அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியாற்றிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியா?
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியாற்றிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 224 தனியார் கல்லூரிகளில் இந்த முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தேறியது எப்படி?… அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அளித்த விளக்கம் என்ன?… இந்த தொகுப்பில் பார்க்கலாம்….
அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
அதாவது, AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் இணையதளத்தில், ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஒரு யுனிக் ஐடி வழங்கப்பட்டிருக்கும்.
அதன்படி, ஒரு கல்லூரியில் பணியாற்றும் நபர் மற்றொரு கல்லூரியில் பணியாற்ற முடியாது. ஆனால், முறையாக யுனிக் ஐடியை வழங்காமல், போலியாக உள்ளீடு செய்து, ஒரே பேராசிரியர் 10- க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரப் பணியாளராக பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டது.
ஆதார் எண்ணை மாற்றி மாற்றி மோசடி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார்.
2 ஆயிரம் பணியிடங்களில் வெறும்189 பேராசிரியர்கள் பணியாற்றியது தெரியவந்திருப்பதாக வேல்ராஜ் தெரிவித்தார். இந்த மோசடி அரங்கேறியது எப்படி என்பதையும் அவர் விளக்கினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் இதுதொடர்பாக கூறுகையில், “52 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2000 பேராசிரியர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.
அந்த 2 ஆயிரம் பேராசிரியர்களுக்கும் பதிலாக இந்த 189 பேர் முறையே தனிஒருவர் பல கல்லூரிகளுக்கு சென்று பணியாற்றியுள்ளனர்.
ஒருவர் 32 கல்லூரிகள் வரை சென்று பணியாற்றியுள்ளார். சுய பிரகடனத்தில் (declarations) ஆதார் எண்களை மாற்றி மாற்றி வழங்கியுள்ளனர்.
நாங்கள் இதை அவர்களது பிறந்த தேதியை வைத்துக் கண்டுபிடித்தோம். அந்த கல்லூரிகள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை ஆய்வுக்குழுவின் மீதும் இருக்க வேண்டும்
துணைவேந்தர் வேல்ராஜின் விளக்கம் தொடர்பாக பேட்டியளித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், பேராசிரியர்கள் நியமன முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ஒரே நாளில் இரு கல்லூரிகளுக்கு, இரண்டு சோதனைக்குழு செல்கின்றனர்.
ஒரே நபர் இரு கல்லூரியிலும் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு ஆமோதித்து உறுதி செய்துள்ளனர்.
ஒரே நாளில் எப்படி இரு பேராசிரியர்கள் இரு கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராக இருக்க முடியும். இது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிந்த விஷயம் தான்.
அதேபோல் இந்த நடவடிக்கையானது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவின் மீதும் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் கல்லூரிகள், பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியது.
பேராசிரியர்கள் நியமனத்தில் முறைக்கேடு நடந்தது உண்மைதான் என்ற தகவலை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக உயர்கல்வித் துறையும் ஆளுநரும் நேரடியாக தலையிட்டால் மட்டுமே எதிர்காலங்களில் இதுபோன்ற முறைக்கேடுகள் நடைபெறாமல் இருக்கும் என தெரிவித்துள்ளது அறப்போர் இயக்கம்.