அமெரிக்கத் தயாரிப்பான எவ்-16 ரக போர் விமானங்கள் முதல் தடவையாக உக்ரேனுக்கு கிடைத்துள்ளன. இவ்விமானங்கள் முதல் தடவையாக உக்ரேனில் தரையிறங்கியதாக லித்துவேனிய வெளிவிவகார அமைச்சர் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒலியைவிட இருமடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய எவ்-16 விமானங்கள் அதிகபட்சம் 3200 கிலோமீற்றர் தூரம் பறக்கக்கூடியவை. அதி நவீன ரேடார் மற்றும் ஏவுகணை முறைமையைக் கொண்டுள்ள எவ்-16 போர் விமானங்கள், எதிரிப்படைகளின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் இடைமறித்து தாக்கக்கூடியவை.
1974ஆம் ஆண்டிலிருந்து 4,000க்கும் அதிகமான எவ்-16 ரக விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது 25 நாடுகளிடம் சுமார் 2000 எவ்-16 விமானங்கள் பாவனையில் உள்ளன.
வெளிநாடுகளுக்கு எவ்-16 விமானங்களை விநியோகிப்பதற்கு அமெரிக்க அரசு கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறது.
பல்வேறு அரசியல், இராணுவ, பாதுகாப்புத்துறை அளவுகோல்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இவ்விமானங்களை வாங்கும் நாட்டின் ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் நிலைவரம், அமெரிக்காவுடனான உறவு போன்ற பல விடயங்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
ரஷ்யாவின் போரை எதிர்கொள்வதற்கு எவ்-16 போன்ற நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரேன் நீண்டகாலமாக கோரி வந்தது.
ஆனால், எவ் 16 ரக போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்குவது ரஷ்யாவுடனான யுத்தத்தை மேலும் தீவிரமாக்குவதற்கு வழிவகுக்கும் என மேற்குலக நாடுகள் எண்ணின. இதனால் இவ்விமானங்களை உக்ரேனுக்கு வழங்குவதற்கு அந்நாடுகள் தயங்கின.
எனினும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எவ்-16 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்குவதற்கு 2023 ஆகஸ்ட்டில் ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்திருந்தார்.
F-16 jets
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற நடைபெற்ற நேட்டோவின் 75 ஆவது ஆண்டு நிறைவு உச்சிமாநாட்டின்போது, உக்ரேனுக்கு எவ்-16 விமானங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா நேரடியாக உக்ரேனுக்கு எவ்-16 விமானங்களை விநியோகிக்க மாட்டாது.
எனினும், நேட்டோ அங்கத்துவ நாடுகளாக பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே ஆகியன உக்ரேனுக்கு 60 இற்கும் அதிகமான விமானங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
இந்நிலையில், உக்ரேனுக்கு முதல் தொகுதி எவ்-16 விமானங்கள் கிடைத்துள்ளதாக தம்மை இனங்காட்ட விரும்பாத அமெரிக்க, உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர் என செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரேனுக்கு முதல் கட்டமாக எந்த நாட்டினால், எத்தனை எவ்-16 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. இவ்விமானங்கள் கிடைத்தமை தொடர்பில் உக்ரேனிய விமானங்கள் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், உக்ரேனில் எவ்16 உள்ளதாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கடந்த புதன்கிழமை பதிவிட்டுள்ள, லித்துவேனிய வெளிவிவகார அமைச்சர் கெப்ரியேலியஸ், லான்ட்ஸ்பேர்கிஸ், இது சாத்தியமற்றதை முற்றிலும் சாத்தியமாக்கும் மற்றொரு விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனுக்கு இக்கோடைப் பருவத்தில் 6 எவ்-16 விமானங்கள் கிடைக்கும் எனவும். இவ்வருடத்துக்குள் 20 எவ்-16 விமானங்களை உக்ரேன் பெற்றிருக்கும் எனவும் கடந்த மாதம் புளூம்பேர்க் தெரிவித்திருந்தது.
உக்ரேன் போர்க்களத்தில்…
எவ்-16 விமானங்களின் வருகையானது உக்ரேன் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவ்விமானங்களின் ரஷ்ய – உக்ரேன் போரின் போக்கை தலைகீழாக மாற்றிவிடும் என எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரேனில் தொடர்ச்சியாக குண்டுவீச்சுகளை நடத்தும் ரஷ்ய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் இடைமறிப்பதற்கு எவ்-16 விமானங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலிருந்து தரையை இலக்கு வைக்கக்கூடிய ஏவுகணைக் கொண்டுள்ள எவ்-16 விமானங்கள் ரஷ்ய துருப்புகள் மற்றும் ஆயுதங் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படக்கூடும்.
எவ்-16 விமானத்தின் அதி நவீன ரேடார் உதவியுடன், ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களான மிக்-29, எஸ்.யூ24, எஸ்.யூ.27 ஆகியவற்றைவிட அதிக தொலைவிலிருந்து இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.
எனினும், 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.யூ 35 மற்றும் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.யூ.57 போன்ற அதி நவீன போர் விமானங்களும் ரஷ்யாவிடம் உள்ளன.
தரைவழி இராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்கு வானில் ஆதிக்கம் செலுத்துவதும் முக்கியமானது. ஆனால், ரஷ்யாவும் நவீன வான் பாதுகாப்பு முறைமைகளை கொண்டுள்ள நிலையில், முன்னரங்க போர்க்களத்தில் தரைவழி தாக்குதல்களுடன் நகரும் உக்ரேனிய படையினருக்கு எவ்-16 விமானங்கள் உதவ முற்படுவது சிக்கலானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
எவ்வாறெனினும், உக்ரேனிடம் எவ்-16 விமானங்கள் இருப்பதானது ரஷ்ய விமானங்களிடம் ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுடன், உக்ரேனிய படையினருக்கு மனவலிமையை ஏற்படுத்தக்கூடியதாகும்.
விமானிகளின் பயிற்சி
வழக்கமாக மேற்குலக நாடுகளின் எவ்-16 போர் விமானிகளுக்கு 3 வருட கால பயிற்சி வழங்கப்படும். ஆனால், உக்ரேனிய விமானிகளுக்கு 9 மாதகால துரிதப் பயிற்சியே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உக்ரேனிய விமானிகளின் செயற்பாடுகளில் வரையறைகள் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அத்துடன், ரேடார் நிலையங்கள், வலுவான விமானக் கொட்டகைகள், உதிரிப்பாகங்களின் விநியோக வலையமைப்புகளை உக்ரேன் ஸ்தாபிக்க வேண்டியிருக்கும். ஓடுபாதையிலுள்ள குப்பைகள் விமான என்ஜினுக்குள் உள்ளீர்க்கப்படும் ஆபத்தை தவிர்ப்பதற்காக தரமான விமான ஓடுபாதைகள் போன்றவையும் எவ்-16 விமானங்களை இயக்குவதற்காக தேவைப்படும்.
எவ்16 விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கு அனுபவம் இல்லாததால் அவர்கள் ரஷ்ய விமானங்களுடன் நேரடி மோதல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க முற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.
‘மந்திரக் குளிசை’ அல்ல
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நேட்டோ நாடுகள் வழங்கும் எவ்-16 விமானங்கள் அழிக்கப்படுவதை காண ஆவலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கொவ், உக்ரேனுக்கு வழங்கப்படும் எவ்-16 விமானங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ‘எவ்-16 விமானங்கள் இந்த யுத்தத்தின் போக்கை மாற்றக்கூடிய ‘மந்திரக் குளிசை’ அல்ல எனக் குறிப்பிட்டிருந்தார்.
எவ்-16 விமானங்களை அழிக்கும் ரஷ்ய படையினருக்கு ஏற்கெனவே வெகுமதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் வசமுள்ள எவ்-16 விமானங்களை தரையிலேயே வைத்து அழிப்பதற்கும் ரஷ்ய படையினர் முற்படக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்விமானங்களுக்குப் பொருத்தமாக அமையக்கூடிய உக்ரேனின் மட்டுப்படுத்தப்பட்ட ஓடுபாதைகளை ஏற்கெனவே ரஷ்ய படையினர் இலக்குவைத்து வருகின்றனர் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து தனது விமானங்களை பாதுகாப்பதற்காக வெளிநாடுகளின் தளங்களிலும் சில போர் விமானங்களை தான் நிறுத்திவைக்கக்கூடும் என உக்ரேன் முன்னர் தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேனிய போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிரக்கும் மேற்கு நாடுகளின் வான்தளங்கள், உக்ரேனிய படைகள் தொடர்பான இலக்குகளாக கருதப்படும்; என எச்சரித்திருந்தார்.
ஆனால், உக்ரேனுக்கு வழங்கப்படும் எவ்-16 விமானங்கள் உக்ரேனிலேயே நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Su-35S
உக்ரேன் போரில் எவ்-16 விமானங்களுக்கு பெரும் சவால்களில் ஒன்றாக ரஷ்யாவின் எஸ்.யூ.35 ரக விமானம் அமையக்கூடியது. ஒரே நேரத்தில் 8 இலக்குகளை கையாள்வதற்கு உதவக்கூடிய நீண்டதூர ரேடார் வசதியை எஸ்.யூ.35 விமானங்கள் கொண்டுள்ளன.
எவ்-16 விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படைத்தளங்களிலேயே அவற்றை அழிப்பதற்கு ரஷ்யா முற்படக்கூடும் என்றபோதிலும், அத்தகைய தாக்குதல்களிலிருந்து அவ்விமானங்களை பாதுகாப்பதற்கான வலுவான பாதுகாப்பு முறைமை உக்ரேனிடம் உள்ளதாக உக்ரேனிய விமானவியல் நிபுணர் அனடோலி க்ராப்சின்ஸ்கி கூறியுள்ளார்.
யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து உக்ரேனிய வான்படை தளங்களை அழிப்பதற்கு ரஷ்யா முயற்சிக்கின்ற போதிலும் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
‘ரஷ்ய தாக்குதல்களிலிருந்து, தனது நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதற்கான உக்ரேனிய விமானப் படையின் ஆற்றல்களை எவ்-16 விமானங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.
அத்துடன் ரஷ்யாவில் உக்ரேன் தாக்குதல்கள் நடத்தக்கூடிய எல்லையையும் அவை விரிவுபடுத்துகின்றன.
ரஷ்யாவின் பெரும் எண்ணிக்கையிலான ஏவுகணைத் தாக்குதல்கள், வான் வழி குண்டுவீச்சுகள், எல்லைப் பிராந்தியங்களில் எஸ்-300 ரக ஏவுகணைகளை நிலைநிறுத்தல் உட்பட தற்போது உக்ரேன் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்-16 விமானங்கள் உதவும் எனவும் க்ராப்சின்ஸ்கி கூறியுள்ளார்.
கடந்த வருடம் டென்மார்க்கில் அந்நாட்டுப் பிரதமர் மெத்தே பிரெட்ரிக்சனுடன் எவ்-16 விமானமொன்றை உக்ரேனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பார்வையிட்டபோது…
(ஆர்.சேதுராமன்)