2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்பாடு, 2006ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
அப்போது விடுதலைப் புலிகள் பேச்சுக்களை முறித்துக் கொண்டு, போரை மீளத்தொடங்கியதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றனவும், சரி , போர் நிறுத்த கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்த ஸ்கண்டினேவிய நாடுகளும் சரி, விடுதலைப் புலிகளையே இந்த விடயத்தில் குற்றம்சாட்டின.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளே போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டனர் என்றும் பேச்சுக்களை குழப்பினர் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
தமிழ் மக்களில் பலரும் கூட அவ்வாறான கருத்தினையே கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகள் இன்னும் பொறுமை காத்திருக்கலாம், அவசரப்பட்டு விட்டார்கள் என்பது போன்ற கருத்துக்கள் அப்போது காணப்பட்டன.
முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் போரை தொடங்கியதால் தான் இந்த அழிவுகள் ஏற்பட்டன என்றும் பொறுமையாக இருந்திருந்தால் பேச்சுக்களின் மூலம் தீர்வு ஒன்றை பெற்றிருக்க முடியும் என்றும் இன்றைக்கும் அறிவுரை கூறுபவர்கள் பலர் உள்ளனர்.
போரில் விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டதால் இத்தகைய விமர்சனங்கள் இலகுவாக முன்வைக்கப்படுகின்றன.
அந்தப் போரிலே விடுதலைப் புலிகள் வெற்றியை பெற்றிருந்தால், அவர்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்கள், சாதுரியமாக செயற்பட்டார்கள் என்ற பாராட்டுக்கள் கிடைத்திருக்கக் கூடும்.
ஏனென்றால், வெற்றி பெறும் தரப்பின் மீது எப்போதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை. அதன் முடிவுகளே சரியானவையாக எடுத்துக் கொள்ளப்படும்.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு வாரத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை சுவீடன் முன்வைத்தது.
ஆனால் வெற்றி பெற்ற தரப்பான இலங்கை அரசு, தனது இராஜதந்திரத்தின் மூலம், அந்த தீர்மானத்தை மாற்றி, போரில் வெற்றியீட்டிய இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இது வெற்றி பெற்ற தரப்பின் மீதான தவறுகள் எப்படி மறைக்கப்படுகிறது என்பதற்கு சரியான உதாரணம்.
விடுதலைப் புலிகளை விடயத்தில் இவ்வாறு தான் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பேச்சுக்கள் தொடர்பாக அல்லது போர் தொடர்பா விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்தார்களா? அவர்கள் அமைதி தீர்வு ஒன்றுக்கான வாய்ப்புகளை கெடுத்து விட்டார்களா என்பது போன்ற கேள்விகளை அடுத்த தலைமுறையினர் மத்தியில் எழுப்பும்.
இவையெல்லாம் நடந்து ஒன்றரை தசாப்தங்கள் ஆகிவிட்டன. இத்தகைய கட்டத்தில் சில உண்மைகளை விளங்கிக் கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் முனைய வேண்டிய தேவை இருக்கிறது.
இப்போது, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருக்கிறது.
வேட்பாளர் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்ற போது ரணில் விக்கிரமசிங்க, சுயாதீனமாக போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இது பெரும் தவறு என குற்றம் சாட்டியிருக்கிறார் பொது ஜன பெரமுனவில் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ.இந்தக் குற்றச்சாட்டு உண்மையானது.
பொதுஜன பெரமுன தனது சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு அவர் மறுத்துக் கொண்டே வந்தார்.
அந்தக் கட்டத்தில் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவி தமக்குத் தர வேண்டும் என்று பொதுஜன பெரமுன சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கும் அவர் பதிலளிக்காமல் நழுவிக் கொண்டிருந்தார்.
இந்த சூழலில் தான், ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக தான் போட்டியிடப் போவதாக காலியில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். முன்னதாக அவரது சகோதரர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப் பணத்தை செலுத்தியிருந்தார்.
அதற்குப் பின்னரும் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷவினருடன் பேச்சுக்களை நடத்தினார். ஆனால் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
ராஜபக்ஷவினர், ரணில் விக்ரமசிங்கவுடனான தேனிலவை முறித்துக் கொண்டு, சொந்தமாக வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது யாருடைய தவறு என்று கேள்வி எழுகிறது.
ரணில் விக்கிரமசிங்க அவசரப்பட்டு வேட்பாளராக போட்டியிடுவது பற்றி அறிவித்தது தவறா – அவரை கட்டுப்படுத்த நினைத்தது பொதுஜன பெரமுனவின் தவறா?
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்கிரமசிங்க தன் பக்கம் இழுத்துக் கொண்டு அவர்களை வைத்தே, பொதுஜன பெரமனவுடன் பேரம் பேசத் தொடங்கினார்.
ராஜபக்ஷவினரின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் தானாக முடிவுகளை எடுக்க முனைந்தார்.
