பாகிஸ்தான் சுதந்திரம் பெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு முகமது அலி ஜின்னா தனது சகோதரி ஃபாத்திமாவுடன் கேடி சி-3 டகோட்டா விமானத்தில் டெல்லியில் இருந்து கராச்சிக்கு சென்றார்.
விமானத்தின் படிக்கட்டுகளின் உச்சியை அடைந்த ஜின்னா டெல்லியின் வானத்தை பார்த்தபடி,”ஒருவேளை நான் டெல்லியை பார்ப்பது இது கடைசி முறையாக இருக்கும்,” என்று மெதுவாக முணுமுணுத்தார்.
கராச்சிக்குச் செல்வதற்கு முன் அவர் டெல்லியின் ஒளரங்கசீப் சாலையில் இருந்த தனது வீட்டை இந்து தொழிலதிபர் சேட் ராமகிருஷ்ண டால்மியாவுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்றார்.
முஸ்லிம் லீக்கின் பச்சை வெள்ளைக் கொடி பல ஆண்டுகளாக ஏற்றி வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில், சில மணி நேரம் கழித்து பசு பாதுகாப்பு சங்கத்தின் கொடி ஏற்றப்பட இருந்தது.
”ஜின்னா விமானத்தில் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி கிட்டத்தட்ட தனது இருக்கையில் விழுந்தார் என்று ஜின்னாவின் உதவியாளர் (ஏடிசி) சையத் அஹ்சன் எங்களிடம் கூறினார்,” என்று டோமினிக் லேபேயர் மற்றும் லாரி கோலின்ஸ் தங்கள் ‘Freedom at Midnight’ புத்தகத்தில் எழுதியுள்ளனர்.
“பிரிட்டிஷ் விமானி, விமானத்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்தார். ஜின்னா எங்கோ தொடர்ந்து வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். யாரிடமும் பேசாமல், ‘கதை முடிந்தது’ என்று முணுமுணுத்தார்.”
கராச்சியில் ஜின்னாவுக்கு கிடைத்த வரலாறு காணாத வரவேற்பு
முகமது அலி ஜின்னா 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார்.
விமானம் கராச்சியை அடைந்ததும் ஜின்னாவின் உதவியாளர் சையத் அஹ்சன் ஜன்னல் வழியாக கீழே பார்த்தார். கீழே ஒரு பெரிய பாலைவனம் இருந்தது. இடையில் சிறிய மணல் திட்டுகள் காணப்பட்டன. மெல்ல மெல்ல அபரிமிதமான மக்கள் கூட்டம் வெள்ளை நிறக்கடலாக உருவெடுத்தது.
ஜின்னாவின் சகோதரி ஜின்னாவின் கையை உணர்ச்சிபூர்வமாக பிடித்துக் கொண்டு, ‘அதோ பாருங்கள்’ என்று கூறினார்.
விமானம் தரையிறங்கி நின்றபோது ஜின்னா மிகவும் சோர்வாக இருந்ததால் அவரால் இருக்கையில் இருந்து எழக்கூடமுடியவில்லை.
அவரது உதவியாளர் அவருக்கு உதவ முயன்றார். ஆனால் ஜின்னா அவரது உதவியை மறுத்துவிட்டார். தான் உருவாக்கிய புதிய நாட்டின் நிலத்தில் வேறு ஒருவரின் உதவியுடன் காலடி எடுத்து வைக்க அவர் தயாராக இருக்கவில்லை.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவருக்காக விமான நிலையத்தில் காத்திருந்தனர். இந்தியாவிலிருந்து வந்த அகதிகள் காரணமாக கராச்சி நகரின் மக்கள்தொகை சில மாதங்களில் இரட்டிப்பாகும் அளவுக்கு அப்போதைய சூழல் இருந்தது.
ஸ்டான்லி வோல்பர்ட் தனது ‘ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்’ புத்தகத்தில், ”விமான நிலையத்திலிருந்து அரசு இல்லத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜின்னாவை வரவேற்று கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக சிந்து மாகாண ஆளுநர் ஒருந்த அரசு இல்லம் இப்போது அது ஜின்னாவின் பங்களாவாக மாறப் போகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விக்டோரியன் பாணியில் கட்டப்பட்டிருந்த இந்த வெள்ளை கட்டிடத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது ஜின்னா தனது உதவியாளரிடம், “என் வாழ்நாளில் பாகிஸ்தான் உருவாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த இலக்கை அடைந்ததற்காக நாம் அல்லாவுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்,” என்று சொன்னார்.
சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற பிறகு உரை நிகழ்த்தும் முகமது அலி ஜின்னா.
ஆகஸ்ட் 11ஆம் தேதி பாகிஸ்தானின் அரசியல் சாசன நிர்ணய சபை முதல் முறையாகக் கூடி, ஒருமனதாக அவரை தன் தலைவராக தேர்ந்தெடுத்தது.
பின்பு அவர் தனது உரையைத் தொடங்கினார். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அவர் கனவுலகிற்குச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. சரோஜினி நாயுடு சொல்லியதுபோல ஒரே இரவில் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவராக அவர் மாறிவிட்டது போலத் தோன்றியது.
ஜின்னா எழுதிவைத்திருந்த உரையை பார்க்காமலேயே மனதில் இருந்து பேசினார். “நீங்கள் உங்கள் கோவில்களுக்கு சுதந்திரமாக செல்லாம். பாகிஸ்தானில் உள்ள உங்கள் மசூதிகளுக்கோ அல்லது வேறு வழிபாட்டுத் தலங்களுக்கோ செல்ல உங்களுக்கு சுதந்திரம் உண்டு. நீங்கள் எந்த மதம், சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதற்கும் அரசை நடத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
“இரண்டு சமூகங்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் பாகுபாடும் இல்லாத சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம். நாம் ஒரு நாட்டின் சமமான குடிமக்கள் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து நாங்கள் தொடங்க இருக்கிறோம்,” என்றார்.
பாகிஸ்தானில் அதிருப்தியை கிளப்பிய உரை
கராச்சியில் உள்ள அரசு மாளிகையில் முகமது அலி ஜின்னா தனது சகோதரி ஃபாத்திமாவுடன்
அவரது உரையைக் கேட்டதும் முஸ்லிம் லீக் வட்டாரங்களில் மயான அமைதி நிலவியது.
காலித் அகமது தனது ‘பாகிஸ்தான் பிஹைண்ட் தி ஐடியலாஜிக்கல் மாஸ்க்’ என்ற புத்தகத்தில், “அதன் பிறகான நாட்களில் இந்த உரைக்கு எந்த அரசு வெளியீட்டிலும் இடம் கொடுக்கப்படவில்லை.
பின்னர் பாகிஸ்தானின் அதிபரான ஜெனரல் ஜியா-உல்-ஹக், ’ஜின்னா இந்த உரையை ஆற்றியபோது, அவர் சுயநினைவில் இல்லை’ என்ற பிரசாரத்தில் சில வரலாற்றாசிரியர்களை ஈடுபடுத்தினார்.” என்று கூறுகிறார்.
இந்த உரையை பாராட்டியதற்காக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி பெரும் அரசியல் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.
“அப்போது ஜின்னாவின் மகள் தீனா வாடியா நியூயார்க்கில் வசித்து வந்தார். அவர் தொடர்பு கொள்ளப்பட்டு ஜின்னாவின் உணவுப் பழக்கம் பற்றித் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
உதாரணமாக அவர் மது அருந்தமாட்டார், பன்றி மாமிசம் சாப்பிடமாட்டார் என்று சொல்லும்படி அவரிடம் கூறப்பட்டது. ஆனால் ஜின்னாவின் மகள் அதைச்செய்ய மறுத்துவிட்டார்,” என்று காலித் அகமது மேலும் எழுதுகிறார்.
மவுண்ட்பேட்டன் தம்பதியை சிறப்பித்து விருந்து
படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் பிரபுவுடன் ஜின்னா.
ஜின்னாவுக்கு கவர்னர் ஜெனரலாக பதவிப் பிரமாணம் செய்துவைப்பதற்காக 1947 ஆகஸ்ட்13 அன்று மவுண்ட்பேட்டன் கராச்சியை அடைந்தபோது அவரை வரவேற்க ஜின்னா விமான நிலையத்திற்கு வரவில்லை. அவர் இந்தப் பொறுப்பை சிந்து ஆளுநர் சர் குலாம் ஹுசைன் ஹிதாயத்துல்லா மற்றும் தனது உதவியாளர் சையத் அஹ்சானிடம் ஒப்படைத்திருந்தார்.
ஜின்னா தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் நுழைவாயிலுடன் இணைந்திருந்த மண்டபத்தில் டெல்லியிலிருந்து வந்த விருந்தினர்களுக்காகக் காத்திருந்தார். இரவில் ஜின்னா மவுண்ட்பேட்டன் தம்பதியை கெளரவித்து விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் ஜின்னா விசித்திரமான முறையில் யாருடனும் கலந்துபேசாமல் இருந்தார். விருந்தின் போது ஃபாத்திமா ஜின்னாவிற்கும், பேகம் லியாகத் அலிக்கும் இடையில் மவுண்ட்பேட்டன் அமர்ந்திருந்தார்.
