லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வவழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டார் என்று அறிவித்துள்ளது இஸ்ரேல்.
இரானில் ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
தாஹியேஹ் என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர். லெபனான் நாட்டின் ஆயுதமேந்திய போராளிகள் அதிகமாக வாழும் பகுதியாக இது அறியப்படுகிறது.
ஃபாவுத் ஷுக்கர் என்ற ஹெஸ்பொலா தளபதிதான் ‘உளவு அடிப்படையிலான அழிப்புக்கு (intelligence-based elimination)’ இலக்கானதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை அன்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு ஃபாவுத் தான் பொறுப்பு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்திருந்தது ஹெஸ்பொலா.
இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் இது என்று லெபனான் நாட்டு பிரதமர் நஜீப் மிகாட்டி கண்டித்துள்ளார்.
தொடர் தாக்குதல் மூலம் பொதுமக்களை கொல்லுதல் என்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் இது ஒரு குற்றச்செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் காலேன்ட், ஹெஸ்பொலா அதன் எல்லையை மீறிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிதிலமடைந்துள்ள குடியிருப்பு பகுதிகள்
உண்மையாகவே ஃபாவுத் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் அந்த கட்டடத்தில் இல்லை என்று பெய்ரூட் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹெஸ்பொலா இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய இஸ்ரேல் நாட்டு அதிகாரி ஒருவர், இஸ்ரேல் தனது பெய்ரூட் தாக்குதல் குறித்த அறிவிப்பை அமெரிக்காவிடம் முன்கூட்டியே தெரிவித்தது என்று உறுதிபடுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே அக்டோபரில் தாக்குதல் துவங்கிய பிறகு, இஸ்ரேல் – லெபனான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
யார் இந்த ஃபாவுத் ஷுக்கர்?
Fuad Shukr
ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் ஆலோசகராக ஃபாவுத் ஷுக்கர் செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது என்று அமெரிக்கா முன்பு தெரிவித்திருந்தது.
அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தது அமெரிக்கா.
பெய்ரூட்டில் இருந்த அமெரிக்க ராணுவ முகாம் மீது 1983ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் ஃபாவுத் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா. இந்த தாக்குதலில் 241 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
தாஹியே பகுதியானது ஹெஸ்பொலாவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதியாகும். அங்கு மக்கள் தொகை நெருக்கமாக இருக்கும் ஹரெத் ஹ்ரெய்க் பகுதியில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஷேக் ஹசன் நஸ்ரல்லா
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் உருவாக வாய்ப்புள்ளதா?
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜான்-பியர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான பெரிய போரை தவிர்க்க முடியும் என்று நம்புகிறார் என்று தெரிவித்தார்.
“இந்த விவகாரம் பெரிதாவதை பார்க்க விரும்பவில்லை. ஒரு போரை பார்க்க நாங்கள் தயாராக இல்லை” என்று ஜான்-பியர் அறிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, பெயர் கூற விரும்பாத இரண்டு இஸ்ரேல் அதிகாரிகள், “ஹெஸ்பொலாவுக்கு எதிரான இந்த தாக்குதலில் லெபனானை போருக்குள் இழுக்க விரும்பவில்லை” என்று கூறினர்.
ஹெஸ்பொலாவிடம் இருந்து உடனடியாகவோ அல்லது முக்கியமான எதிர்வினையையோ எதிர்பார்க்கவில்லை என்பதால் இஸ்ரேல் நாட்டினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
லெபனானுக்கு ஆதரவாக ஈரான் முன்வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்ற சூழலில் முழுமையான போர் ஏற்படும் பட்சத்தில் அதன் விளைவுகளை இரு தரப்பும் அறிந்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
படக்குறிப்பு, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே போர் உருவாவதை பார்க்க விரும்பவில்லை
அடுத்து நடக்க இருப்பது என்என்ன?
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம், நெதன்யாஹூ மற்றும் காலன்ட்டுக்கு பதில் தாக்குதலை எப்படி நடத்தலாம் என்பதை தீர்மானிக்க உரிமைகள் வழங்கப்பட்டன.
சனிக்கிழமை அன்று மஜ்தால் ஷாம்ஸ் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஹெஸ்பொலாவை கைகாட்டியது இஸ்ரேல். ஆனால் அந்த அமைப்போ அதனை மறுத்து வந்தது.
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே அக்டோபரில் தாக்குதல் துவங்கிய பிறகு இஸ்ரேல் – லெபனான் எல்லைப்பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
ஹமாஸ் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி அன்று நடத்திய தாக்குதலுக்கு பிறகு இது நடைபெற்றது.
ஹாமாஸை ஆதரிக்கும் ஹெஸ்பொலா, இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு முழுமையான போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற சூழலில் இந்த பிரச்னையை தணிக்க, சமீப காலமாக, உலக தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
போர் சூழலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கின்ற காரணத்தால் பிரிட்டிஷ் நாட்டினர் உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டு குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
டேவிட் லாம்மி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலேவுடன் ஆகியோர், காஸாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரவும், அப்பகுதியில் பதட்டமான சூழலை முடிவுக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கத்தாருக்கு வந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலகம் அறிவித்துள்ளது.