– பாடசாலை அதிபர், ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

தணமல்வில பகுதியில் 16 வயதான சிறுமியை பாடசாலை மாணவர்கள் 22 பேர் தொடர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் அடங்குகின்றனர்.

சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான அதிபர் மற்றும் ஆசிரியைகள் மூவர் இன்றையதினம் (14) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பொலிஸாருக்கு அறிவிக்காது, மறைப்பதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் 22 மாணவர்கள் தொடர்புப்பட்ட நிலையில், அவர்களில் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (12) பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தணமல்வில பகுதியில் சிறுமியொருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டமை மற்றும் ஹம்பாந்தோட்டை சட்ட மருத்துவ அதிகாரியின் செயற்பாட்டுக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், தனமன்வில பகுதியில் 2023ஆம் ஆண்டு முதல் 16 வயதுடைய சிறுமி ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டமை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடைய குற்றச்சாட்டுக்கு அமைய சட்ட மருத்துவ அதிகாரியினால் வாய் மூலமாகவும், உளரீதியாகவும் துன்புறுத்தப்பட்டமையைக் கண்டித்துள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறித்த சிறுமிக்கு முகங்கொடுக்க நேர்ந்த மோசமான தொடர் சம்பவங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்யவில்லையென்பது புலனாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாது தவிர்ப்பதும், இலங்கையிலுள்ள அனைத்து பெண் பிள்ளைகளினதும் உரிமை மற்றும் கௌரவம் பாதுகாக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை மீறல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை தொடர்ந்தும் நடப்பதை அனுமதிக்க முடியாதென்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கும் இலங்கையிலுள்ள ஒவ்வொரு பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் தொடர்ந்தும் மேற்கொள்ளும் என இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply