‘இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வழமைக்கு மாறாக மூவர் அல்லது நால்வர் பிரதான வேட்பாளர்களாக இருப்பர்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் ஒரே அணியாக நின்று வாக்களிக்கும் பட்சத்தில், எம்முடைய வாக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

இதனைவிட பேரம் பேசுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் வாய்க்காது. இவ்வேளையில் எமது மக்களின் வாக்குகளைக்கோரி வருகின்ற சகல வேட்பாளர்களையும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து ஓர் உத்தரவாதத்தை வழங்கச்செய்யவேண்டும்’ என வலியுறுத்தியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது அநாவசியமானது மாத்திரமன்றி தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இம்முறை தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ்மக்களுக்கான முன்னேற்றகரமான தீர்வு உத்தரவாதத்தை வழங்கி, அதனை சிங்கள மக்களிடமும் பகிரங்கமாகக் கூறுகின்ற வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்து ஆதரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தேசிய மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் களநிலைவரம் சூடுபிடித்திருக்கும் பின்னணியில், இம்முறை தேர்தலில் தமது நிலைப்பாடு மற்றும் தமிழ் மக்கள் செயற்படவேண்டிய விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ‘வீரகேசரி’ வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் சுமந்திரன் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழுமையான வடிவம் வருமாறு:

கேள்வி – இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கியிருக்கும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நீங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறீர்கள். அதற்கமைய இதுகுறித்த தீர்க்கமான உத்தரவாதத்தை அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவார்கள் என எதிர்பார்க்கின்றீர்களா?

பதில் – ஒருகாலத்தில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தையே நாம் 13 ஆவது திருத்தம் எனக் கூறுகின்றோம்.

மாறாக அது அரசியலமைப்பின் பின்னிணைப்பு அல்ல. எனவே நாட்டின் அரசியலமைப்பைப் பேணிப்பாதுகாப்போம் என சத்தியப்பிரமாணம் செய்கின்ற எவரும், ‘அதனை நடைமுறைப்படுத்த முடியாது’ அல்லது ‘பிறகு பார்ப்போம்’ எனக்கூறுவது அரசியலமைப்பை மீறுகின்ற செயலாகும்.

அதனடிப்படையிலேயே 13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியிருக்கும் அதிகாரப்பகிர்வு குறித்த விடயங்களையும் நாம் பிரதான வேட்பாளர்களுடன் பேசுகின்றோம்.

இருப்பினும் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் அத்திருத்தத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு முறைமை பூரணமான அரசியல் தீர்வு அல்ல என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால் இதில் அதிகாரப்பகிர்வு சார்ந்த மிகக்குறைந்தளவிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனால், முதலில் அதனையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என நாங்கள் வலியுறுத்துவதில் தவறில்லை.

2015 இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவிவகித்தபோது நாம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அப்போது நாங்கள் 13 ஆவது திருத்தம் குறித்துப்பேசவில்லை. ஏனெனில் அதற்கு அப்பால் சென்ற வரைபொன்றுதான் ரணில் விக்ரமசிங்கவினால் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பின்னணியை அடிப்படையாகக்கொண்டு வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றபோது இருவர் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கின்றார்கள்.

யாழில் உள்ள எமது கட்சி அலுவலகத்தில் எம்மைச் சந்தித்துப்பேசியதன் பின்னர் ஊடகங்களுக்குக்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மேற்குறிப்பிட்டவாறான உத்தரவாதத்தை வழங்கியிருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ் மக்களைப் போன்று தாமும் 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இருப்பினும் அது அரசியலமைப்பின் ஓரங்கமாக இருப்பதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, பின்னர் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்களுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுப்பதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தமட்டில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவருக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் அதற்கு அப்பால் செல்லும் வரைபுகளையும் எம்மோடு இணைந்து தயாரித்திருக்கின்றார்.

ஆனால் பொலிஸ் அதிகாரங்களை மாத்திரம் இப்போது வழங்கமுடியாது எனவும், தேர்தலுக்குப் பின்னர் அதனைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் கூறுகின்றார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அடுத்ததாக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட வேளையில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள், அதன் பின்னர் பறிக்கப்பட்டுவிட்டன.

அதுகுறித்து நாம் கேள்வி எழுப்பியபோது, அவற்றை மீளத்தருவாகக்கூறி அதற்குரிய ஆவணங்களையும் என்னிடம் கையளித்து,

இதுகுறித்து என்னுடன் கிரமமாகப் பேசிவருகின்றார். எம்மைப்பொறுத்தமட்டில் அதிகாரப்பகிர்வு என்பது அர்த்தமுள்ள பொறிமுறைக்குள் வரும் வரையில், அரசியலமைப்பில் இருப்பதை முழுமையாக அமுல்படுத்தவேண்டும்.

தேர்தல் காலங்களில் எவரேனும் அதனை ஆர்வம்காட்டி செய்வார்களெனின், அதனை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இருப்பினும் அதனைச் செய்பவர்களுக்கு நாம் ஆதரவளிப்பதாக எடுத்துக்கொள்ளமுடியாது. மாறாக இவ்வேளையில் எமது மக்களின் வாக்குகளைக்கோரி வருகின்ற சகல வேட்பாளர்களையும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து ஓர் உத்தரவாதத்தை வழங்கச்செய்யவேண்டும்.

ஏனெனில் ஜனாதிபதித்தேர்தலில் ஒருவர் வெல்லும் அதேவேளை, இருவர் தோற்பர் (பிரதான வேட்பாளர்களில்). ஆனால் அவ்வாறு தோற்ற இருவரும் பின்னர் 13 அல்லது அதிகாரப்பகிர்வுக்கு எதிராக செயற்படாதிருப்பதை இப்போதே உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்குரிய முயற்சிகளையே எமது கட்சியின் சார்பில் நான் முன்னெடுத்துவருகின்றேன்.

கேள்வி – நீங்கள் உட்பட சகல தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வையே வலியுறுத்துகின்றீர்கள். அந்நிலைப்பாட்டில் உள்ள சிலர் 13 தேவையில்லை என்கிறார்கள். இருப்பினும் சமஷ்டியை நோக்கிச்செல்வதற்கான தொடக்கமாக 13 அமையும் என்பதை எப்படி தர்க்க ரீதியாக நியாயப்படுத்துவீர்கள்?

பதில் – மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது நாடு பிளவடைவதற்கு வழிகோலும் எனக் கூறி தெற்கில் எதிர்ப்புப்போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அப்போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர்களே பின்னாளில் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, அம்மாகாணசபைகளை இயக்கினார்கள்.

எனவே ஒரு விடயம் தொடர்பில் விரோத மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள், அதனை நடைமுறைப்படுத்துகையில்தான் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்வார்கள்.

அதேபோன்று பொலிஸ் அதிகாரமும் நடைமுறைப்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த தளங்களுக்குப் பகிரப்படும்போதுதான் அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கோ, வேறு எதற்கோ அச்சுறுத்தல் இல்லை என்பதை மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.

அத்தகைய புரிதலை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தம் உகந்ததே தவிர, ஏற்கனவே கூறியதுபோன்று அதனை அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வாக நாம் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் இத்திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்படும் அதேவேளை, அவற்றை மீண்டும் பறிக்கமுடியாதவாறு அரசியலமைப்பு திருத்தியமைக்கப்படவேண்டும். குறித்த துறைசார்ந்த முழுமையான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படல் மற்றும் அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறமுடியாததாக இருத்தல் ஆகிய இரண்டுமே சமஷ்டியின் பிரதான குணாம்சங்களாகும்.

ஆகவே கடந்த அரசாங்கத்தில் சமஷ்டி என்று கூறாவிடினும், ஒற்றையாட்சி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், சமஷ்டி குணாம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை வரைந்தோம்.

கேள்வி – இருப்பினும் தமிழ் பொதுக்கட்டமைப்பினால் உங்களது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் இவ்வாறு பொதுவேட்பாளரைக் களமிறக்குவது அநாவசியமானது என நீங்கள் சாடியிருந்தீர்கள். இதனை ஏன் இந்தளவுக்கு எதிர்க்கிறீர்கள்?

பதில் – இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது அநாவசியமானது மாத்திரமல்ல,

இது தமிழ் மக்களுக்கு மிகப் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் நான் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றேன்.

தற்போதைய களநிலைவரத்தை ஒத்த சூழ்நிலையில்தான் நாம் எமது மக்களின் வாக்குப்பலத்தைப் பிரயோகித்து, அடையப்படவேண்டிய விடயங்களை அடைந்துகொள்ளவேண்டும்.

ஆயுதம் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் வாக்குப்பலம் தான் எம்முடைய ஆயுதம். அதனைத் தகுந்த சமயத்தில் பயன்படுத்தாமல், எங்கேயோ கொண்டுசென்று ஒழித்துவைப்பதை ஒத்ததாகவே தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் செயற்பாடு இருக்கின்றது. இதனைவிட முட்டாள்தனமான செயற்பாடு வேறு எதுவுமில்லை.

பிரதான தமிழ் அரசியல் கட்சியான நாம் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம்.

அவ்வாறிருக்கையில் எமது கட்சியை உள்ளடக்காத தரப்பினர் இணைந்து, தமிழ் பொதுக்கட்டமைப்பு எனத் தம்மைத்தாமே அடையாளப்படுத்தி, அவர்கள் மத்தியில் பொதுவேட்பாளர் ஒருவர் கிடைக்காத நிலையில், எமது கட்சியிலிருந்து ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது முற்றிலும் கேலிக்கூத்தான விடயமாகும்.

இது வெறும் கேலிக்கூத்து என்றால், நாமும் பார்த்து சிரித்துவிட்டு இருக்கலாம். ஆனால் இது அவ்வாறான விடயம் அல்ல. மாறாக சுமார் 75 வருடகாலமாக தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற எமது மக்களின் அபிலாஷைகளை முற்றுமுழுதாகக் குழிதோண்டிப்புதைக்கின்ற செயலாகும். ஆகையினாலேயே நான் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றேன். எமது மக்களும் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்ன நோக்கத்துக்காகக் களமிறக்கப்படுகின்றார் என யாருக்கும் தெரியவில்லை.

அண்மையில் நேர்காணலொன்றில் பங்கேற்ற அரியநேத்திரன், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன உள்ளடங்கப்போகின்றது எனத் தனக்குத் தெரியாது என்கிறார். அவ்வாறெனில் அவர் எதற்கான பொதுவேட்பாளராகக் களமிறங்கினார்? சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வே தமிழ்மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வென மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவ்வாறிருக்கையில் இவ்வாறு பொதுவேட்பாளரைக் களமிறக்கி, அவர் குறைந்தளவிலான வாக்குகளைப் பெறும்போது, தமிழ் மக்களே மேற்குறிப்பிட்ட தீர்வை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படும்.

‘இது ஒரு விஷப்பரீட்சை’ என எமது கட்சியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் என்னைப் பொறுத்தமட்டில் இது பரீட்சையே அல்ல. தோல்வியடையப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு மேற்கொள்ளும் முட்டாள்தனமான நகர்வே இதுவாகும்.

அதேவேளை பொதுவேட்பாளர் எமது கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அதற்கமைய இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது. அதேபோன்று கட்சியின் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி – தமிழ் பொதுக்கட்டமைப்பினால் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் ‘தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகக்’ காண்பிக்கப்படுகின்றார். இது எந்தளவுக்குப் பொருத்தமானது?

பதில் – இது சற்றும் பொருத்தமற்றது. கடந்த காலங்களில் நாம் ஆதரித்த மற்றும் எதிர்த்த ஜனாதிபதி வேட்பாளர்களால் எமது நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படவில்லை என்ற பாரிய ஏமாற்றம் மக்கள் மத்தியில் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் இன்னும் ஏமாறுவதன் ஊடாக அந்த ஏமாற்றத்தை நிவர்த்தி செய்வது எப்படி? என்பதே தற்போதுள்ள கேள்வியாகும். இந்தப் பொதுவேட்பாளர் தீர்மானம் தமிழ் மக்களின் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என அண்மையில் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் தமிழ் மக்கள் தற்கொலை செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார்கள் என நான் கருதவில்லை.

எப்போதுமில்லாத வாய்ப்பு இப்போது எமக்குக் கிட்டியிருக்கின்றது. ஏனெனில் இதுவரை காலமும் இருவர் தான் பிரதான வேட்பாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்ததில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தபோது,

அதனால் ஏற்பட்ட நன்மைகள் என்னவென்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். இப்போது எமது மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு சமாந்தரமாக வாக்குப்பலமும் குறைகின்றது.

எனவே அந்த எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடைவதற்கு முன்பதாக வாக்குப்பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அத்தோடு இம்முறை மூவர் அல்லது சில சமயங்களில் நால்வர் பிரதான வேட்பாளர்களாக இருக்கக்கூடும்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒரே அணியாக நின்று வாக்களிப்போமாயின், எம்முடைய வாக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். இதனைவிட பேரம் பேசுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் வாய்க்காது.

எனவே இவ்வேளையில் நாம் தமிழ் பொதுவேட்பாளருக்குத்தான் வாக்களிப்போம் என்று கூறுவதோ அல்லது தேர்தலைப் பகிஷ்கரிக்கப்போவதாகக் கூறுவதோ பொருத்தமாக இருக்காது. அதுமாத்திரமன்றி ‘நீங்கள் உங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தாமல், எம்மிடம் எதற்குத் தீர்வு கேட்கிறீர்கள்?’ என்று தான் உலகநாடுகளும் கேள்வி எழுப்பும்.

கேள்வி – இருப்பினும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தாம் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்ற புரிதல் தமிழ்மக்கள் மத்தியில் இருக்கின்றதா? தமிழ்ப்பரப்பில் உங்கள் அவதானிப்பின்படி களநிலைவரம் எப்படி இருக்கிறது?

பதில் – இம்முறை ஜனாதிபதித்தேர்தல் குறித்து ஆரம்பத்தில் தமிழர்கள் மத்தியில் ஆர்வமற்ற நிலையொன்று காணப்பட்டது. அவ்வேளையிலும் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தமிழ் மக்களுக்குக் கேடானது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

அதேவேளை தற்போது தேர்தலில் வாக்களிப்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் ஆர்வம் வந்திருப்பதுபோல் தெரிகிறது. எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய மாறுபட்ட நிலைப்பாடுகளும் அவர்கள் மத்தியில் உள்ளன.

கடந்த காலங்களில் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் ராஜபக்ஷ தரப்பைச் சார்ந்தவராக இருந்தபோது நாம் கூறினாலும், கூறாவிட்டாலும் தமிழ்மக்கள் எதிர்த்தரப்பு வேட்பாளருக்கே ஒருமித்து வாக்களித்தனர்.

ஆனால் இம்முறை மூன்று பிரதான வேட்பாளர்களும் தமிழர்கள் மனதில் ஓரளவுக்கு சமனான இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

ஆகையினால் இம்முறை வாக்களிப்பைப் பொறுத்தமட்டில் நாம் கூறுவதைக் கேட்பதற்கு அவர்கள் (தமிழர்கள்) தயாராக இருக்கின்றார்கள். எனவே யாருக்கு வாக்களிக்குமாறு பிரதான தமிழ்த்தேசிய அரசியல் கட்சி வழிகாட்டுகிறதோ அதன்படி செல்லலாம் என்ற மனநிலை பலரிடம் உள்ளது.

கேள்வி – நீங்கள் உங்களது கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரால் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ‘தமிழ்த்தேசியத்துக்கு எதிராக நான் என்ன செய்துவிட்டேன்’ என எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பதில் – அத்தகைய விமர்சனத்தை ஏன் முன்வைக்கிறார்கள் என அவர்களிடம் தான் கேட்கவேண்டும். இருப்பினும் இதற்கு என்னால் ஒரேயொரு உதாரணத்தைத் தான் கூறமுடியும். கடந்த பாராளுமன்றத்தேர்தலின்போது வெளியிலிருந்து மாத்திரமன்றி எனது கட்சியில் இருந்தவர்கள்,

அதிலும் என்னுடன் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டவர்களே என்னை தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவன் எனக்கூறி பிரசாரம் செய்தனர். அவ்வாறு பிரசாரம் செய்த அனைவரும் தேர்தலில் தோல்வியடைந்தார்கள். சிறிதரனோ அல்லது சித்தார்த்தனோ அவ்வாறு கூறவில்லை. அவர்கள் வெற்றியடைந்தனர்.

