-காவல் நிலையத்தில் அனைவரும் சஸ்பெண்ட்

லக்னோவின் கோமதி நகர் பகுதியில் கனமழை காரணமாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துகொண்டிருந்தார். வாகனத்தின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அப்போது, அவர்களிடம் சிலர் தவறாக நடந்துகொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக 16 பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் அவர்கள் தவறாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இச்சம்பவம், உத்தர பிரதேச அரசு மற்றும் காவல்துறை மீது சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுள் இருவரின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன. இச்சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்வதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தம் அதிகரித்துள்ளதால், துணை காவல் ஆணையர், கூடுதல் துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை யோகி ஆதித்யநாத் அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. காவல் நிலைய அதிகாரி (SHO), புறக்காவல் நிலைய பொறுப்பு காவலர் உட்பட காவலர்கள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என யோகி அரசு தெரிவித்துள்ளது.

சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் பவன் யாதவ் மற்றும் சுனில் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அர்பாஸ் மற்றும் விராஜ் சாஹு ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான டிம்பிள் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

என்ன நடந்தது?

புதன்கிழமை பல மணிநேரம் தொடர்ச்சியாக மழை பெய்ததால், லக்னோ நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

தாஜ் ஹோட்டலுக்கு அருகே உள்ள பாலத்தில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று குழுமியிருந்தது.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது மழைநீரை தெளிக்கவும் வாகனத்தை பின்னால் இழுக்கவும் செய்தனர். இதில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் தண்ணீரில் விழுந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது. அன்றைய தினம் இரவே சம்பவத்தில் தொடர்புடைய பலரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஷ்ரா மோனா இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்பினார். குற்றவாளிகள் மீது எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என யோகி அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

சட்டமன்றத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “கோமதி நகரில் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். இதில் பவன் கல்யாண் என்பவர் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர், முகமது அர்பாஸ் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர்.

இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம். புறக்காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளோம்,” என்றார்.

எதிர்க்கட்சியான சமாஜ்வாதியும் இதை தீவிரமாக எடுத்துள்ளது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் கூறுகையில், “குற்றம் குற்றமாக பார்க்கப்பட வேண்டும்.

அதில் சாதியோ அல்லது மதமோ வரக்கூடாது. முதலமைச்சர் இருவரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களின் பெயர்களை கூறவில்லை. சாதியை பொருட்படுத்தாமல், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம்” என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான டிம்பிள் யாதவும் இதுகுறித்து பேசியுள்ளார். ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் அவர் பேசுகையில், “அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோ பதிவு இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிது,” என தெரிவித்தார்.

கும்பலின் தவறான நடத்தையால் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் தண்ணீரில் விழுந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய வியாழக்கிழமை மதியம் வரை கோமதி நகர் காவல் நிலையம் முயன்றது.

ஆனால், அவர்களின் விவரங்களை அறிய முடியவில்லை. சிசிடிவி பதிவில் அவர்களுடைய வாகன எண் பதிவாகாததால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. உள்ளூர் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் சிசிடிவி பதிவில் உள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லக்னோ காவல்துறை செய்தித்தொடர்பாளர் டிசிசி ரவீனா தியாகி ஊடகங்களிடம் கூறுகையில், “சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

இன்னும் சிலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவ்வழக்கில் காவல்துறையின் மூன்று குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

 

Share.
Leave A Reply