தமிழ்நாடு திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகளை மிரட்டி, பலாத்காரம் செய்த உறவினர்கள் 15 பேருக்கு தலா 40 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி மாநிலம், கதிர்காமத்தைச் சேர்ந்த தம்பதியினர் 2016 ஆம் ஆண்டு குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்தனர்.
அதன் பின்னர் அப்பெண் தன் இரு மகள்களையும் திண்டிவனத்துக்கு அடுத்த கிராமத்தில் உள்ள தனது தாயின் பொறுப்பில் விட்டு, வேறு நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சிறுமியர் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 2 மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்தனர்.
இருவரும், 2018 ஆம் ஆண்டு பாட்டியின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, 6 வயது சிறுமியை மாமா உறவுமுறை கொண்ட தென்நெற்குணத்தைச் சேர்ந்த பிரசாந்த்(வயது 21) தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
சில தினங்களில் 5 வயது சிறுமியையும் அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்தார்.
இந்நிலையில், சிறுமியரின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பாடசாலை ஆசிரியர்கள், சிறுமியரின் தாய் மற்றும் பாட்டியை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அந்த சிறுமியரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு சிறுமியரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியர் இருவரும் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்ததைக் கூறினர். அதிர்ச்சியடைந்த தாயார் 2019 ஜூலை 18 ஆம் திகதி பிரம்மதேசம் பொலிசில் புகார் அளித்தார்.
விசாரணையில், தென்நெற்குணத்தை சேர்ந்த பிரசாந்த் மட்டுமின்றி, தாத்தா உறவுமுறை கொண்ட துரைசாமி (55), துரைராஜ்(47) மற்றும் உறவினர்களான பிரபாகரன்(23), அஜீத்குமார் (22), தீனதயாளன்(24), செல்வம்(37), செல்வசேகர்(30), கமலக்கண்ணன்(30), ரவிக்குமார்(23), தமிழரசன் (24), மகேஷ்(37), ரமேஷ்(30), சந்திரமோகன்(23), முருகன் (40) ஆகிய 15 பேரும் ஒரு வருடமாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல், தனித்தனியே சிறுமியரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தமை தெரியவந்தது.
அதன்படி, 15 பேரையும் கைது செய்த பிரம்மதேசம் பொலிசார், அவர்கள் மீது விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில், ‘போக்சோ’ உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின்போது 5 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
விசாரணை முடிந்த நிலையில் நேற்றுமுன்தினம் நீதிபதி வினோதா தீர்ப்பு வழங்கினார். குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும், இரு குற்றங்களாக 20 ஆண்டுகள் வீதம், தலா 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா 32,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் நிவாரணமாக, 4.50 இலட்சம் ரூபா மற்றும் குற்றவாளிகள் 15 பேருக்கும் விதித்துள்ள அபராதத் தொகை 4.80 இலட்சம் ரூபாயை சேர்த்து 9.30 இலட்சம் ரூபாய் வழங்கவும், குற்றவாளிகள் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, 15 பேரையும் பொலிசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.