சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது.
ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில் வளாகத்தில் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா களை கட்டியுள்ளது.
தொல்காப்பியம் மேற்கோளிட்டு காட்டிய தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மிக குறுகிய காலத்திலேயே மாற்றி அமைத்தவர் ராஜேந்திர சோழன் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன். ராஜேந்திர சோழனின் சிறப்புகள் குறித்து அவர் விவரித்தார்.
கங்கை, கடாரம், இலங்கை வெற்றி
கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன்
”தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா, சுமத்ரா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவர் ராஜேந்திர சோழன். கி.பி. 1014-ல் அரசனாக பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் 1017-ல் இலங்கை மீது படையெடுத்து வென்றார்” என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
இந்த வெற்றியை இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் தெளிவாக விளக்கி உள்ளது.
“இலங்கையில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் ‘புலனருவ, திரிகோணமலை, அத்தர குழளியா, பெரியகுளம், மாதோட்டம், நித்த வினோதம், கனதாரவ முதலிய இடங்களில் உள்ளன.
அதேபோல் கடார வெற்றியும் ராஜேந்திர சோழனின் முக்கிய சாதனையாகும். லெய்டன் செப்பேட்டில் கடார வெற்றி குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது” என்றும் குடவாயில் சுப்பிரமணியன் கூறினார்.
தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதை மெய்கீர்த்தி சாசனத்தில், கங்கைநீரை எடுத்த இடம் பற்றி கூறியிருந்ததை குடவாயில் பாலசுப்பிரமணியன் விளக்கிக் கூறினார்.
“நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும் ..” என விவரித்து கங்கை நீருடன் சோழர் படை தாயகம் திரும்பியது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திரனின் கங்கை வெற்றியை பறைசாற்றும் கல்வெட்டுகள், கும்பகோணம் திருலோக்கியில் உள்ளது.
“இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்து திருவடி தொழுது..” என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“சிறப்பான உள்நாட்டு நிர்வாகம்”
உள்நாட்டு நிர்வாகத்திலும் ராஜேந்திர சோழனின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
“வெற்றி பெற்ற இடங்களை மண்டலங்களாக பிரித்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கைதேர்ந்தவர்களை அப்பகுதிக்கு தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்தார்” என கூறுகிறார் அவர்.
” ராஜேந்திர சோழனின் படைத்தலைவனாக விளங்கிய அரையன் ராசராசன் (இவன் சாளுக்கிய அரசர்களையும் வங்காள மன்னரையும் வெற்றி கொள்ள உதவியாக இருந்தவர்),
கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் (மற்றொரு படைத்தலைவன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலம் முழுவதும் உடனிருந்து போர்களில் வென்றெடுக்க உதவியாக இருந்தவர்),
அருண் மொழியான், உத்தமச் சோழ பல்லவரையன் உள்ளிட்ட அதிகாரிகளும் பாண்டியன் சீவல்லையன், வல்லவரையன், உத்தம சோழ மிலாடுடையான், கங்கைகொண்ட சோழ மிலாடுடையான், சத்திரிய சிகாமணி கொங்கால்வான் போன்ற குறுநில மன்னர்களின் ஒத்துழைப்பும் ராஜேந்திரனுடைய உள்நாட்டு நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்தன” என்கிறார் அவர்.
கலைநயம் மிக்க கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது. ராஜேந்திர சோழன் கி.பி.1023-ல் கங்கை வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை கி.பி. 1027-இல் நிர்மாணித்தார். (விவசாய பூமியான தஞ்சாவூரில் இருந்து தலைநகரை மாற்றினார்)
அங்கு கங்கை கொண்ட சோழீஸ்வரம் என்னும் கோவிலையும் கட்டினார். கங்கை கொண்ட சோழபுரம் சுமார் 250 ஆண்டுகள் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. கோவிலின் மேற்கில் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் ஏரியை அமைத்தார். இந்த ஏரி தற்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.
“நீர் மேலாண்மையில் சோழர்கள் தனித்துவம் பெற்றவர்கள். இவரின் ஆட்சி காலத்தில் விவசாயம் செழிப்புறும் வகையில் நீர் நிலைகள் கட்டமைக்கப்பட்டன” என குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறினார்.
ராஜேந்திரன் பிறந்த ஆடி திருவாதிரை (ராஜேந்திர சோழன் பிறந்த நாள்)
ராஜேந்திரனின் பிறந்த நாள், நட்சத்திரம் 2014-க்கு முன்புவரை தவறுதலாக `மார்கழித் திருவாதிரை’ என்றே கொண்டாடப்பட்டு வந்தது. சில வரலாற்று ஆய்வாளர்கள் திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டை சான்றுகாட்டி, ‘மார்கழித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்’ என்று எழுதினர்.
ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவில் சந்நிதியில் மேற்குப் புறச் சுவரில் உள்ள குமுதப்படையில் இருந்த கல்வெட்டு, ‘ஆடித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்’ என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியது.
“அந்த கல்வெட்டை நான் படித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்” என்று கூறிய குடவாயில் பாலசுப்பிரமணியன், “ராஜேந்திரன் நேரடியாக வெளியிட்ட அரசு ஆணைதான் அந்தக் கல்வெட்டு” என்றார்.
‘கோனேரின்மை கொண்டான்’ என்று தொடங்கும் அந்த அரசு ஆணையில், ‘யாம் பிறந்த ஆடித் திருவாதிரையும் ஐயனின் ஐப்பசி சதயமும்’, என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழர் ஆட்சியை கங்கை முதல் இலங்கை வரை விரிவாக்கிய ராஜேந்திர சோழன்
தமிழ்நாட்டின் எல்லையை ராஜேந்திர சோழன் மாற்றியது எப்படி?
தொடர்ந்து விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் ராஜேந்திர சோழன் குறித்து பிபிசி தமிழிடம் கூறத் தொடங்கினார் .
“தமிழ்நாட்டின் எல்லையாக ‘வடவேங்கடம் முதல் தென்குமரி வரை, வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் தமிழகத்தின் எல்லையாக இருந்தன’ என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், ராஜேந்திர சோழன் காலத்தில் இந்த எல்லையானது மாற்றி அமைக்கப்பட்டது” என அவர் கூறுகிறார்.
“இன்றைய இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பும், கடல் தாண்டிய இலங்கையும், வெகுதூரத்தில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சோழப் பேரரசின் எல்லையாக இருந்தன” என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.
ராஜேந்திரனின் முதல் மகனான ராஜாதிராஜனின் திருமழபாடி கல்வெட்டு ராஜேந்திர சோழனின் ஆட்சிப்பரப்பின் எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“ஸ்வஸ்திஸ்ரீ திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள் தொல்குலம் விளங்க தெந்திய மல்கிய வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும் குடதிசை மகோதையும் குணதிசை கடாரமும் தண்டிநில் கொண்ட தாதைதந் மண்டல வெண்குடை நிழல் தன்கடை நிழன்றி.”
“சூரியகுலத்தில் உதித்து, வடதிசையில் கங்கைப் பகுதியையும் தென்திசையில் இலங்கையையும் மேற்கு திசையில் கேரளாவையும் (மகோதை) கிழக்கு திசையில் கடாரத்தையும் கொண்ட எனது தந்தையின் ஆட்சி பரப்பே எனது எல்லையாக இருந்தது” என்று ராஜேந்திரனின் மகன் ராஜாதிராஜன் கல்வெட்டில் பதிவு செய்துள்ளார்.
“அரசர்கள் போர்களில் வெற்றிபெறுவதும், அவ்விடங்களில் வெற்றித்தூண் அதாவது ஜெயஸ்தம்பம் நடுவதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்த தூண் கல்லால் செதுக்கப்பட்ட ஒன்று. அது வெற்றியை பறை சாற்றும் ஒரு அடையாளம். இராஜேந்திரனும் தனது கங்கை வெற்றியை கொண்டாட ஒரு தூண் நட்டார். அது கல் தூண் அல்ல, நீர்த்தூண். ஜலஸ்தம்பம் என்ற தண்ணீர்மயமான தூண் அது” என விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.
இந்நிகழ்வுகளை அப்படியே திருவலங்காடு செப்பேடு மற்றும் ராஜேந்திரனது மெய்கீர்த்தி சாசன வரிகள் எடுத்துரைக்கின்றன.
சோழர்களின் நீண்ட கால ஆட்சி
சோழர்கள் தங்களை சூரிய குல வழி வந்தவர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.
“மௌரியர்களின் ஆட்சி காலம் 137 வருடங்கள், குப்தர்கள் 223 ஆண்டுகள், பல்லவர்கள் 325 ஆண்டுகள், சோழர்கள் 430 ஆண்டுகள், விஜயநகர பேரரசு 340 ஆண்டுகளும் நிலைத்திருந்தன.
ஆங்கிலேயர்கள் 187 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டுள்ளனர். ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 430 ஆண்டுகள் தொடர்ச்சியான நிலையான நீடித்த ஆட்சியை கொடுத்த ஒரே பேரரசு ஆகும்” என அவர் விவரிக்கிறார்.
ராஜேந்திர சோழன் 32 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். தந்தை ராஜராஜ சோழனின் போர்த்தளபதியாக இருந்து தந்தையின் போர் வெற்றிகளுக்கு மிகப்பெரிய காரணியாக இருந்துள்ளதாக தெரிவித்த பேராசிரியர் ரமேஷ், தனது ஆட்சி காலத்தில் முதல் 13 ஆண்டுகள் மட்டுமே போர்கள் நடத்தியதாகவும் தனது கடைசி 19 ஆண்டுகளில் எந்த போரையும் அவர் நடத்தவில்லை என்றும் கூறினார்.
கப்பலும் கடல் போர்களும்
படக்குறிப்பு, பேராசிரியர் ரமேஷ்
ராஜேந்திரனின் கங்கை வெற்றியையும், கடார வெற்றியையும் ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில்
“கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்….”, என்று எழுதியுள்ளார்.
“சோழர்களது நீண்ட ஆட்சி காலத்தில் உறையூர், பழையாறை, தஞ்சாவூர், ஆகிய ஊர்களும் தலைநகரமாக இருந்தன என்றாலும் கூட 254 ஆண்டுகளுக்கு சோழர்களின் தலைநகராக இருந்த ஊர் என்ற பெருமை ராஜேந்திர சோழன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கே உள்ளது என்கிறார்” பேராசிரியர் ரமேஷ்.