“ஒரு பொறுப்பான அரசு, ஜோதிடர்களால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைப் பின்பற்றுவது எவ்வளவு விசித்திரமானது என்று கூறி அடுத்தநாள் டெல்லியில் நள்ளிரவில் நடக்கவிருக்கும் விழாவைப் பற்றி இருவரும் என்னிடம் கிண்டலாகப் பேசினர்,” என்று மவுண்ட்பேட்டன் எழுதியுள்ளார்.
ஜின்னாவின் நாற்காலியை உயரத்தில் வைப்பது தொடர்பான சர்ச்சை
ஜின்னாவின் நாற்காலியை உயரத்தில் வைப்பது தொடர்பான சர்ச்சை
பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாகவும், பாகிஸ்தான் அரசியல்சாசன நிர்ணய சபையின் தலைவராகவும் தான் இருப்பதால் பதவியேற்பு விழாவில் மவுண்ட்பேட்டனின் நாற்காலியை விட தனது நாற்காலி உயரத்தில் இருக்க வேண்டும் என்று ஜின்னா வலியுறுத்தினார்.
கான் அப்துல் வலி கான் தனது ‘Facts are Facts’ என்ற புத்தகத்தில், “ஜின்னாவின் இந்த கோரிக்கையால் ஆங்கிலேயர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். மவுண்ட்பேட்டன் பதவிப் பிரமாணம் செய்துவைத்த பிறகுதான் ஜின்னா கவர்னர் ஜெனரல் பதவியில் இருப்பார் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது,” என்று எழுதியுள்ளார்.
மேலும், “இது நடக்கும் வரை, கூடவே அனைத்து அதிகாரமும் அவருக்கு மாற்றப்படும் வரை ஜின்னாவுக்கு எந்த அதிகாரப்பூர்வ பதவியும் இல்லை என்று அவர்கள் எடுத்துரைத்தனர். ஆங்கிலேயர்களின் இந்த வாதத்தை ஜின்னா அரைமனதாக ஏற்றுக்கொண்டார்.” என்று எழுதியுள்ளார்.
படக்குறிப்பு, ஜின்னாவின் பதவியேற்பு விழாவில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்
ஜின்னாவின் கொலை முயற்சி குறித்த உளவு அறிக்கை
இதற்கிடையில் பதவியேற்பு விழாவுக்குச் செல்லும்போதோ அல்லது வரும்போதோ சிலர் வெடிகுண்டு வீசி ஜின்னாவைக் கொல்ல முயற்சிக்கக்கூடும் என்று சிஐடியில் இருந்து செய்தி வந்தது.
“ஜின்னா திறந்த காரில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். வாகனம் மெதுவாக நகரும். ஆனால் உங்களைக் காப்பாற்ற எங்களிடம் போதுமான வசதிகள் இல்லை. ஊர்வலமாக செல்லும் எண்ணத்தை கைவிடுமாறு ஜின்னாவிடம் சொல்லுங்கள்” என்று சிஐடி அதிகாரி மவுண்ட்பேட்டனை கேட்டுக்கொண்டார். ஆனால் ஜின்னா மவுண்ட்பேட்டனின் பேச்சைக் கேட்கவில்லை.
மூடிய காரில் கராச்சி தெருக்களில் செல்வது கோழைத்தனத்தின் அடையாளமாக கருதப்படும் என்றார் அவர். இதுபோன்ற செயலைச்செய்து ஒரு புதிய தேசத்தின் எழுச்சியை குறைத்துக்காட்ட தான் தயாராக இல்லை என்று அவர் சொன்னார்.
பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த பாதை வழியாக அரசியல்சாசன நிர்ணய சபை மண்டபத்திற்கு ஜின்னா அழைத்துச் செல்லப்பட்டார்.
பதவியேற்பு விழாவில் மவுண்ட்பேட்டனுக்கு அருகில் ஜின்னா வெள்ளை கடற்படை சீருடை அணிந்து அமர்ந்தார். மவுண்ட்பேட்டன் தனது உரையில் பிரிட்டிஷ் அரசர் சார்பாக புதிய தேசத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
“பாகிஸ்தானின் அரசியல்சாசன நிர்ணய சபை சார்பாகவும் எனது சார்பாகவும் மாட்சிமை பொருந்திய அரசருக்கு நன்றி. நாம் நண்பர்களாக பிரிந்து செல்கிறோம்,”என்று ஜின்னா குறிப்பிட்டார்.
கேம்ப்பெல் ஜான்சன் தனது ‘மவுண்ட்பேட்டன்’ புத்தகத்தில், “ஜின்னா தனது உரையை முடித்துவிட்டு அமர்ந்தவுடன் எட்வினா, ஃபாத்திமா ஜின்னாவின் கையை அன்புடன் அழுத்தினார்.
