காசாவில் இஸ்ரேலின் புதிய போர் நடவடிக்கையில் பலரும் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸுக்கும் ஏனைய பலஸ்தீன தரப்புகளுக்கும் இடையே பீஜிங்கில் நடந்த சந்திப்பில் ‘தேசிய ஐக்கிய’ உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் 291 ஆவது நாளாக நேற்றும் நீடித்ததோடு தெற்கு நகரான கான் யூனிஸில் சரமாரித் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலியப் படை அங்குள்ள பொதுமக்களை வெளியேற்ற உத்தரவிட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பிச் செல்கின்றனர்.

கான் யூனிஸின் கிழக்குப் பகுதியை மீண்டும் ஒருமுறை சுற்றிவளைத்த இஸ்ரேலியப் படை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அங்கு பீரங்கி குண்டுகளை வீசியும் வான் தாக்குதல்களை நடத்தியும் சரமாரியாக தாக்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் 81 பேர் கொல்லப்பட்டு மேலும் 250 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் 400,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் வெளியேற்றத்திற்கு மத்தியில் நகரின் வீதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பலஸ்தீன போராளிகள் சண்டையிட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறிச் செல்கின்றனர்.

நிலைமை அசாத்தியமானது. அச்சம் மற்றும் இடம்பெயர்வுகளின் சுழற்சி நீண்டு காணப்படுகிறது. அனைவரும் சோர்வடைந்துள்ளனர்’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவு சுமார் 8.7 சதுர கிலோமீற்றர் பகுதியை உள்ளடக்கி இருப்பதாகவும் அல் மவாசி மனிமாபிமாய வலயத்தின் அசல் அளவில் 15 வீதத்தை குறைத்திருப்பதாகவும் ஐ.நா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி காசாவின் கிட்டத்தட்ட 83 வீதமான பகுதி இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட அல்லது மக்கள் செல்வதற்கு தடையுள்ள வலயங்களாக இருப்பதாக ஐ.நாவின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வடக்காக காசா நகரில் பலஸ்தீன வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்துடனான எல்லையை ஒட்டிய ரபாவில் ஹமாஸின் கடைசி படைப்பிரிவை நசுக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அங்கு இடம்பெற்ற வான் தாக்குதலில் இரு பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

எனினும் ரபாவில் இஸ்ரேலியப் படையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

நகரின் பெரும் பகுதிகளில் இஸ்ரேலிய டாங்கிகள் இயங்கி வந்தபோதும் நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இஸ்ரேலிய படையால் முழு கட்டுப்பாட்டை பெற முடியதிருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 329 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒன்பது மாதங்களில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,090 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும 90,147 பேர் காயமடைந்துள்ளனர்.

பலஸ்தீன ஒற்றுமை

காசா போரை ஒட்டி பத்தா அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகின்றன. மேற்குக் கரையில் இஸ்ரேல் நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் நேற்று ஒரு பெண் உட்பட மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் மற்றும் அதன் போட்டி அமைப்பான பத்தா உட்பட பலஸ்தீன தரப்புகள் கடந்த மூன்று தினங்களாக சீன தலைநகர் பீஜிங்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் தேசிய ஐக்கிய உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இது போருக்குப் பின்னர் காசாவில் ஒன்றிணைந்து ஆட்சி புரிவதற்கான உடன்படிக்கை என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் மூத்த அதிகாரியான மூவா அபூ மர்சூக், பத்தா பிரதிநிதி மஹ்மூத் அல் அலூ மற்றும் மேலும் 12 பலஸ்தீன குழுக்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

காசாவில் போருக்குப் பின்னர், இடைக்கால நல்லிணக்க அரசு ஒன்றை அமைப்பதற்கு இவர்கள் உடன்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

‘நாம் இன்று தேசிய ஐக்கியத்திற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதோடு இந்த பயணத்தை நிறைவு செய்வதற்கான பாதை தேசிய ஐக்கியமாக இருக்கும் என்று நான் கூறிக்கொள்கிறேன். நாம் தேசிய ஐக்கியத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதோடு அதற்காக அழைப்பு விடுக்கிறோம்’ என்று வாங்குடனான சந்திப்புக்குப் பின்னர் மர்சூக் தெரிவித்தார்.

பலஸ்தீன தரப்புகளுக்கு இடையிலான மோதலில் ஹமாஸ் மற்றும் பத்தா இடையிலான சமரசம் திரும்புமுனையாக பார்க்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் இந்த இரு பிரதான தரப்புகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்தப் பிளவை களைவதில் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் சீனா கடந்த ஏப்ரலிலும் பலஸ்தீன தரப்புகள் இடையே சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. காசா போர் முடிவில் சர்வதேச அமைதி மாநாடு ஒன்றை நடத்துவதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகு வாக்குறுதி

எவ்வாறாயினும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் நிறுத்த முயற்சிகள் ஸ்தம்பித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த வார கடைசியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவிருப்பதோடு அமெரிக்க பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

பணயக்கைதிகளின் உறவினர்களுடன் வொஷிங்டனில் கடந்த திங்களன்று பேசிய நெதன்யாகு, ‘(உடன்படிக்கைக்கான) நிபந்தனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது சிறந்த சமிக்ஞையாகும்’ என்றார்.

போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான முன்மொழிவை பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த நிலையில் மத்தியஸ்தர்களாக செயற்படும் எகிப்து மற்றும் கட்டார் அண்மைய வாரங்களில் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டின.

‘துரதிருஷ்டவசமாக இது ஒரே நேரத்தில் அன்றி படிப்படியாகவே நடக்கும். எவ்வாறாயினும் உடன்படிக்கை ஒன்றை நோக்கி எம்மால் முன்னேற முடியும் என்று நான் நம்புவதோடு அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு வழிவகுப்பதாக இருக்கும்’ என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

எனினும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் நெதன்யாகு முட்டுக்கட்டையாக இருப்பதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ‘உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்குத் தேவையான நெகழ்வுப் போக்கை ஹமாஸ் தமது பதிலில் தெரிவித்த நிலையில் பந்து இப்போது அவர் பக்கமே உள்ளது’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு நாளை (25) பணயக்கைதிகளை விடுவிப்பது உட்பட போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

காசாவில் ஹமாஸ் மற்றும் மற்ற போராளிகளின் பிடியில் தொடர்ந்தும் 120 பணயக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்திருப்பதாக இஸ்ரேல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply