முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள உரிமையாளர் ஈலோன் மஸ்க்கும் உரையாடியுள்ளனர். இருவரது உரையாடல் எக்ஸ் தளத்தில் நேரலை செய்யப்பட்டது.

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு, ஈலோன் மஸ்க் தனது ஆதரவை முன்னரே தெரிவித்திருந்தார்.

இந்த உரையாடலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் பைடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron dome) என டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர்.

கடந்த மாதம் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடமான பென்சில்வேனியாவின் பட்லர் நகருக்கு மீண்டும் அக்டோபரில் செல்லவிருப்பதாகவும், தான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை கமலா ஹாரிஸ் இதுவரை கொடுக்கவில்லை

“கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் முன்னணிக்கு வந்த பிறகும் கூட, இது போன்ற நேர்காணல்களை வழங்கவில்லை” எனக் கூறினார் டிரம்ப்.

அதற்கு பதிலளித்த ஈலோன் மஸ்க், “என்னுடன் ஒரு நேர்காணல் என்றால் கமலா ஹாரிஸ் நிச்சயமாக வர மாட்டார்” என்றார்.

தொடர்ந்து அதிபர் பைடனை விமர்சித்த டிரம்ப், “எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு முழுநேர அரசியல்வாதியாக (பைடன்) இருப்பவரால், ஒரு கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை. நேர்காணல்கள் என்றால் பயப்படுகிறார்” என்று கூறினார்.

ஆனால், அதிபர் பைடன் சில நாட்களுக்கு முன்பாக தான் அமெரிக்க ஒளிபரப்பு ஊடகமான சிபிஎஸ் (CBS) செய்திகளுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.

கமலா ஹாரிஸ் தொடர்ந்து பல பிரசாரக் கூட்டங்களை நடத்தி வந்தாலும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இறங்கிய பிறகு ஒரு முழு அளவிலான நேர்காணலை இதுவரை கொடுக்கவில்லை.

புதின், கிம் ஜாங் உன் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்று டிரம்ப் கூறினார்

புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் என்று டிரம்ப் கூறினார்.

“அவர்கள் இருவரும் புத்திசாலிகள், அதே சமயத்தில் ஆபத்தானவர்களும் கூட. கமலா ஹாரிஸ் மற்றும் பைடனின் செயல்பாடுகளை அவர்கள் நம்பவில்லை” என்றார்.

யுக்ரேனை தாக்க வேண்டாம் என்று புதினிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் புதின் அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

“நான் புதினுடன் அடிக்கடி பேசுவேன். அவர் என்னை மதிப்பார். அவரிடம் (புதின்) ‘யுக்ரேன் மீது போர் தொடுக்காதீர்கள், தொடுக்கவும் கூடாது’ என்று சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ‘வேறு வழியில்லை’ என்று என்னிடம் கூறினார், நான் வழி உள்ளது என்றேன்” என்று கூறினார் டிரம்ப்.

ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு அமெரிக்க அதிபர் பைடன்தான் காரணம் என்றும் கூறினார் டிரம்ப்.

 

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு

குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு பயனுள்ளதாக இருக்கிறது

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron Dome), அந்நாட்டை ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தொடர்ந்து பாதுகாத்து வருகிறது.

“நாமும் ஏன் அமெரிக்காவிற்கென பிரத்யேகமாக ஒரு வான் வழி பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தக்கூடாது, இஸ்ரேலிடம் கூட அது உள்ளது.” என்று கூறினார் டிரம்ப்.

குறுகிய இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை முறியடிப்பதில் இஸ்ரேலின் இந்த பாதுகாப்பு கவசம் பயனுள்ளதாக உள்ளது. இது 2006இல் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது.

டிரம்ப்- ஈலோன் மஸ்க் இடையேயான முரண்பாடுகள்

ஈலோன் மஸ்க் மற்றும் டிரம்ப் உரையாடல் திட்டமிட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. இதற்கு எக்ஸ் தளம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களே காரணம் என்று ஈலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.

இரண்டு மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில் டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் அழுத்தமாக வெளிப்படுத்தினார் ஈலோன் மஸ்க்.

நடுநிலை வாக்காளர்கள் அனைவரும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பிற்கு 2021இல் எக்ஸ் தளத்தைப் (அப்போது ட்விட்டர்) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஈலோன் மஸ்க் 2022இல் அதைக் கையகப்படுத்திய பிறகும் எக்ஸ் தளத்தை மீண்டும் பயன்படுத்த மறுத்து வந்தார் டிரம்ப்.

தன் மீதான எக்ஸ் தள தடைக்குப் பிறகு ட்ரூத் சோஷியல் (Truth social) என சொந்தமாக ஒரு சமூக ஊடக தளத்தை தொடங்கினார் டிரம்ப்.

இதற்கு முன்பாக பலமுறை மின்சார வாகனங்கள் குறித்த தனது சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் டிரம்ப். ஆனால் இன்றைய நேர்காணலில் ஈலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனத் திட்டத்தை பாராட்டினார் டிரம்ப்.

அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இருவருக்கும் கடந்த காலத்தில் சில முரண்பாடுகள் இருந்திருந்தாலும் கூட, இந்த உரையாடல் மூலம் அதிபர் தேர்தலில் தனக்கான ஆதரவை வலுப்படுத்த விரும்பினார் டிரம்ப்.

அதேபோல எக்ஸ் தளத்தை ஒரு முக்கிய செய்தி ஊடகமாக மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்பும் ஈலோன் மஸ்க்கும் இந்த உரையாடல் மூலம் பயனடைந்துள்ளார்.
o

Share.
Leave A Reply