லிம்கள் பூசிவிடும் நிகழ்ச்சியும் நடைபெறும் என சுப்பையா கூறுகிறார்.
’’வழிபாடு முடிந்த பிறகு அன்று மாலை பல்லக்கில் இருந்து பஞ்சா பிரிக்கப்பட்டு, அல்லா சாமி கூடத்தில் வைக்கப்படும். மொஹரம் அனுசரிக்கப்படும்போது மட்டுமே அல்லா சாமி கூடம் திறக்கப்படும்.
மற்ற நாட்களில் அங்கு எதுவும் நிகழாது. மொஹரத்தின்போது பாத்தியா ஒதும் பணியை முஸ்லிம்கள் செய்வார்கள். மற்றப்படி முஸ்லிம்களுடன் பல்லக்கு துக்குவது, வேண்டுதலுக்காக பூக்குழியில் இறங்குவது போன்ற அனைத்திலும் இந்துக்கள் பங்கேற்கின்றனர்’’ என்கிறார் சுப்பையா
இந்து – முஸ்லிம்கள் இணைந்து மொஹரத்தை அனுசரிக்கும் சில கிராமங்களில் தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடுபுதூா் கிராமமும் ஒன்று.
மொஹரம் தினத்தன்று காலை, பஞ்சா எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டை முழங்கக் கொண்டு செல்லப்பட்டது என்கிறார் காசவளநாடுபுதூா் கிராமத்தில் வசிக்கும் சிங்காரவேலு.
”ஊர்வலமாக வரும் அல்லா சாமிக்கு மக்கள் தண்ணீா் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாற்றி வழிபடுவார்கள்.
பின்னர், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் இறங்கி வழிபடுவோம். மக்களுக்குத் திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்படும். பிரசாதம் வழங்குவதைக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் செய்வார்கள்’’ என்கிறார் சிங்காரவேலு.
“எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் மொஹரத்தின் போது பிறந்த வீட்டுக்கு வந்து பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.
மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், கிராம நிகழ்வாக ஆண்டுதோறும் இதைக் கடைபிடித்து வருகிறோம்,” என்கிறார் சிங்காரவேலு.
இந்த வழிபாடு எப்படித் தொடங்கியது?
இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து மொஹரம் தினத்தை அனுசரிப்பது ஏன்? இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது?
“இதுகுறித்து அப்பகுதி மக்கள் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. சுமார் 300 ஆண்டுகளாக இந்த நிகழ்வுகள் நடந்து வருவதாக வாய்வழிப் பேச்சுகளின் மூலம் கிராமங்களில் சொல்லப்படுகிறது.
ஆனால், இதுகுறித்துத் தெளிவான ஆராய்ச்சியோ ஆவணங்களோ இல்லை,” என்கிறார் என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் புலவர் காளிராசா.
தமிழ்நாடு: மொஹரம் தினத்தில் அல்லாவுக்கு தீ மிதித்த இந்துக்கள், பிரசாதம் வழங்கிய முஸ்லிம்கள்
”தியாகம், ஏமாற்றம் போன்றவை, மதத்தைத் தாண்டி மக்கள் தங்களது மனத்துக்குள் இணைத்துக்கொள்ளும் விஷயமாக உள்ளது.
நெருப்புக் குண்டத்தில் இறங்குவது இந்துக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, சில பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் கடைபிடிக்கப்படுகிறது,” என்கிறார் வரலாற்று எழுத்தாளர் கோம்பை அன்வர்.
மேலும், தமிழகத்தில் இந்து – முஸ்லிம்கள் இடையே பல விஷயங்களில் இத்தகைய ஒற்றுமையைக் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.