ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காய் நகர்த்தல்கள் ஒரு புறம் மூடிய அறைகளுக்குள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க மறு புறத்தால் அந்த முயற்சிகள் தோல்வி கண்டு தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதில் வெற்றி பெறுவதற்கான எதிர்கட்சிகளை பிளவுபடுத்தும், சூழ்ச்சிகளும் எம்.பி.க்களை வளைத்துப்போடும் பேரம்பேசுதல்களும் தீவிரம் பெற்றுள்ளதால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அரசியல் சூதாட்டத்தில் குள்ள நரியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்‌ஷக்களின் குடும்பக்கட்சியான பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்‌ஷவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸநாயக்கவுக்குமிடையில் நடக்கும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்டம் அபாரமாகவேயுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் பண பலமும் அதிகார பலமும் அரசியல் களத்தில் புகுந்து விளையாடுகின்றன.

சிறப்பு சலுகைகளும் நிதி ஒதுக்கீடுகளும் அள்ளி வழங்கப்படுகின்றன. இதனால் எதிர்க் கட்சிகள் பிளவுபடுத்தப்படுகின்றன, எம்.பிக்கள் தட்டித் தூக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரசார போரில் ஈடுபட வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமது கட்சியையும் தமது எம்.பிக்களையும் பாதுகாக்க தற்பாதுகாப்பு போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சஜித் பிரேமதாச

தனது ஜனாதிபதிக் கனவைக் கலைத்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் தனது கட்சியையும் தன்னையும் முகவரியற்றவர்களாக்கிய ராஜபக்‌ஷக்களின் பொதுஜன பெரமுனவையும் இலக்கு வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆடும் ஆட்டத்தினால் இவ்விரு கட்சிகளும் பிளவடைந்தும் பலவீனமடைந்தும் வருகின்றன.

இவ்விரு கட்சிகளுக்குள் இருக்கும் தனது ‘சிலிப்பர் செல்’களை வைத்து ரணில் விக்ரமசிங்க தனது ஆட்டத்தைக் கன கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த ஆட்டத்தில் ராஜபக்‌ஷக்களின் பொதுஜன பெரமுன கட்சிதான் தனது ‘கர்மா’வை அதிகம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.

ராஜபக்‌ஷவினரும், அவர்களின் கட்சியான பொதுஜன பெரமுனவும் ஆட்சியிலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தியிருந்த காலப்பகுதியில் ஏனைய கட்சிகளைப் பிளவுபடுத்தியும் எம்.பிக்களை விலைக்கு வாங்கியும் இன்னும் சில எம்.பிக்களை வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி தமது பக்கத்துக்கு இழுத்தும் அரசியலில் ஆட்டம் காட்டியிருந்தனர்.

ராஜபக்‌ஷக்களின் இந்த அரசியல் ஆட்டத்தினால் அப்போது அதிகமாகப் பாதிக்கப்பட்டது ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிதான்.

2007ஆம் ஆண்டில் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய உள்ளிட்ட 17 எம்.பிக்களை ஒரேயடியாக ராஜபக்‌ஷக்கள் பிரித்தெடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மட்டும் ராஜபக்‌ஷக்களின் ஆட்டம் முடியவில்லை. ஜே.வி.பி.யையும் உடைத்தார்கள்.

.அக்கட்சியைச் சேர்ந்த விமல் வீரவன்ச, நந்தன குணதிலக உள்ளிட்ட சிலரையும் தம்வசப்படுத்தினர். அதேபோன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பியசேன, வியாழேந்திரன் எம்.பி.க்களைக்கூட பிரித்தெடுக்கும் அளவுக்கு ராஜபக்‌ஷக்களின் ஆட்டம் அமோகமாகவிருந்தது.

இனி நாட்டில் ராஜபக்‌ஷக்கள் யுகம் தான் என முடிவுக்கு வந்த ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் ராஜபக்‌ஷக்களிடம் சரணடைந்ததால் ராஜபக்‌ஷக்கள் தமது குடும்பக் கட்சியையும் குடும்ப ஆட்சியையும் நாட்டில் நிலை நிறுத்தினர்.

கட்சி உடைப்புக்கள், எம்.பி.க்களை விலைக்கு வாங்குதல் போன்ற சூழ்ச்சிகளினால் அரசியலில் அசுர பலமடைந்த ராஜபக்‌ஷக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்,
ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் பெரு வெற்றிபெற்றதுடன் தமக்கு ஏற்றவாறு அரசியலமைப்புத் திருத்தங்களையும் கொண்டு வந்து ஒரு அசைக்க முடியாத குடும்ப ஆட்சியையே நடத்தினர்.

ஆனால், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்கவும், தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் அன்று செய்த வினைகளின் ‘கர்மா’ இன்று அவர்களையே ‘அவர்களினால் பாதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க மூலமாகத் தாக்குகின்றது.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்‌ஷக்களை பிளவுபடுத்தி ‘மொட்டு’ ‘கட்சியைச் சிதைத்து வருகின்றார்.

ரணில் விக்ரமசிங்க ஒரு பக்கத்தால் ராஜபக்‌ஷக்களின் ‘மொட்டு’வை விரிய விடாமல் வாட வைக்க அதன் விளைவாகச் செத்த நோயிலிருந்து உண்ணிகள் விலகுவது போன்று மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிருது ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் ராஜபக்‌ஷக்களி கைவிட்டு வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

அதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அரசியல் சலுகைகளுக்காகவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் ராஜபக்‌ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்த ஏழு பங்காளிக் கட்சிகளான தற்போது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி,-

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம்,

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணி, அதாவுல்லா எம்.பி. தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்பன தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து அவரிடம் சரணடைந்துள்ளன.

அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதிக் கனவைக் கலைத்த, அவரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை அரசியலில் காணாமல் செய்த சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரும் ரணில் விக்ரமசிங்க பக்கம் செல்வதற்கான பேரம் பேசுதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மட்டுமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் எம்.பிக்கள் சிலருடனும் பேரம் பேசுதல்களில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் பிளவுகளை ஏற்படுத்தி ஆதரவான அணி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது பெருமளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் துரோகத்தனங்களும் கட்சித் தாவல்களும் பிளவுபடுத்தல்களும் இடம்பெறுவதற்கான அரசியல் கள நிலைமைகளே காணப்படுகின்றன.

-முருகானந்தம் தவம்

Share.
Leave A Reply