இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணைக்குழு நேற்று (ஜூலை 26) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது வேட்பு மனுக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்று (ஜூலை 26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் காலை 8.30 முதல், வேட்பு மனுத் தாக்கல் செய்யும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு முன்னைய நாளான 14ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கட்டுப்பணமாக 50,000 இலங்கை ரூபாவையும், வேட்பாளர் வேறெதும் அரசியல் கட்சியொன்றினால் அல்லது வாக்காளர் ஒருவரால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவர் கட்டுப்பணமாக 75,000 இலங்கை ரூபாவையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 21 நாடு முழுவதும் வாக்குப் பதிவு

இலங்கையில் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குபதிவு இடம்பெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் அரசு ஊழியர்கள், தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே தபால் மூலம் வாக்குகளை அளிப்பார்கள்.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் அன்றைய தினம் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்ததன் பின்னர், வாக்குச் சீட்டுகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்குக் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் எடுத்துச் செல்லப்படும்.

இவ்வாறு வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள், உரிய நடைமுறைகளின் கீழ் உடைக்கப்பட்டு, அன்றைய தினமே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்குப் பெட்டிகளின் வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும்.

இந்த நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவு பெறும் மத்திய நிலையங்களில் உள்ள தேர்தல் முடிவுகள், தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, உடனுக்குடன் ஊடகங்களின் ஊடாக தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.

குறிப்பாக தேர்தல் நடைபெறும் தினத்திற்கு மறுதினம் தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படுவதை இதுவரை வழமையான நடைமுறையாகத் தேர்தல் அதிகாரிகள் கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நேரும் பட்சத்தில் மாத்திரம் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தாமதப்படுத்தப்படும்.

 

வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பதிவு

இலங்கையில் ஒரு கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். (கோப்புப்படம்)

இலங்கையில் ஒரு கோடியே 71 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கையில் 25 மாவட்டங்கள் காணப்பட்ட போதிலும், தேர்தல் காலப் பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களாகக் கணிப்பிடப்படும்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டமாகவும், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகியன வன்னி தேர்தல் மாவட்டமாகவும் கருதப்பட்டு, வாக்களிப்புப் பணிகள் இடம்பெறும்.

வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

உள்ளூராட்சி, மாகாண மற்றும் பொதுத் தேர்தல்களின் போது முதலில் கட்சி சின்னத்துக்கு புள்ளடி இட்டுவிட்டு (X) அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுக்கு முன்னால் (X) அடையாளமிடலாம்.

ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கை வழங்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் மூவருக்கு விருப்புகளை வழங்கலாம்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர் என்பதற்கு அப்பால் ஏனைய கட்சி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு அருகில் வாக்களிப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள உரிய இடத்தில் 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் இரண்டுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போட்டியிடுகின்ற பட்சத்தில் – A,B,C,D,E என வைத்துக்கொள்வோம்.

இதில் A என்பவரே வாக்காளரின் முதன்மைத் தேர்வாக இருக்கும் பட்சத்தில், A என்பவருக்கு முன்னால் 1 என இலக்கத்திலும் – 2, 3ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு 2, 3 என அடையாளமிட்டு விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தலாம்.

மேலும், 2, 3 ஆம் விருப்பு வாக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஒரு வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க என வாக்காளர் விரும்புவாரெனில் வாக்குச் சீட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் X அல்லது 1 என அடையாளமிட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

விருப்புகளை அளிக்க விரும்புபவர்கள் மூன்று வேட்பாளர்களுக்கும் X,X,X என அடையாளமிட்டால் அந்த வாக்கு செல்லுபடியாகாது. எனவே, 2,3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் 1,2,3 என அடையாளமிடுவதே சிறந்த நடைமுறையாகக் கருதப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?


படக்குறிப்பு, ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், முதல்கட்ட வாக்கெண்ணும் பணி இடம்பெறும். (கோப்புப்படம்)

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர், முதல்கட்ட வாக்கெண்ணும் பணி நடைபெறும். இதில் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்.

(அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழித்த பிறகு வருவதே செல்லுபடியான மொத்த வாக்குகள்.)

முதலாம் சுற்று வாக்கெண்ணிப்பில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாத பட்சத்திலேயே 2, 3ஆம் விருப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படும். 2, 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் முதல் இரண்டு நிலைகளில் உள்ளவர்கள் சமனான வாக்குகளைப் பெற்றிருந்தால் திருவுளச் சீட்டு மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.

தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர், பிரதம நீதியரசர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்.

இலங்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள்

சந்திரிகா குமாரதுங்கா

இலங்கையின் தற்போதுள்ள அரசியலமைப்பானது 1978ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜெயவர்தன திகழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் 1982ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், அந்தத் தேர்தலின் ஊடாக ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரணசிங்க பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டதுடன், அவர் 1992ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதுடன், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார். 2005 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டு, இரண்டு முறை ஆட்சி பீடம் ஏறினார்.

அதைத் தொடர்ந்து. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவும் தெரிவானார்கள்.

இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் இடைநடுவில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியதுடன், அந்த இடத்திற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையில் பிரதமர் தெரிவு

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.

ஜனாதிபதிக்கு அடுத்தப்படியாக பிரதமர் பதவி இலங்கையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply