அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்து வருகின்ற சூழலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பள்ளி ஆசிரியரும், கால்பந்து பயிற்சியாளரும், ராணுவத்தில் பணியாற்றியவருமான டிம் வால்ஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

மின்னசோட்டா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் டிம் வால்ஸை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கமலா ஹாரிஸ்.

“கமலா ஹாரிஸுடன் தேர்தலை எதிர்கொள்வது வாழ்நாள் கௌரவமாக கருதுகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வால்ஸ்.

மேலும், “முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அனுபவத்தைப் போல் இது உள்ளது. இதை நிறைவேற்றுவோம்,” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்தடுத்த புதிய நிகழ்வுகள் அரங்கேறின.

துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

துணை அதிபர் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்று ஜனநாயகக் கட்சியினர் யோசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த இடத்திற்கு டிம் வால்ஸ் வந்துள்ளார்.

துணை அதிபர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?

“நீங்கள் எப்போதாவது உடலுறவு வைத்துக் கொள்ள பணம் கொடுத்திருக்கிறீர்களா?

கருக்கலைப்பு செய்ய எப்போதாவது பணம் செலுத்தியிருக்கிறீர்களா?

நீங்கள் எப்போதாவது தன்பாலின ஈர்ப்பினருடன் தொடர்பு கொண்டீர்களா?”

முந்தைய தேர்தலில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்வின் போது பங்கேற்றவர்களிடம் கேட்ட கேள்விகள் தான் இவை.

ஒவ்வொரு முறையும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் இது போன்று 200 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின்புதான் அந்த நபரின் வேட்புமனு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

‘வெட்டர்ஸ்’ (vetters) என்று அழைக்கப்படும் பிரசார அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் நேரத்தை செலவிட்டு, துணை அதிபர் தேர்வுமுறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அவர்களை அனைத்து தகவல்களையும் ஒரு மாத காலத்திற்குள் திரட்டுவார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துணை அதிபரை தேர்வு செய்யும் செயல்முறையின்போது, கமலா ஹாரிஸ் ஒரு டஜன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024

துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிம் வால்ஸ்

சோதனைக்கு உட்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்கள்

துணை அதிபர் வேட்பாளர் தேர்வை சவாலானதாக ஆக்குவது போட்டியாளர்களின் பின்புலத்தை ஆய்வு செய்வதுதான்.

அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டர்வர்களின் பின்புலத்தை ஆராய்வது போல, துணை அதிபர் போட்டியாளர்களின் பின்னணி பற்றிய சோதனைகளை அமெரிக்கப் புலனாய்வு முகமை செய்வதில்லை.

ஒரு போட்டியாளரின் வருமானம், வரிக் கணக்குகள் மற்றும் மருத்துவ வரலாற்றை ‘வெட்டர்ஸ்’ ஆராய்வார்கள். அவர்கள் போட்டியாளர்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் உள்நுழைந்து சோதனை செய்யலாம்.

போட்டியாளரின் மகன்/மகள்களின் சமூக ஊடக பதிவுகளை அலசுவார்கள். தேவை இருப்பின் பேரப்பிள்ளைகளின் சமூக ஊடகக் பக்கத்தை கூட அலசுவார்கள்.

திருமண உறவு பற்றிய விவகாரங்கள் அல்லது வேறு ஏதேனும் தீர்க்கப்படாத ரகசிய விஷயங்களும் முழுமையாக ஆராயப்படும்.

சாத்தியமான வேட்பாளர் கூறிய அல்லது எழுதிய ஒவ்வொரு பதிவின் வார்த்தைகளையும் அவர்கள் சரிபார்ப்பார்கள்.

2008இல், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் இவானும் இருந்தார்.

ஜான் கெர்ரி, பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு சாத்தியமான துணை அதிபர்களை தேர்வு செய்யும் செயல்முறையில் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞர் ஜிம் ஹாமில்டன், பிபிசியிடம் பேசுகையில், “இந்த செயல்முறைக்குப் பிறகு, ரகசியத்தன்மையை பாதுகாக்க, செயல்முறை குறிப்புகள் அழிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

அவர் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குறித்து மதிப்பீடு செய்துள்ளார், இந்த வழக்கறிஞர்கள் கிளிண்டனின் துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் செயல்முறையில் பங்காற்றினர்.

“துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி இருக்கும், அவர்கள் அவ்வளவு எளிதில் பேசி விடமாட்டார்கள். ஆனால் இந்த செயல்முறைக்கு உறுதியளித்தவுடன், அவர்கள் தங்கள் பதில்களில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமளிக்கும்” என்று ஹாமில்டன் விவரித்தார்.

2008 இல் பராக் ஒபாமா உடன் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதற்கான போட்டியில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் முக்கியமானவர் இவான் பேஹ்.

இந்த மதிப்பீடு செயல்முறை முடிவுக்கு வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுத்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

“என்னை ஆய்வு செய்ய ஒரு குழு ஒதுக்கப்பட்டது. ஒரு கணக்காளர், ஒரு வழக்கறிஞர், ஒரு மருத்துவர் இருந்தனர்” என்று முன்னாள் இந்தியானா செனட்டரும் ஆளுநருமான இவான் பேஹ் பிபிசியிடம் கூறினார்.

“அவர்கள் என் மனைவியுடன் பேசினார்கள், அவர்கள் என் தந்தையுடன் பேசினார்கள்.” என்று இவான் பேஹ் விவரித்தார்.

இந்த செயல்முறைகளின் போது, வாஷிங்டன் டிசியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தொலைக்காட்சி குழுவினர் முகாமிட்டனர்.

அந்த சமயத்தில் பேஹ் மனநல சிகிச்சை பெற்றதாக ஒரு தவறான இணைய வதந்திப் பரவியது. அதை பற்றி அவரிடம் விசாரணைக் குழுவின் தலைவர் போன் செய்து விசாரித்தார்.

“இல்லை, அது உண்மையல்ல. நான் மனநல சிகிச்சை எடுக்கவில்லை. ஆனால் நீங்கள் சீக்கிரம் ஒரு முடிவெடுக்காமல் இருந்தால், அது உண்மையாகி விடும்” என்று நகைச்சுவையாக பதில் அளித்ததை பேஹ் நினைவு கூர்ந்தார்.

இறுதியில் பைடனுக்கே வாய்ப்பு

20 பேர் கொண்ட பெயர் பட்டியலில், இறுதியில் டெலாவேர் செனட்டராக இருந்த ஜோ பைடனின் பெயர் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக பேஹ் விளக்கினார்.

அதன் பின்னர் வருங்கால அதிபரை அவரது ஹோட்டல் அறையில் சந்திப்பதற்காக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸுக்கு ‘மிகவும் ரகசியமாக’ விமானத்தில் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார்.

“ஒபாமா முன்பு சுமார் மூன்றடி உயரத்துக்கு ஆவணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

“ஒபாமா அந்த ஆவணங்களை காட்டி ‘நான் உங்களைப் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் பார்த்துவிட்டேன், அதில் எதுவும் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால் எங்கள் குழு கண்டுபிடிக்காத ஏதேனும் ரகசியம் இருந்தால், நீங்கள் இப்போது என்னிடம் சொல்ல வேண்டும், ஏனெனில் அது எப்படியும் வெளிவந்துவிடும்” என்றார்.

“நான் அவரிடம், ‘உங்கள் அதிகாரிகள் மிகவும் முழுமையான ஆய்வை மேற்கொண்டார்கள். ஆனால் நான் உங்களிடம் குறிப்பிட வேண்டிய இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் இருக்கலாம்’ என்று சொல்லி விவரித்தேன்.”

“அவர் என்னைப் பார்த்து, ‘அவ்வளவு தானா’? என்றார். நான் ‘ஆம்’, என்றேன். மேலும் அவர், ‘சரி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை அதிகம் வாழவில்லை, இல்லையா?’ என ஒபாமா கூறினார்” என்கிறார் பேஹ்.

ஹோட்டல் அறையில், ஒபாமாவிடம் விவரித்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேஹ் தெரிவிக்கவில்லை. அது குடும்ப விவகாரம் என்று மட்டும் கூறினார்.

அந்த துணை அதிபர் போட்டியில் இறுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்., அமெரிக்க

அதிபர் ஜோ பைடனுடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

சில நேரங்களில் துணை அதிபர் செயல்முறையில் தேர்வு செய்யும் குழுவில் இருப்பவர்கள், போட்டியாளரிடம் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு கேள்வியை முன்வைக்க முடியும். அதற்கு கிடைக்கும் பதிலின் மூலம் கூட போட்டியாளருக்கு சிக்கல் ஏற்படும்.

கிளிண்டனின் 1992-ம் பிரசாரத்தில் பணியாற்றிய கெரி கின்ஸ்பெர்க், அல் கோரிடம் உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்ட போது அவர் வார்த்தைகளற்று நின்றதை நினைவு கூறினார்.

மிகவும் கூச்ச சுபாவமுள்ள அவரிடம் மீண்டும் கேட்ட போது அவரின் மைத்துனர் மற்றும் இரண்டு காங்கிரஸ் நபர்கள் தவிர அவருக்கு நண்பர்கள் வட்டம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். நண்பர்கள் வட்டம் இல்லாமல் இருப்பது பிரசார அலுவலர் ஒருவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.

50 பேர் கொண்ட நீண்ட பட்டியலிலிருந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும்.

சர்ச்சைக்குரிய தேர்வு

இரண்டு நபர்களின் தேர்வு அமெரிக்க வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

1972ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜார்ஜ் மெக்கொவெர்ன் 18 நாட்களில் துணை அதிபராக தேர்வு செய்த வேட்பாளரை புறந்தள்ளினார். மிசோரி செனட்டர் தாமஸ் ஈகல்டனை 2 நிமிட அலைபேசி பேச்சுவார்த்தை மூலம் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார் அவர். அவரது பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.

ஆனால், சில நாட்களில் தாமஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எலெக்ட்ரிக் ஷாக் சிகிச்சை வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகின.

ஜார்ஜை எதிர்த்து போட்டியிட்ட நிக்ஸனும் அவரின் குழுவினரும், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கிய ஜார்ஜை இனி எப்படி நம்புவது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் படுதோல்வி அடைந்தனர்.

தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி செனட்டர் அல்லது ஆளுநரிடம் கேட்பது மரியாதையற்ற ஒன்றாக கருதப்படுவதால், இது போன்ற சோதனைகள் பெரும்பாலும் முறைசாராததாகவும் மற்றும் மிகவும் குறைவான தலையீடுகளை கொண்டதாகவுமே இருக்கும்.

இதன் பின்னர், போட்டியில் உள்ள வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் ‘வெட்டர்கள்’ தங்களின் ஆய்வு வட்டத்தை பெரிதாக்கினார்கள்.

அந்த ஆண்டு ரொனால்ட் ரீகனுக்கு சவால் விடக்கூடிய வகையில் ஒரு துணை வேட்பாளர் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான வால்டர் மாண்லேவுக்கு தேவைப்பட்டார்.

எனவே ஜெரால்டின் ஃபெரார்ரோ என்ற பெண்ணை துணை அதிபர் வேட்பாளராக அவர் தேர்வு செய்தார். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒரு முக்கிய தேசிய கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்ட பெண் இவர்.

ஆனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த அவரின் கணவரின் நிதி தொடர்பாக விவகாரங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அந்த தேர்தலில் 49 மாகாணங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ரீகன்.

சில நேரங்களில் இந்த தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் நபர்கள், அரசியல் தளங்களில் சொதப்புவதும் உண்டு. 2008ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கைன் சாரா பாலினை தேர்வு செய்தார். ஆனால் அவர்களின் பிரச்சார காலமானது வெறும் 72 மணி நேரமே நீடித்தது.

வேட்பாளரை இறுதி செய்யும் செயல்பாடு மிகவும் கண்டிப்புடன் நடத்தப்பட்டாலும், இறுதி முடிவு எப்போதும் அதிபர் வேட்பாளருடையது தான்.

துணை அதிபராக இருந்து, பின்னர் அதிபர் பதவிக்கு சென்ற 15 நபர்களில் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷும் ஒருவர். 1988 இல் அதிகம் அறியப்படாத இந்தியானா செனட்டர் டான் குவேலைத் தனது துணை அதிபர் வேட்பாளராக தைரியத்துடன் தேர்வு செய்தார்.

அவர்கள் வெற்றி பெற்றாலும், கேட் ஆண்டர்சன் ப்ரோவர் எழுதிய ‘ஃபர்ஸ்ட் இன் லைன்’ புத்தகத்தில், 41 வயதான குவேல், அந்த பதவியில் ஒரு கூடுதல் பலமாக இருப்பதற்கு பதிலாக பொறுப்போடு பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய நபராகவே இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது

1988 இல் பிரசார விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு நிருபர் துணை அதிபர் வேட்பாளரிடம் “உங்களுக்கு பிடித்த புத்தகம் எது? என கேட்டார்.

ஆனால் துணை அதிபர் வேட்பாளரான குவேலோ தனது மனைவி மர்லினிடம், “நான் படித்ததில் எனக்கு பிடித்த புத்தகம் எது?” என்று கேட்க, அருகிலிருந்த அரசியல்வாதி ஒருவர் குவேலின் செயலைக் கண்டு திகைத்துப் போனார்.

எழுதியவர், ஜூட் ஷீரின்
, பிபிசி செய்திகள், வாஷிங்டன்

 

Share.
Leave A Reply