உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சிறிய செருப்பு தைக்கும் கடை வைத்திருக்கும் ராம்சேத் மோச்சி, மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
ஆனால் ஜூலை 26-ஆம் தேதிக்குப் பிறகு பிறகு சுல்தான்பூருக்கு வெளியே கூட ராம்சேத் மோச்சியின் பெயர் பிரபலமானது. அன்றைய தினம் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரது கடைக்கு வந்தார். செருப்பு தைக்க அவருக்கு உதவி செய்தார்.
ராம்சேத் மோச்சியுடன் சுமார் அரை மணி நேரம் செலவிட்ட ராகுல் காந்தி, காலணிகள் மற்றும் செருப்புகளைத் தைக்கும் சிக்கலான வேலையைக் கற்றுக்கொண்டார். அடுத்த நாளே ராம்சேத் மோச்சிக்கு ஷூ மற்றும் செருப்பு தைக்கும் மின்சார இயந்திரம் ஒன்று ராகுல் காந்தி மூலம் அன்பளிப்பாகக் கிடைத்தது.
ராகுல் காந்தி தைத்த செருப்பினை ரூ.10 லட்சம் வரை கொடுத்து வாங்க்கிக்கொள்ள மக்கள் தயாராக உள்ளனர், ஆனால் தான் அதை விற்கத் தான் தயாராக இல்லை என்று ராம்சேத் மோச்சி கூறுகிறார்.
ராம்சேத்துடன் ராகுல் காந்தி
’10 லட்சம் ரூபாய் வரை கொடுக்கத் தயார்’
ராகுல் காந்தி தைத்த செருப்பை ஃப்ரேம் செய்து அதை ஒரு நினைவுப் பொருளாக தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடன் வைத்திருக்கப்போவதாக ராம்சேத் கூறுகிறார்.
ராம்சேத் விற்க மறுத்தாலும், ராகுல் காந்தியால் தைக்கப்பட்ட செருப்பின் விலை உயர்ந்து வருகிறது.
ராகுல் தைத்த செருப்பை விற்குமாறு கூறி பல்வேறு இடங்களில் இருந்து ராம்சேத் மோச்சிக்கு ஆஃபர்கள் வருவதாகவும் ஆனால் அதை விற்பதில்லை என்ற தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவும் சுல்தான்பூர் நகரத்தில் வசிக்கும் முதியவரான சங்கட பிரசாத் திரிபாதி கூறுகிறார்.
ராகுல் காந்தி என்ன செய்தார்?
ஜூலை 26-ஆம் தேதி ராகுல் காந்தி சுல்தான்பூரின் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து தரக்குறைவாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ராம்சேத் மோச்சியின் கடைக்கு வந்த ராகுல் காந்தி, அவரிடம் காலணிகள் தைக்க கற்றுக்கொண்டார். அடுத்த நாள் ராகுல் காந்தி ராம்சேத்துக்கு மின்சார இயந்திரத்தை அனுப்பினார்.
செருப்பை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்
ராகுல் காந்தியின் கைகளால் தைக்கப்பட்ட காலணி தற்போது சுல்தான்பூர் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு அதிக விலை கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.
“முதல் நாளன்றே எனக்கு 1 லட்சம் ரூபாய்க்கு ‘ஆஃபர்’ வந்தது. நாட்கள் செல்ல செல்ல இதன் விலை அதிகரித்து வருகிறது. கடைசியாக எனக்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஆஃபர் கிடைத்தது,” என்றார் அவர்.
“நேற்று ஒரு பெரிய காரில் அதிகாலையில் என் வீட்டிற்கு வந்த ஒருவர், ராகுல் காந்தி தைத்த செருப்புக்கு ஈடாக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச்சொன்னார். ஆனால் நான் விற்க மறுத்துவிட்டேன். அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை,” என்று ராம்சேத் குறிப்பிட்டார்.
“நான் என் கடையை அடைந்தபோது ஒரு பணக்காரர் எனக்காகக் காத்திருந்தார். அவர் எனக்கு 2 லட்சம் ரூபாய் தருவதாகக்கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.”
இந்தச் செருப்பை வாங்கிக்கொள்வதாகப் பலரிடமிருந்து தனக்கு அழைப்புகள் வருவதாகவும், ஆனால் அவை அனைத்தையும் தான் மறுத்துவிட்டதாகவும் ராம்சேத் கூறினார்.
படக்குறிப்பு, ராகுல் காந்தி தைத்த செருப்பு
‘கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்க மாட்டேன்’
“இன்று காலை ஒரு நபர் என்னிடம் வந்து 10 லட்சம் தருவதாகக் கூறினார். தன் முதலாளி இந்தச் செருப்பை வாங்க விரும்புவதாக அவர் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். நீங்கள் எனக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் விற்க மாட்டேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன்,” என்று ராம்சேத் குறிப்பிட்டார்.
இந்த செருப்பை என்ன விலை கொடுத்தாவது வாக்குவதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்றும் ஆனால் தான் அதை விற்கப்போவதில்லை என்றும் அவர் சொன்னார். இந்த செருப்பு தனக்கு மிகவும் விலைமதிப்பற்றது என்றும் யாராவது ஆயிரம், லட்சம் அல்லது கோடிகள் கொடுத்தாலும் அதை விற்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
ராகுல் காந்தி தைத்த செருப்பை ஃப்ரேம் செய்து தனது கடையில் தொங்கவிடப்போவதாக ராம்சேத் தெரிவித்தார். தான் உயிருடன் இருக்கும் வரை இந்த செருப்பை தன் கண் முன்னே வைத்திருக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செருப்பை வாங்க விரும்பும் நபர்கள் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
“அவர்களில் யாரையும் எனக்குத் தெரியாது. இந்த செருப்பை விற்க நான் தயாராக இல்லை. எனவே அவர்களின் பெயர் மற்றும் முகவரியைக் கூட நான் கேட்கவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.