இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக, மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

இரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும், லெபனானில் ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் முக்கிய தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகிறது.

ஏவுகணை பாதுகாப்புப் படைகள் “மிக உறுதியுடன்” இஸ்ரேலை பாதுகாக்கும் என்றும் அவை தயார்நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஹனியேவின் படுகொலைக்கு காரணமான இஸ்ரேலுக்கு “கடுமையான தண்டனை” வழங்கப்படும் என இரான் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி சூளுரைத்துள்ளார். அத்துடன், இஸ்மாயில் ஹனியே மரணத்திற்காக மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தயார் நிலையில் அமெரிக்கா

இஸ்மாயில் ஹனியே

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்டார். இரான் மற்றும் காஸாவில் உள்ள அதன் சார்பு குழுக்கள் அக்கொலைக்கு இஸ்ரேல் மீது குற்றம்சுமத்தியுள்ளன. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஹமாஸின் முக்கிய தலைவராக கருதப்பட்ட 62 வயதான ஹனியே, காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

இரான் ஆதரவு ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவின் முக்கிய தளபதியான ஃபுவாத் ஷுக்ரை கொன்றதாக, இஸ்ரேல் கூறிய சில மணிநேரத்தில் ஹனியே கொல்லப்பட்ட தகவல் வெளியானது.

“புதிதாக நிலைநிறுத்தப்படும் போர் விமானங்கள் உள்ளிட்டவை, அமெரிக்கப் படையின் பாதுகாப்பை மேம்படுத்தும், இஸ்ரேல் பாதுகாப்புக்கான ஆதரவை அதிகரிக்கும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதை இது உறுதிசெய்கிறது” என்று பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

கடந்த ஏப்ரல் 13 அன்று, இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இரான் தாக்குதல் நடத்தியதற்கு முன்பும் அமெரிக்கா இதுபோன்று கூடுதலான ராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தியது. இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் அச்சமயத்தில் ஏவப்பட்ட சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தின.

ஹனியே கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் கருத்து ஏதும் கூறவில்லை. ஆனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெய்ரூட்டில் ஃபுவாத் ஷுக்ர்-ஐ கொன்றது உட்பட தங்கள் நாடு சமீப நாட்களில் எதிரிகளுக்கு “மோசமான அடியை” கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

“சவாலான நாட்கள் காத்திருக்கின்றன… அனைத்து பக்கங்களிலிருந்தும் நமக்கு தாக்குதல்கள் வருகின்றன. எவ்வித சூழலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை

இஸ்மாயில் ஹனியேவின் கொலை, காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்பதை அமெரிக்கா நம்பவில்லை என தெரிவித்தார்.

“பதற்றம் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்ற உறுதியான செய்தியை நேரடியாக கொடுத்துள்ளதாக நினைக்கிறேன். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம்தான் இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி” என அவர் தெரிவித்தார்.

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதிநிதிகள் வரும் நாட்களில் கெய்ரோவுக்கு பயணிக்க உள்ளதாக நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு தரப்புக்கும் போர் மூண்டது.

இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது. இதில், சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply