திருப்பூர்: இறக்கும் தருவாயிலும், பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காத்த பள்ளி வேன் ஓட்டுநர் மலையப்பனின் செயல் அனைவரையும் கலங்கடித்துள்ளது.

மலையப்பனின் மனிதநேயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (49). இவர் வெள்ளக்கோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக பள்ளி வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

மலையப்பன் நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல 20 குழந்தைகளை வேனில் அழைத்து சென்றுள்ளார்.

அதே வேனில் மலையப்பனின் மனைவி லலிதாவும் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேன் வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் மலையப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, மலையப்பன் ஸ்டியரிங்கிலேயே மயங்கி சரிந்துள்ளார்.

இதனைக் கண்ட மாணவர்கள் மற்றும் மனைவி லலிதா ஆகியோர் அலறினர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேனில் ஏறி பார்த்துவிட்டு உடனடியாக மலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மலையப்பனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மலையப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி வேன் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டுச் சரியும் மரணத் தருவாயிலும், வேனில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு தனது உயிரை விட்ட ஓட்டுநர் மலையப்பனின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, குழந்தைகள் உயிரை பாதுகாத்து விட்டு மறைந்த மலையப்பனுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மலையப்பனின் அரும் செயலை வியந்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!” எனத் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply