தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் (David Ben Gourion) ஒருவர்.

மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708 ஆம் ஆண்டின் இயார் மாதத்தின் 5 ஆம் தேதியில், டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தவர் அவர்தான்.

அன்று பாலத்தீனத்தின் பிரிட்டிஷ் ஆட்சி சட்டப்பூர்வமாக காலாவதியானது; பிரிட்டிஷ் படைகள் இன்னும் வெளியேறவில்லை. பிரகடனத்தை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா அவருக்கு அழுத்தம் கொடுத்தது.

ஆனால் பென்-குரியன், இஸ்ரேலின் பிரகடன ஆவணத்தில் கூறியிருப்பது போல், “யூத மக்கள், இறையாண்மையுள்ள சொந்த நாட்டில் , தங்கள் சொந்த தலைவிதியின் எஜமானர்களாக இருக்க வேண்டும் என்ற இயற்கையான உரிமை” அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று என்பதில் உறுதியாக இருந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆவணத்தின் முதல் வரைவை தயாரித்து, மத மற்றும் மதச்சார்பற்ற நபர்களிடமிருந்து பல திருத்தங்கள் பெற்ற பிறகு, அதை இறுதிசெய்வதற்கு அவர்தான் பொறுப்பு.

இஸ்ரேலின் இருப்பை அறிவித்து ஆரம்பத்தில் ஆட்சி செய்யும் கவுன்சிலையும் அவர் உருவாக்கியிருந்தார்.

தேசிய விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் அந்த கவுன்சிலில் இருந்தனர். அவர்கள் தங்கள் பெயர்களை எபிரேய மொழியில் மாற்ற வேண்டும் என அவர் கூறினார். (கோல்டா மெயர்சன் கோல்டா மீர் ஆனார்).

நாட்டை உருவாக்குவதற்கான ஒவ்வொரு படியிலும் அவரது கைரேகைகள் இருந்தன. உருவாக்கியதில் மட்டுமில்லாமல், பின்னர், பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் நாட்டின் கடிவாளத்தை கைப்பற்றினார்.

அதனால்தான் அவர் இஸ்ரேலில் “தேசத் தந்தை” என்று நினைவுகூரப்படுகிறார்.

குரேனிலிருந்து பென் குரியன்

1886-ல் ஜார் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த போலந்தில் டேவிட் க்ரூன் பிறந்தார். அவரது பெயரை 24 ஆண்டுகள் கழித்து பென்-குரியன் என்று மாற்றிக் கொண்டார்.

ஐரோப்பாவில் தீவிர யூத-எதிர்ப்பு சூழலில் வளர்ந்த அவர், சியோனிச இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இந்த இயக்கம் யூதர்களுக்கென ஒரு சொந்த நாட்டை உருவாக்க முயன்றது. அவரது தந்தை ப்லோன்ஸ்க் நகரில் இந்த இயக்கத்தின் தலைவராக இருந்தார்.

1906 ஆம் ஆண்டில் ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த பாலத்தீனத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு விவசாயத் தொழிலாளியாகப் பணியாற்றினார். அடுத்த நான்கு தசாப்தங்களுக்கு சியோனிஸ்டுகளுக்கு உத்வேகம் அளிக்கும் தத்துவத்தை அவர் நடைமுறைப்படுத்தினார்.

நூற்றாண்டுகளாக உடலுழைப்பு அற்ற வேலைகளை செய்ய பயிற்சி பெற்ற யூதர்களிடமிருந்து வித்தியாசமாக, “புதிய யூதர்களை” உருவாக்க முயன்றார்.

தங்கள் கைகளால் நிலத்தைப் பயிரிட வேண்டும் என்ற எண்ணினார். அவர் பெருமிதத்துடன் தன்னை அதற்கு அர்ப்பணித்தார். ஆயினும், தனக்கு விதிக்கப்பட்டது அரசியல் , விவசாயம் அல்ல என்பதை விரைவில் உணர்ந்தார்.

அவர் இணைந்திருந்த போலே சியான் என்ற சோசலிசக் கட்சியின் 1907 அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது போல, அவரது இலட்சியம், அந்த நிலத்தில் யூதர்களுக்கு அரசிய சுதந்திரத்தை அடைவதுதான்.

தனது அரசியல் பொறுப்புகளுக்கு தயாராக, பென்-குரியன் துருக்கியில் சட்டம் படிக்கச் சென்றார். அது எதிர்கால இஸ்ரேலுக்கு உதவியாக இருக்கும் என அவர் நம்பினார்.

ஆனால் முதல் உலகப் போர் வெடித்தபோது, அவர் ஒட்டோமான் பேரரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிறகு, அவர் நியூயார்க் சென்றார். அங்கு அவர் பாலின் முன்வைஸை மணந்தார். மேலும் சியோனிஸ்ட் நோக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்தார். 1917 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் பால்ஃபூர் பிரகடனத்தை வெளியிட்டது. அதில் , யூதர்களுக்கு இல்லமாக அமையும் ஒரு தேசத்தை தருவதாக உறுதியளித்தது.

அமெரிக்கா – இஸ்ரேல் இணைபிரியா நட்பின் ரகசியம் என்ன? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஏன் தேவை?

சிறிது காலம் கழித்து, அவர் பிரிட்டிஷ் ராணுவத்தின் யூத படையில் சேர்ந்தார். பாலத்தீனத்தை ஒட்டோமான் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்கான போருக்கு சேர மீண்டும் மத்திய கிழக்குக்குப் பயணம் செய்தார்.

அந்த படை வந்த போது, பிரிட்டிஷ் ஏற்கெனவே ஒட்டோமான்களை தோற்கடித்துவிட்டனர். மேலும் அவர்களின் ஆட்சியின் கீழ், யூதர்களுக்கான அந்த தேசத்தை உருவாக்கும் பணி தொடங்கியது.

David Ben Gourion

குரியன் உருவாக்கிய தூண்கள்

யூத தேசத்துக்கு உழைப்பே அடிப்படை என்று நம்பிய டேவிட் பென்-குரியன் 1920 ஆம் ஆண்டில் ஹிஸ்டட்ரூட் என்ற இஸ்ரேல் தொழிலாளர் அமைப்பை நிறுவினார்.

இது வங்கி, சுகாதார திட்டங்கள், கலாச்சாரம், வேளாண்மை, விளையாட்டு, கல்வி, காப்பீடு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு துறைகளில் ஒரு அரசு போலவே செயல்பட்டது.

இஸ்ரேலின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியது மட்டுமில்லாமல், 1980களில் சோசலிச பொருளாதாரத்திலிருந்து விலகி செல்லும் வரை, நாட்டின் முக்கிய தூண்களில் ஒன்றாகவும் இந்த தொழிலாளர் அமைப்பு இருந்தது.

பென்-குரியன் பாலத்தீனத்தில் ஒரு படைபிரிவை உருவாக்க ஊக்குவித்தார்.

இரண்டாம் உலகப் போர் மூண்டபோது, அவர் நேச நாடுகளுக்காக போராட யூதர்களை ஊக்குவித்தார். மேலும் நாஜிக்களின் யூத இனப்படுகொலையிலிருந்து தப்பி ஓடிய யூதர்கள் தப்பிக்க, ஒரு ரகசிய ஏற்பாடும் செய்தார்.

போருக்குப் பிறகு, யூத குழுக்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டன. பென்-குரியன் ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் கொள்கையை ஆதரித்தாலும், கொடூரமான மற்றும் பாரபட்சமற்ற செயல்களை மேற்கொண்ட தீவிர வலது சாரி குழுக்களை அவர் கண்டித்தார்.

சுதந்திரம் கிடைத்ததும், அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களும் கலைக்கப்பட்டு இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய படை விரைவில், இஸ்ரேல் என்ற தேசத்தை படையெடுக்க முயன்ற அரபு நாடுகளின் படைகளை போரிட்டு தோற்கடித்தது.

பல் முனை தாக்குதல்

1948, மே 14 அன்று, ஜெருசலேம் டிரான்ஸ்ஜோர்டனின் அரபு படையால் முற்றுகையிடப்பட்டது, வடக்கில், யூத குடியிருப்புகள் சிரிய மற்றும் இராக் படைகளால் தாக்கப்பட்டன, அதே நேரத்தில் எகிப்தியர்கள் தெற்கிலிருந்து படையெடுத்தனர்.

ராணுவ நடவடிக்கைகளின் தலைமையை ஏற்றுக்கொண்டு, பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் ஆகிய 62 வயது தலைவருக்கு உச்சபட்ச சோதனையின் தருணமாக இது அமைந்தது.

அடோல்ஃப் ஐஹ்மென்: ’60 லட்சம் யூதர்களைக் கொன்ற’ ஹிட்லரின் விஸ்வாசியை இஸ்ரேல் உளவுத்துறை சிறைபிடித்த கதை

அவரது சில முடிவுகள் கேள்விக்குரியதாக இருந்தாலும், இறுதியில் பென்-குரியன் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஜூடாஸ் மக்காபியஸின் பிரச்சாரத்திற்குப் பிறகு முதல் யூதப் போரை வென்றதற்கான பெருமை பெற்றார்.

இதனால், அவர் பலருக்கு கிட்டத்தட்ட ஒரு வியப்புக்குரிய மாயாஜாலமான உருவமாக தோன்றினார். தனது ஏராளமான எதிரிகளை வென்று நாட்டின் இருப்பை உறுதி செய்யும் ஞானமுள்ள தந்தையாக அவர் பார்க்கப்பட்டார்.

ஆனால் சிலருக்கு கிடைத்த ஆசீர்வாதம் மற்றவர்களுக்கு கண்டனமாக இருந்தது.

ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேசத்தின் பிரிவினையை அரபு பாலத்தீனியர்கள் நிராகரித்தனர். ஏனென்றால், அப்போதிருந்து அவர்கள் அனுபவித்து வரும் பேரழிவு, நாக்பா என்பதன் தொடக்கமாக அது இருந்தது.

1948 ஆம் ஆண்டு போருக்கு முன்பு, 1.4 மில்லியன் பாலத்தீனியர்கள் பிரிட்டிஷ் பாலத்தீனில் வசித்து வந்தனர்.

அவர்களில் 900,000 பேர் இஸ்ரேல் நாடாக மாறிய பகுதியில் வசித்தனர். அந்த மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள், 700,000 முதல் 750,000 பேர் வரை, மிக தீவிரமாக வெளியேற்றப்பட்டனர், அல்லது எல்லை தாண்டி – சிரியா, லெபனான், எகிப்து, டிரான்ஸ்ஜோர்டன் – அல்லது போரில் ஈடுபட்ட அரபு படைகள் கட்டுப்படுத்திய பகுதிகளுக்கு (மேற்கு கரை மற்றும் காஸா) தப்பி ஓடினர்.

வெகு சிலர் தவிர, அவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இது போரின் போது வகுக்கப்பட்ட இஸ்ரேலிய அரசின் கொள்கையாகும். பாலத்தீனியர்களின் நக்பா ஒருபோதும் முடிவடையாத ஒன்றாகும். மேலும் ஆரம்ப காலத்தில், அவர்களை பாதித்த முடிவுகளுக்கு தலைமை தாங்கியவர் பென்-குரியன் ஆவார்.

சுதந்திரப் போருக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான அரபு ஊடுருவல்களுக்கு எதிராக விரைவான கடுமையான பழிவாங்கும் நடவடிக்கைகளை பென்-குரியன் மேற்கொண்டார். இது பெரும்பாலும் ஐக்கிய நாடுகளை அலற வைத்தது. அண்டை நாடுகளின் தொடர்ச்சியான நிராகரிப்புக்கு இஸ்ரேல் ஆளானது.

1949 மார்ச் மாதத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலின் முதல் அரசாங்கத்தின் பிரதமரானார். அப்போதிலிருந்து 1960கள் வரை, பல அரசியல் எதிரிகள் இருந்தபோதிலும், அவர் கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டுடன் இஸ்ரேலின் அரசியல் வாழ்வை ஆட்சி செய்தார்.

எனினும், அவர் தேசத்தில் உள்ள பல்வேறு குழுக்களிடையே கிட்டத்தட்ட வழிபாடு என்று கூறும் அளவிலான மரியாதையை பெற்றிருந்தார். எனவே பாதுகாப்பு விவகாரங்களில் முடிவு செய்யவும் வெற்றி பெறவும், வெளிநாட்டு விவகாரங்களிலும் கூட அவரது அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பலமுறை, அடுத்தடுத்த கூட்டணிகளை தனது விருப்பப்படி செய்ய அவர் இயலாது போனபோது, அவர் ராஜினாமா செய்து கிப்புட்ஸ் ஸ்னே போகரில் உள்ள தனது குடிசைக்குச் சென்றார். ஆனால் அவர் கோரியதைப் பெற அவர் இவ்வாறு செய்வதாக மிரட்டுவதே போதுமானதாக இருந்தது.

1953 ஆம் ஆண்டில், அவர் “களைப்பு, களைப்பு, களைப்பு” என்று அறிவித்து 14 மாதங்கள் ஓய்வுபெற்றார்.

மீண்டும் அவர் பாதுகாப்பு அமைச்சராக ஜெருசலேம் திரும்ப அழைக்கப்பட்டார். அதன் பிறகு, 1955 நவம்பரில், அவர் பிரதமர் பதவிக்குத் திரும்பினார். அப்போதுதான் இஸ்ரேல் மற்றொரு போருக்கு இட்டுச்செல்லும் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதுவே பென்-குரியன் வாழ்க்கையில் மிகவும் இருண்ட தருணமாகவும் இருந்தது.

வெற்றியும் தோல்வியும்

எகிப்திடமிருந்து வரும் தாக்குதலே இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நம்பினார் பென்-குரியன். சோவியத் ஒன்றியத்திலிருந்து ஆயுதங்கள் பெற்றிருந்த எகிப்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் இணைந்து தாக்கும் என கருதினார் அவர். எனவே எகிப்திய ராணுவத்தின் மீது “தற்காப்பு போரை” தொடங்கினார்.

சூயஸ் கால்வாயை கைப்பற்ற விரும்பிய பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள், ஆரம்பத்தில் வெற்றி பெற்றன. ஆனால், அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தது. அனைத்து படையெடுப்பாளர்களும் எகிப்தை விட்டு வெளியேறும்படி ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோரிக்கையை ஆதரித்தது.

அதுமட்டுமல்லாமல், சோவியத் ஒன்றியம் தலையிடுவேன் என்ற அச்சுறுத்தலால், இந்த திட்டம் முழுவதும் சீரழிந்தது.

பென்-குரியன் சலுகைகளுக்காக வலியுறுத்தினார், ஆனால் அவர் தோல்வியை ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்களை மரண முகாம்களுக்கு அனுப்பிய கெஸ்டபோ கர்னல் அடோல்ஃப் ஐக்மனை விசாரிக்க முடிவு செய்தபோது, அவர் மீண்டும் உலக நாடுகளின் விமர்சனத்துக்கு ஆளானார்.

அர்ஜென்டினாவில் இருந்து அந்த நாஜி தலைவரை கடத்தியது விமர்சனத்துக்கு உள்ளானது. அவரை இஸ்ரேலில் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கவலையை ஏற்படுத்தியது: ஐக்மனை ஜெர்மன் அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் மட்டுமே நியாயமான விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்றும் எதிர்ப்புகள் இருந்தன.

இஸ்ரேல் “தார்மீகக் கண்ணோட்டத்தில்” அவர் விசாரிக்கப்படக்கூடிய ஒரே இடம் என்று பென்-குரியன் அறிவித்தபோது, அவர் அகம்பாவம் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

இம்முறை, பென்-குரியனை விடுவித்தது அவருக்கு சாதகமான ஆதாரங்கள்.

1961 ஆம் ஆண்டில் விசாரணை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. நீதிபதிகள் மிகவும் சிறப்பாக பணியாற்றுவதைக் உலகம் காண முடிந்தது.

மேலும், ஐச்மனின் ஜெர்மானிய வழக்கறிஞர் ராபர்ட் செர்வாஷியஸ், மேற்கு ஜெர்மனியில் நடந்திருந்தால் ஐச்மனுக்கு கிடைத்திருப்பதை விட நியாயமான விசாரணையாக இது இருந்தது என கூறினார்.

அவரது நாட்டில் பென்-குரியனின் உயர்ந்த தகுதி மேலும் உயர்ந்தது. அவரது ஆட்சி, எவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், முடிவடையாது என்று தோன்றியது.

ஆனால், பதவியில் நீண்ட காலம் இருக்கும் அரசியல்வாதிகள் கசப்பான விதிக்கு ஆளாவார்கள். கடந்த கால தவறுகள் அவர்களைத் துரத்தும். அவர்களின் சலித்துப்போன பின்தொடர்பவர்கள் ‘போதும்’ என்று கூறுவார்கள்.

1963 ஆம் ஆண்டில், அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

தனது பிரதமர் பதவியின் கடைசி ஆண்டுகளில், அமைதி மற்றும் நல்ல அண்டை நட்புக்காக அனைத்து அண்டை நாடுகளுக்கும் அவர்களின் மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை உதவிகரம் நீட்டினார்.

ஆனால், அவர் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அரபு தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பல திட்டங்களைத் தொடங்கியபோதிலும், எதுவும் பலன் தரவில்லை.

1970 ஆம் ஆண்டில், 84 வயதில், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

இஸ்ரேலுக்குள் ஏற்படும் உள்நாட்டு காயங்கள் குறித்து பென்-குரியனால் உணர முடிந்தது.

1967 போருக்குப் பிறகு, ஜெருசலேமுக்கு வெளியே அரபு பகுதிகளைத் தக்கவைப்பதை அவர் எதிர்த்தார்.

1973 -ல் எகிப்திய மற்றும் சிரிய படைகள் இரண்டு தனித்தனி முனைகளில், இஸ்ரேல் தயார் நிலையில் இல்லாத போது தாக்கின. பென்-குரியனின் பார்வையில், இறுமாப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் ஆபத்தான அறிகுறியாக இந்த யோம் கிப்பூர் போர் இருந்தது.

அந்தப் போர் முடிந்து இரண்டு மாதங்களில் அவர் 87 வயதில் காலமானார்.

அவர், இறுதி வரை, உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் அபரிமிதமான ஆற்றல் கொண்ட மனிதர், “கிட்டத்தட்ட வன்முறையாக துடிப்பானவர்,” என்று இஸ்ரேலிய எழுத்தாளர் அமோஸ் ஓஸ் கூறியுள்ளார்.

அவர் ரஷ்யன், யிடிஷ், துருக்கி, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளைப் பேசினார். அவர் அரபியைப் படித்தார். ஸ்பானிஷ் மொழியைக் கற்றார். 56 வயதில், பழைய ஏற்பாட்டின் கிரேக்க பதிப்பான செப்டுஜின்ட்டைப் படிக்க கிரேக்கம் கற்றார்; 68 வயதில், புத்தரின் உரையாடல்களைப் படிக்க சமஸ்கிருதம் கற்றார்.

அவர் மத்தியதரைக்கடலின் கரையில் யோகா செய்தார், அவரை தலைகீழாகக் காட்டும் புகைப்படங்கள் கிண்டல் செய்யப்பட்டன.

எனினும் அவரது நண்பர்கள், அன்புடன் “ஹசகேன்” அல்லது “முதியவர்” என்று அழைக்கப்படும் அவர், தலைகீழாக இருக்கும்போது, அவரது எதிராளிகள் தலைகீழாக இருப்பதை விட புத்திசாலியாக இருந்தார் என்று கூறினர்.

காலங்கள் செல்லச் செல்ல, பென்-குரியன் மீதான விமர்சனங்கள் மறைந்தன. அவர் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் ஒரு இலக்கைக் கொண்டு அதை அடையவும் செய்தார் என பார்வையே நீடித்தது.

ஆனால் அவரது வாழ்க்கை இஸ்ரேலின் உருவாக்கத்துடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால், அவர் உருவாக்க உதவிய நாடு போலவே அவர் நேசிக்கப்படுகிறார், வெறுக்கவும்படுகிறார்.

Share.
Leave A Reply