போஸ்னியா தெரியும் இல்லையா? மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு இது. இந்த நாட்டை ஆஸ்திரியா-ஹங்கேரி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
அதாவது ஆஸ்திரியா – ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது போஸ்னியா.
நான்கு பிரபல சாம்ராஜ்ஜியங்களை அழித்தது. அமெரிக்காவைப் பெரும் சக்தியாக உருவெடுக்க வைத்தது. ஐரோப்பாவின் வரைபடத்தை நிரந்தரமாக மாற்றியமைத்தது. போரில் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அபாயகரமானது என்பதை உணர வைத்தது. முதலாம் உலகப் போர்!
இதில் எதிரிகள் திட்டமிட்டு இரு அணிகளாகப் பிரிந்து போர்க்களத்தில் சந்திக்கவில்லை. ‘எங்கோ ஒரு பட்டாம்பூச்சி சிறகை அடித்தால் அதன் விளைவு உலகின் வேறிடத்தில் புயல் உருவாகக் காரணமாகலாம்’ எனப்படும் பட்டாம்பூச்சி விளைவு போல எங்கோ தொடங்கிய ஒரு நிகழ்வு ஒட்டுமொத்தமாக உலகின் பல நாடுகளைச் சிக்க வைத்தது. சின்னா பின்னப்படுத்தியது.
முதலாம் உலகப்போர்
முதலாம் உலகப் போர் என்பது ஏதோ ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற யுத்தம். நமக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று யாரும் எண்ணிவிடக் கூடாது.
இந்திய ராணுவம் பிரிட்டனுக்குப் பக்கபலமாக இருந்து ஜெர்மனி அணிக்கு எதிராகப் போரிட்டது. சுமார் 10 லட்சம் ராணுவ வீரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
குறைந்தது 70,000 இந்திய வீரர்கள் இந்தப் போரில் இறந்தார்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஒருவிதத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியா சுதந்திரம் பெற்றதற்குக் கூட முதலாம் உலகப் போர் ஒரு காரணமாக அமைந்தது எனலாம்.
இவை குறித்துத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலாம் உலகப் போர் தோன்றிய விதம், அதில் ஒவ்வொரு நாடாக அணிவகுத்த பின்னணி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்தெந்த கட்டங்களில் எப்படி இந்தியா போரில் பங்கு கொண்டது என்பதை அறிய முடியும்.
தன் காதல் மனைவியுடன் ஒரு டூர் சென்று வரலாம் என்று தீர்மானித்தார் ஆஸ்திரிய நாட்டு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்ட். தேன் நிலவு என்பது உலகத்தில் நடப்பதுதான். தப்பேயில்லை. ஆனால் அவர் தன் உலாவுக்குத் தேர்ந்தெடுத்த இடம்தான் சரியில்லை. அது போஸ்னியா!
போஸ்னியா தெரியும் இல்லையா? மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு இது. இந்த நாட்டை ஆஸ்திரியா – ஹங்கேரி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. அதாவது ஆஸ்திரியா – ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது போஸ்னியா.
ஆஸ்திரியா – ஹங்கேரி
1867ல் உருவான விசித்திர சாம்ராஜ்யம் இது. ஆஸ்திரியா – ஹங்கேரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட இதில் இந்த இரு நாடுகளைத் தவிர ஸ்லாவாகியா, செக் குடியரசு, ரொமேனியா, ஸ்லோவேனியா, க்ரோவேஷியா, போஸ்னியா ஆகியவற்றுடன் இன்றைய போலந்து, உக்ரைனன், ரோமெனியா, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக விளங்கியது. இந்த ‘நாடு’ 5 கோடி மக்களைக் கொண்டது.
ஆக தங்கள் நாட்டின் மற்றொரு பகுதிக்குத்தான் தேன் நிலவு செல்லத் தீர்மானித்திருந்தார் ஆஸ்திரிய இளவரசர். அதாவது வட மேற்குப் பகுதியிலிருந்து தென் கோடிக்கு.
“வேண்டாம். போஸ்னியாவுக்குப் போகாதீர்கள். ரொம்ப அபாயம்” என்று இளவரசரை எச்சரித்தார்கள் சிலர். ரிஸ்க் எடுக்கிறோம் என்பது இளவரசருக்கும் நன்றாகத் தெரியும். என்றாலும் தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
என்ன ரிஸ்க் என்கிறீர்களா? ஆஸ்திரியா – ஹங்கேரி நாட்டின் ஒரு பகுதியாக இருந்த போஸ்னியாவில் உள்ள மக்களில் நிறையப் பேருக்கு – முக்கியமாக செர்ப்பியப் பிரிவினருக்கு – அந்த நாட்டின் ஒரு பகுதியாக போஸ்னியா இருப்பது பிடிக்கவில்லை.
போஸ்னியா சுதந்திரம் பெற வேண்டும். அது பக்கத்திலுள்ள செர்பியாவோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை.
செர்பியாவில் அப்போது ‘கறுப்புக் கை’ என்ற ஒரு இயக்கம் இருந்தது. கறுப்புக் கை என்பது செல்லப் பெயர்தான்.
நிஜப்பெயர் மேலும் பயங்கரமானது. ஒன்றிணைப்பு அல்லது இறப்பு (Union or Death) என்பதுதான் அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பெயர்.
செர்பியாவை மேலும் மேலும் விரிவாக்க வேண்டும். அதில் போஸ்னியாவையும் சேர்க்க வேண்டும் என்பது அந்த இயக்கத்தின் ஆசை.
ஆனால் இந்த இணைப்புக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது ஆஸ்திரியா – ஹங்கேரி. தனது பரப்பின் ஒரு பகுதியை இழக்க அது சிறிதும் தயாராக இல்லை. ஆகவே ஆஸ்திரியாவைத் தங்கள் எதிரியாக நினைத்தார்கள் கறுப்புக் கை இயக்கத்தினர்.
ஆஸ்திரிய நாட்டு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்ட்
கறுப்புக் கை இயக்கத்தில் அப்போது 2,500 உறுப்பினர்கள் இருந்தார்கள். ராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல, வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரும் இதில் உண்டு. இவர்களில் சிலர் போஸ்னியாவில் வசித்தவர்கள்.
1911ல் பிரான்ஸ் ஜோசப் எனும் ஆஸ்திரிய சக்ரவர்த்தியைக் கொலை செய்ய ஒருவரை அனுப்பினார் கறுப்புக் கை இயக்கத்தின் தலைவர். சில வருடங்களுக்குப் பிறகு போஸ்னியா – ஹெர்செகோவ் மாகாணங்களின் ஆஸ்திரியாவின் கவர்னரைக் கொலை செய்யவும் ஒரு சதி செய்தார்கள். இரண்டிலும் தோல்வி.
இப்போது ஆஸ்திரிய இளவரசர் போஸ்னியாவுக்கு வரப்போகிறார் என்றதும் “கறுப்புக் கை”யின் தளபதிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
போஸ்னியாவுக்குள் அடியெடுத்து வைக்கும் இளவரசரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. போஸ்னியாவும் செர்பியாவும் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த அந்த இளவரசர் அடுத்ததாக அரசர் பதவிக்கும் வந்துவிட்டால் என்னாவது? ஆரம்பத்திலேயே இந்த சிக்கலைக் கிள்ளி எறிவது நல்லதுதானே!
கறுப்புக் கை இயக்கத்தின் உறுப்பினர்கள்
கறுப்புக் கை இயக்கத்தின் தலைவராக அப்போது விளங்கியவர் ட்ரகுடின் டிமிட்ரேஜேமிக். பெயர் மட்டுமல்ல, ஆளும் கரடுமுரடுதான். இவர் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி, இரண்டு வெடிகுண்டுகள் மற்றும் ஒரு சிறு சயனைடு குப்பி ஆகியவை வழங்கப்பட்டன.
சயனைடு குப்பி எதற்காக? இளவரசரைத் தீர்த்துக்கட்டியவுடன் குப்பியில் உள்ள சயனைடைக் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்காக! அப்போதுதானே கறுப்புக் கை இல்தில் சம்பந்தப்பட்டிருப்பது யாருக்கும் தெரியாமல் போகும்.
தன்னுடைய உயிரை இழப்பதற்கு யாராவது சம்மதிப்பார்களா? மாட்டார்கள்தான். ஆனால் வெளிநாட்டுச் சக்தியான ஆஸ்திரியாவை எப்படியாவது துரத்த வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு. அதுமட்டுமல்ல. அவர்கள் மூவருக்கும் தீவிரமான காசநோய். எப்படியும் அதிக நாள் வாழமுடியாது. அதற்குள் நாட்டுக்கு ஒரு `நல்லது’ செய்துவிட்டுப்போவோமே என்று நினைத்தார்கள் அவர்கள்.
– போர் மூளும்
-ஜி.எஸ்.எஸ்.-