ஏமனில் ஹூத்தி குழு மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் – மூன்று பேர் உயிரிழப்பு

 

செங்கடல் பகுதியில் ஏமனின் ஹொடெய்டா நகரில் ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹூத்தி கிளர்ச்சி குழு ட்ரோன் தாக்குதல் நடத்திய மறுநாளே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹூத்தி இயக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார்.

“ஹொடெய்டாவில் இப்போது பற்றி எரியும் தீ, மத்திய கிழக்கு முழுவதும் காணப்படுகிறது, அதன் முக்கியத்துவம் இப்போது தெளிவாக உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேருக்கு மேல் காயமடைந்ததாகவும் ஹூத்தி தொடர்புடைய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

இஸ்ரேல் கூறியது என்ன?

ஹூத்தி அதிகாரி முகமது அப்துல்சலாம், “ஏமனுக்கு எதிரான இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல் இது” என கண்டித்துள்ளார்.

காஸாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என, ஹூத்தி குழுவினருக்கு அழுத்தம் தருவதே இந்த தாக்குதலின் நோக்கம் என தெரிவித்த அவர், ஆனால் அது நடக்காது என்றும் கூறினார்.

சமீப மாதங்களில் ஏமனிலிருந்து நூற்றுக்கணக்கான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் இலக்கு வைக்கப்படுவதாக அந்நாடு கூறிவந்த நிலையில், முதன்முறையாக நேரடியாக எதிர்வினையாற்றியுள்ளது.

சனிக்கிழமை மாலை பெருமளவில் தீ பற்றி எரிவதை ஹொடெய்டா துறைமுகத்தில் இருந்து வரும் வீடியோக்கள் காட்டுகின்றன.

சனா நகரில் இருந்து இயங்கும் ஹூத்தி அரசாங்கம், கடற்கரைக்கு நெருக்கமாக உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீதும், அருகிலுள்ள மின்நிலையம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், “ஏமனில் உள்ள ஹூத்தி குழுவினர் இஸ்ரேலில் கடந்த 9 மாதங்களாக நடத்தி வந்த வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து, ஹூத்தி பயங்கரவாத ராணுவ இலக்குகளுக்கு எதிராக, சுமார் 1,800 கி.மீ தொலைவில் உள்ள ஹொடெய்டா துறைமுக பகுதியில் இஸ்ரேலின் வான் படை போர் விமானங்கள் விரிவான தாக்குதலை நடத்தின” என தெரிவித்துள்ளது.

“தேவையான இடங்களில் எங்கு வேண்டுமானாலும் நடவடிக்கை எடுப்பதற்கும் இஸ்ரேலியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த படையின் மீதும் தாக்குதலை நிகழ்த்தவும் இஸ்ரேல் ராணுவ படைகளுக்கு திறன் உள்ளது,” என்றும், சனிக்கிழமை நடைபெற்ற நடவடிக்கைக்கு ‘அவுட்ஸ்ட்ரெச்டு ஆர்ம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ஏன்?

ஹூத்தி குழுவினர் இஸ்ரேலியர்களுக்கு தீங்கு விளைவித்ததால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் அக்குழுவை தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.

“சுமார் 200 முறை ஹூத்தி குழுவினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன், இஸ்ரேலிய குடிமகன் ஒருவரை ஹூத்தி குழு துன்புறுத்தியதால் நாங்கள் அவர்களை தாக்கினோம். இதுபோன்ற தாக்குதலை தேவைப்படும் எந்த இடத்திலும் நாங்கள் நடத்துவோம்,” என அவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பின் சனிக்கிழமை மாலை பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ இஸ்ரேல் தன்னை உறுதியாக பாதுகாத்துக் கொள்ளும்” என்றார்.

“எங்களை யார் துன்புறுத்தினாலும் அவர்கள் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்,” என்று கூறிய நெதன்யாகு, இரானிய ஆயுதங்களுக்கான நுழைவு வாயிலாக அந்த துறைமுகம் விளங்குவதாக கூறினார்.

இரானால் நீண்ட தூரத்திற்கு பறந்து செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் டெல் அவிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக கூறிய ஹூத்தி குழு, மேலும் அதிக தாக்குதல்களை நடத்தப் போவதாக எச்சரித்தது.

பெலாரஸில் இருந்து சமீபத்தில் இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்த 50 வயதான நபர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர்.

ஒரு ட்ரோன் வந்துகொண்டிருந்ததை தங்களின் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்ததாகவும் ஆனால், “மனித தவறால்” அதை சுட்டு வீழ்த்த முடியவில்லை எனவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் நோக்கி வந்த அனைத்து ஹூத்தி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதால், அவற்றில் எதுவும் டெல் அவிவ் நகரை அடையவில்லை என்று அவர் கூறினார்.

இந்த வான்வழி தாக்குதல்களுக்கு “திறம்பட பதிலடி கொடுக்கப்படும்” என்று ஹூத்தியின் உயர்மட்ட அரசியல் குழுவை (Supreme Political Council) மேற்கோளிட்டு, சனிக்கிழமை மாலை அதன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏமனில் முன்பு ஹூத்தி குழுவினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதில்லை. ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ஹூத்திகள் தாக்குதல் நிகழ்த்துவதை தடுத்து நிறுத்தும் வகையில், அக்குழு மீது பல மாதங்களாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின.

இஸ்ரேலுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவதாக ஹூத்தி குழு ஆரம்பத்தில் தெரிவித்தது.

ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களுக்கு இஸ்ரேலுடன் எவ்வித தொடர்பும் இல்லை. வான்வழி தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களையும் ஹூத்தி குழு இலக்கு வைத்தது.

Share.
Leave A Reply