கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரமான நிகழ்வை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்) அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி முகமை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

காயமடைந்த 129 நபர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 250 பேர் இதுவரை மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம்

செவ்வாய்கிழமை அதிகாலை 2-3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த நிலச்சரிவால் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

மீட்புப்பணி குறித்து மாநில உயர்மட்ட அதிகாரி கூறுவது என்ன?

‘நிலைமை தொடர்ந்து மோசமாக நீடிக்கிறது, உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும்’ என மாநிலத்தின் உயர்மட்ட அதிகாரி வி.வேணு ஊடகத்திடம் கூறினார்.

‘பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு சிறிய குழு ஒன்று ஆற்றைக் கடந்து பாதிக்கப்பட்ட பகுதியை சென்றடைந்துள்ளனர். மேலும், நிறைய உதவிகள் தேவைப்படும் என்றும், ஆனால் ஆற்றின் வலுவான நீரோட்டம் மீட்புப் பணியாளர்கள் ஆற்றைக் கடக்க கடினமாக இருந்தது’ என வேணு கூறினார்.

பலத்த மழை பெய்துவருவதால் வான்வழியாக மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, இவர் கூறினார்.

சூரல்மலையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன.

நிலச்சரிவு குறித்து உள்ளூர் மக்கள் கூறியது என்ன?

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய உள்ளூர் வாசி ரஷீத் படிக்கல்பரம்பன், ‘குறைந்தபட்சம் நள்ளிரவில் 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம், இதனால் பாலம் அடித்து செல்லப்பட்டது’ என கூறியுள்ளார்.

மற்றொரு உள்ளூர் வாசியான ராகவன் சி அருணமாலா இந்த பயங்கரமான நிகழ்வை குறித்து பேசிய போது, ‘இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நபர் ஒருவர் உதவி கேட்டு கூச்சலிடுவதை நான் பார்த்தேன்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கடந்த சில மணி நேரங்களாக அவரை நெருங்க முயற்சித்து வருகின்றனர்’ என கூறினார்.

வயநாட்டில் தொடர்கதையாகும் நிலச்சரிவு

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மலை மாவட்டமான வயநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வடக்கே கர்நாடகாவின் குடகு மற்றும் மைசூர் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் தமிழகத்தின் நீலகிரி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடமேற்கே கண்ணூர் மாவட்டமும், தெற்கே மலப்புரம் மாவட்டமும், தென்மேற்கே கோழிக்கோடு மாவட்டமும் அமைந்துள்ளது.

சூரல்மலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள என்டிஆர்எஃப் வீரர்

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முண்டக்கை, அட்டமலை, குன்னோம் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த கிராமங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. மழைகாலங்களில் நிலச்சரிவு அதிகம் ஏற்படும் பகுதியாக இந்த மாவட்டம் அறியப்படுகிறது.

உதவி எண்கள் அறிவிப்பு

மீட்பு உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு.

மேலும் மாவட்ட அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 204151 என்ற எண்ணுக்கும், 9562804151, 8078409770 என்ற அலைபேசி எண்களுக்கும் மக்கள் அழைக்கலாம்.

சுல்தான் பத்தேரியில் உள்ள தாலுக்கா அளவிலான அவசர செயல்பாட்டு மையத்தை 04936 223355 (அ) 04936 220296 என்ற எண்ணிலும் அழைக்கலாம். மேலும் 6238461385 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04935 241111, 04935 240231 என்ற எண்களிலும், 9446637748 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 256100 என்ற எண்ணிலும், 8590842965, 9447097705 என்ற அலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

நிவாரண நிதியை அறிவித்த மத்திய அரசு

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சத்தை நிதி உதவியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் இரண்டு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ,பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் என மத்திய வானி வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது.

 

நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர்கள் மேற்பார்வையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து,

முழு அரசு இயந்திரமும் மீட்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்றும் கேரள முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கேரள முதல்வர்

”வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்” என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – மோதி நம்பிக்கை

கேரளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த தகவல் கேட்டு மிகவும் வேதனையுற்றதாக குறிப்பிட்டுள்ளார். “உறவுகளை இழந்த நபர்களைப் பற்றி நினைக்கிறேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார் மோதி.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

“கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அலைபேசியில் உரையாடினேன். இந்த தருணத்தில் அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தேன்,” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோதி.

வயநாடு நிலச்சரிவு – கேரளாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் நிலையில் உள்ளதாக மோதி அறிவிப்பு

மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – நரேந்திர மோதி அறிவிப்பு

உதவிக்கரம் நீட்ட தயார் – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசு கேரளத்திற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய தயார் என்று அறிவித்துள்ளார்.

“வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் குறித்து வேதனையுற்றேன். இந்த பகுதியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று புரிந்து கொள்கிறேன். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது என்றும் இடர்பாடுகளில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தேவையான தளவாட, மனிதவள உதவிகளையும் இந்த இக்கட்டான தருணத்தில் சகோதர மாநிலமான கேரளத்துக்கு வழங்க தமிழகம் தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

உதவிக்கரம் நீட்டும் தமிழகம் – முக ஸ்டாலின் அறிவிப்பு

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு!

கேரளாவின் வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து, மங்களூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கனமழையாக பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற, டேங்கர் லாரி, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

Share.
Leave A Reply