அதேபோல பொதுஜன பெரமுனவோ ரணில் விக்கிரமசிங்கவை தங்களின் கைக்குள் வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இந்த பரஸ்பர நம்பிக்கையீனமும் குழிப்பறிப்புகளும் தான் இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான உறவின்முறிவுக்கு காரணம்.
இந்தச் சூழலை விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுக்களின் சூழலுடன் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடி என்ற ஒரு பாரிய சவாலை நாடு எதிர்கொண்டுள்ள சூழலில், அதனைப் புரிந்து கொண்டுள்ள இரண்டு முக்கிய அரசியல் தரப்புகளால், தங்களின் சொந்த அரசியல் நலன்களை ஒதுக்கி விட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு கூட ஒன்றாக இணைந்து பயணிக்க முடியவில்லை.
சிங்கள மக்களையே பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தரப்புகளே இவை.
நாட்டின் எதிர்காலம், பொருளாதார நலன் போன்றவற்றை கவனத்தில் கொண்டு, இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டிருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு கூட, அவர்களால் நின்று பணியாற்ற முடியவில்லை.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய விடுதலைப் புலிகளும், பெரும்பாலும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கமும் –இணக்கப்பாடும் புரிந்துணர்வும் இல்லாத ஒரு சூழலில், எவ்வாறு ஒரு நீடித்த பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது.
இரண்டு பிரதான பேரினவாதக் கட்சிகளும் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களின் போது, நேர்மையுடன் நடந்து கொண்டதாக ஒருபோதும் கூற முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்தோம், அவர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களது கட்சியை சிதைத்து விட்டார் . இனிமேலும் அவருக்கு ஆதரவு வழங்கினால், எங்களது கட்சி மிஞ்சியிருக்காது என்று, பசில் ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும், குற்றம்சாட்டுகிறார்கள்.
இதே குற்றச்சாட்டை தான் விடுதலைப் புலிகளும் ரணில் விக்கிரமசிங்கவின் மீது முன் வைத்தார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தி, கருணா தரப்பை தங்களின் பக்கம் இழுத்துக் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க. இதனை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தி, அவர்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தேன் என்று அவர் பெருமையோடு கூறியதையும் யாரும் மறந்து விட முடியாது.
விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தியது போன்று, பொதுஜன பெரமுனவையும் ரணில் பிளவுபடுத்தி விட்டார் என்று இப்போது, நாமல் ராஜபக்ஷ,கொந்தளிக்கிறார்.
இதே மனநிலை தான் அன்று விடுதலைப் புலிகளுக்கும் இருந்திருக்கும். அவர்களும் இதேபோன்று தான் கொந்தளித்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்து கொண்டு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் அவர்களால் எவ்வாறு பேசியிருக்க முடியும்?
இன்று மொட்டு எடுத்து நிலைப்பாடு சரியானதென்றால், அன்று புலிகள் எடுத்த நிலைப்பாடும், சரியானதாகத் தானே இருக்க வேண்டும்.
பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் கூட விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களில் ஆர்வம் காட்டவில்லை. போருக்குத் தயாராவதிலேயே அக்கறை செலுத்தினார்.
நீண்ட பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்ற போது, விடுதலைப் புலிகள் தாங்கள் பலவீனப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். போருக்குச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவை எடுத்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரத்துக்குப் பலியாகாமல், அவரிடம் இருந்து கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக ராஜபக்ஷவினர், தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கும் போது, அதே காரணத்திற்காக விடுதலைப் புலிகள் போரை தொடங்கும் முடிவை எடுத்தது எவ்வாறு தவறானதாக இருக்க முடியும்?
சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு தரப்புகளே, நீண்டநாட்கள் ஒருமித்து செயற்பட முடியாமல் இருக்கும்போது- ஒருமித்த பாதையில் பயணிக்க முடியாமல் இருக்கும்போது – ஒருவரை மற்றவர் பலவீனப்படுத்த முடியாமல் இருக்கும்போது – இரு வேறு இனங்களையும் அவற்றின் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யும், தரப்புக்களால் எவ்வாறு, ஒன்றுபட்டுப் பயணித்திருக்க முடியும் என்ற கேள்வி நியாயமானதல்லவா?
அன்றைய சூழலையும் இன்றைய சூழலையும் பொருத்திப் பார்க்கின்ற எவராலும், அன்று விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தவறானதாக கொள்ள முடியாது.
ஆனால் ஒன்று, விடுதலைப் புலிகள் தங்களின் சூழலை சரியாக பிரசாரப்படுத்திக் கொள்ளவில்லை, வெளியுலகத்திற்கு நியாயப்படுத்தி கொள்ளவில்லை, வெளியுலகம் அதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை. இது அவர்களின் பக்கத்தில் இருந்த பெரும் தவறு.
அன்றிருந்த பூகோள அரசியல் சூழலும் அதற்கு ஒரு காரணம். அதனால் தான் இலங்கை அரசாங்கத்தினால் இலகுவாக அவர்களுக்கு எதிராக, சர்வதேச வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கி, அதன் ஆதரவுடன் முழுமையாக அவர்களை அழிக்க முடிந்தது.
– சுபத்ரா