ஜின்னாவின் ஆளுமையில் யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத நடத்தையும், ஒருவிதமான புறக்கணிக்கும் மனப்பான்மையும் இருந்தது உண்மைதான். ஆனால் அவரிடம் ஒரு வசீகரமும் இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜின்னா மற்றும் ஜவஹர்லால் நேரு
1947 ஜூன் 3ஆம் தேதி பிரிவினை தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்ட கூட்டத்தில் மவுண்ட்பேட்டனுடன் ஜின்னா (வலது) மற்றும் ஜவஹர்லால் நேரு
ஒரே காரில் மவுண்ட்பேட்டனும் ஜின்னாவும்
ஜின்னாவும் மவுண்ட்பேட்டனும் ஒன்றாக நடந்து அரங்கில் இருந்து வெளியே வந்தபோது ஒரு கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் கார் அவர்களுக்காக காத்திருந்தது.
ஜின்னாவைக் கொல்ல முயற்சி நடந்தால், அவர் திறந்த காரில் அரசு இல்லத்திற்குத் திரும்பும்போதுதான் அது நடக்கும் என்று மவுண்ட்பேட்டன் நம்பினார்.
“ஜின்னாவை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி ஒரே வாகனத்தில் அவருடன் செல்வதை வலியுறுத்துவதுதான் என்று நான் உணர்ந்தேன். கூட்டத்தில் யாரும் என்னைச் சுடவோ, வெடிகுண்டு வீசவோ துணிய மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்று மவுண்ட்பேட்டன் எழுதியுள்ளார்.
“கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் ’பாகிஸ்தான், ஜின்னா, மவுண்ட்பேட்டன் ஜிந்தாபாத்’ என்று முழக்கங்களை எழுப்பினர். ஒருமுறை வங்காள ஆளுநரின் ராணுவச் செயலர் அவர் மீது வீசப்பட்ட வெடிகுண்டைப் பிடித்து கொலையாளியின் மீது திருப்பி வீசியது மவுண்ட்பேட்டனுக்கு நினைவுக்கு வந்தது.
ஆனால் தனக்கு கிரிக்கெட் பந்தைக்கூட பிடிக்கத்தெரியாது என்ற எண்ணமும் அப்போது அவருக்குத் தோன்றியது,” என்று டொமினிக் லேபியர் மற்றும் லாரி காலின்ஸ் தங்கள் புத்தகத்தில் எழுதியுள்ளனர்.
ஜின்னா மற்றும் மவுண்ட்பேட்டன்
மவுண்ட்பேட்டனுக்கும் ஜின்னாவுக்கும் இடையேயான விவாதம்
காரில் அமர்ந்திருந்த ஜின்னாவும் மவுண்ட்பேட்டனும் புன்னகையுடன் தங்கள் மன உளைச்சலை மறைக்க முயன்றனர். இந்தப்பயணம் முழுக்க ஒரு வார்த்தை கூட பேசாத அளவுக்கு அவர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர்.
“கார் தன் இலக்கை அடைந்ததும் ஜின்னா முதல்முறையாக நிம்மதியுடன் காணப்பட்டார். வழக்கத்திற்கு மாறாக முதன்முறையாக அவர் முகத்தில் புன்னகை தோன்றியது, மவுண்ட்பேட்டனின் முழங்கால்களைத் தட்டிய அவர், ‘அல்லாவுக்கு நன்றி. நான் உங்களை உயிருடன் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்’ என்றார்.
இதற்கு மவுண்ட்பேட்டன் ‘அப்படி இல்லை.. நீங்கள் என்னை அல்ல, நான்தான் உங்களை உயிருடன் இங்கு கொண்டு வந்திருக்கிறேன்’ என்று பதில் அளித்தார்,” என்று டொமினிக் லேபியரும், லாரி காலின்ஸும் எழுதுகிறார்கள்.
தான் இல்லாமல் பாகிஸ்தான் உருவாகியிருக்காது என்று கடைசி மூச்சு வரை ஜின்னா நம்பினார். பிற்காலத்தில் பாகிஸ்தானின் அதிபரான இஸ்கந்தர் மிர்ஸா ஒருமுறை அவரிடம், “முஸ்லிம் லீக்கை நாம் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் நமக்கு பாகிஸ்தானைக் கொடுத்துள்ளது” என்று கூறினார்.
அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஜின்னா, “முஸ்லிம் லீக் நமக்கு பாகிஸ்தானைக் கொடுத்தது என்று உங்களுக்கு யார் சொன்னது? என் ஸ்டெனோகிராஃபரின் (சுருக்கெழுத்தாளர்) உதவியுடன் நான்தான் பாகிஸ்தானை உருவாக்கினேன்,” என்று சொன்னார்.