அதேபோன்று இங்கு பலருக்கு ‘தமிழ்த்தேசியம்’ என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அதனைத் தேர்தல் யுக்தியாக மாத்திரமே பயன்படுத்துகின்றனர்.

‘தேசியம்’ என்றால் நிலத்தைப் பாதுகாக்கவேண்டும். அங்குள்ள மக்களுக்கு அங்கு தொடர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை காணப்படவேண்டும். அதற்கு உகந்த வாழ்வாதாரம் இருக்கவேண்டும். எனவே அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர, ‘தேசியத்தின்’ அர்த்தம் தெரியாமல், வெறுமனே வாய்வார்த்தையாக ‘தேசியம், தேசியம்’ என்று கூறிக்கொண்டிருப்பதால் மாத்திரம் அதனைப் பாதுகாக்கமுடியாது.

இருப்பினும் இதனைத்தவிர வேறு எதுவும் தெரியாத, இயலுமையற்ற நபர்கள் கையில் எடுக்கும் ஆயுதமே ‘தேசியம்’ என்ற சொல்லாகும். அதன்மூலம் மக்கள் மத்தியிலுள்ள உணர்ச்சியைத்தூண்டி அரசியல் செய்யமுடியும். அவர்கள் அதனைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

கேள்வி – ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் பிணக்குகளைத் தீர்த்து, மீண்டும் கட்சியை ஒருமுகப்படுத்தமுடியும் என நினைக்கிறீர்களா?

பதில் – கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை. கட்சி ஒன்றாகத்தான் இருக்கின்றது. கட்சியில் தலைமைத்துவத்துக்கான போட்டி நிலவியது.

ஜனநாயகக்கோட்பாடுகளின்படி அத்தகைய போட்டி கட்டாயமாக இருக்கவேண்டும். இருப்பினும் கட்சியின் யாப்பு மீறப்பட்டதாக வழக்கு நிலுவையில் இருக்கின்றது. அதனை சுமுகமாக முடிவுக்குக்கொண்டுவருவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி அடுத்தடுத்த தவணைகளில் அவ்வழக்கு முடிவுக்குவரும் என நம்புகின்றேன். குழப்பங்களின்றி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தமுடியாது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதாயின் அது ஏகாதிபத்தியமாகவே இருக்கும். இருப்பினும் தேர்தலின்போது நாமே பிரதான கட்சியாக இருப்போம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவோம். எனவே இதுபற்றி மக்கள் அங்கலாய்க்கவேண்டிய அவசியமில்லை.

கேள்வி – நீங்கள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில், அவர்களில் யாரை ஆதரிப்பதற்கான சாத்தியப்பாடு உயர்வாகக் காணப்படுகின்றது?

பதில் – தற்போதைய பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் மூன்று பிரதான வேட்பாளர்களும் ஒரேவிதமான உத்தரவாதங்களையே வழங்கியிருக்கின்றார்கள்.

ஆகையினால் இப்போது நான் அம்மூவரையும் சமதளத்தில் வைத்தே நோக்குகின்றேன். எனவே யாரை ஆதரிப்பது என்பது பற்றி இப்போது கூறமுடியாது.

ஆனால் யாரேனும் ஒருவரை நாம் நிச்சயமாக ஆதரிக்கவேண்டும். அதன்படி தமிழ்மக்களுக்கான முன்னேற்றகரமான தீர்வு உத்தரவாதத்தை வழங்கி, அதனை சிங்கள மக்களிடமும் பகிரங்கமாகக் கூறுகின்ற ஒருவரை இறுதித்தருவாயில் என்றாலும் தெரிவுசெய்து ஆதரிக்கவேண்டும்.

கேள்வி – தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுடன் இணைந்ததாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவது குறித்தும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுகின்றீர்களா?

பதில் – ஆம், உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் நாம் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

2015 நல்லாட்சி காலத்தில் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஓரளவு முன்னேற்றம் எட்டப்பட்டது. எங்களுடைய மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் நாம் திட்டவட்டமாக இருக்கின்றோம்.

எனவே அதனை முன்னிறுத்திய அழுத்தங்கள் எப்போதும் தொடரும். அதேபோன்று பொறுப்புக்கூறலின் ஊடாக மாத்திரமே நாட்டில் நிலையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதையும் சகலரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Share.
Leave A Reply