திருமணத்தை நிறுத்துவதற்காக சிறிதளவு மட்டுமே எறும்பு சாக்பீஸை கடித்து, தினேஷ் தற்கொலை நாடகமாடியது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது.
ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை கழற்றிவிட முயற்சித்த இளைஞரின் கபட நாகடம் அம்பலமானதால். கல்யாண மாலை போடப்பட்டுள்ளது… நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் – சாந்தி தம்பதியின் இளைய மகன் தினேஷ்குமார். 27 வயதான இவர், பூ அலங்கார வேலை செய்து வருகிறார்.
தினேஷ்குமாருக்கும், கரிக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் – பரிமளா தம்பதியரின் மகள் லாவண்யாவுக்கும், கடந்த 9 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
திருமண நாளை எதிர்பார்த்து காத்திருந்த தினேஷ்குமார், தனது வருங்கால மனைவியான லாவண்யாவை அடிக்கடி சந்தித்து, லவ்வை டெவலப் செய்துள்ளார்.
விளம்பரம்
புதிதாக ஒரு செல்போனும் வாங்கிக் கொடுத்து மணிக்கணக்கில் எதிர்காலம் குறித்து அளவளாவியுள்ளனர்.
எல்லாம் சுபமாக சென்று கொண்டிருந்த போது கடந்த 19-ம் தேதி திடீரென லாவண்யாவை தனக்கு பிடிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று பெற்றோரிடம் தினேஷ்குமார் கூறியுள்ளார். இதைக் கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெண் வீட்டார் கதிகலங்கி நின்றபோது, மறுபுறம் மாப்பிள்ளை வீட்டார் தனது மகனுக்கு 15 சவரன் நகை வரதட்சணையுடன் வேறொரு வரன் வந்ததால், அந்த பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் தெரிந்ததும், பெண் வீட்டாருக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் வலித்துள்ளது.
இதனால் வேறு வழியின்றி வழக்கறிஞர்கள் மூலமாக பேச்சு வார்த்தையும் நடத்தி, குறித்த தேதியில் திருமணம் செய்ய பத்திரத்தில் மாப்பிள்ளை கையெழுத்திட்டுள்ளார்.
தனது முடிவுக்கு மாறாக கடந்த 24 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதை நிறுத்துவதற்கு தினேஷ்குமார், எறும்பு சாக்பீஸை கடித்து தின்றுள்ளார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தினேஷ்குமாரை, ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
திருமணத்தை நிறுத்துவதற்காக சிறிதளவு மட்டுமே எறும்பு சாக்பீஸை கடித்து, தினேஷ் தற்கொலை நாடகமாடியது பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால், பெண்ணை மணக்கோலத்தில் அழைத்து வந்து, மருத்துவமனை வளாகத்திலேயே பெண் வீட்டார் திருமணம் செய்து வைத்தனர்.
இதன் மூலம் சிகிச்சை பெற்று வந்த மகா நடிகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டது. தற்கொலை நாடகம் கை கொடுக்காததால், தினேஷ்குமார் வேண்டா வெறுப்பாக பெண்ணிற்கு தாலி கட்டினார்.
அதோடு மண மாலையை தூக்கி எறிந்துவிட்டு புது மாப்பிள்ளை அங்கிருந்து கோபமாக கிளம்பிச் சென்றார்.