இஸ்ரேல்-இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்குக் பகுதி கொந்தளிப்பாகவே உள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது.

இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள்

இஸ்ரேல், இரான் – யார் கை ஓங்கியிருக்கிறது?

பிபிசி இந்த கேள்வியைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி எடைபோட்டது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies – IISS) இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது.

ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற பிற நிறுவனங்களும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கின்றன. ஆனால், பெரும்பாலும் புள்ளிவிவரங்களை வழங்காத இந்த நாடுகள் குறித்த ஆய்வில் துல்லியம் மாறுபடும்.

இருப்பினும், ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Peace Research Institute Oslo – PRIO) சேர்ந்த நிக்கோலஸ் மார்ஷ், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக ஐ.ஐ.எஸ்.எஸ் கருதப்படுகிறது, என்கிறார்.

இஸ்ரேல், தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் இரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது.

கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் 62,000 கோடி ரூபாய்).

இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இரானைவிட இரட்டிப்பாகும்.

தொழில்நுட்ப ரீதியில் முந்துவது யார்?

ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன.

ஜெட் விமானங்களில் நீண்டதூர வேலைநிறுத்த வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்ப F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள், மற்றும் வேகமான தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இரானிடம் சுமார் 320 போர்த் திறன் கொண்ட விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும். (F14 விமானம், 1986 திரைப்படமான ‘டாப் கன்’ மூலம் பிரபலமானது).

ஆனால் PRIO அமைப்பின் நிக்கோலஸ் மார்ஷ் கூறுகையில், இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை பறக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுதுபார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும், என்கிறார்.

 

அயர்ன் டோம் மற்றும் ஏரோ அமைப்புகள்

இஸ்ரேலின் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அயர்ன் டோம் மூலம் முறியடிக்கப்பட்டன

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இருக்கின்றன.

ஏவுகணைப் பொறியாளர் உசி ரூபின், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தில், இஸ்ரேல் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஆவார்.

இப்போது ஜெருசலேம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜி அண்ட் செக்யூரிட்டியின் மூத்த ஆராய்ச்சியாளரான அவர்,

கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் ‘அயர்ன் டோம்’ மற்றும் இஸ்ரேலின் சர்வதேச கூட்டாளிகள் அழித்ததைக் கண்டபோது தாம் எவ்வளவு ‘பாதுகாப்பாக’ உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார்.

“நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இலக்குகளுக்கு எதிராக இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவொரு குறுகிய தூர ஏவுகணைப் பாதுகாப்பு. வேறு எந்த அமைப்பிலும் இது போன்ற எதுவும் இல்லை,” என்றார்.

இஸ்ரேலில் இருந்து இரான் எவ்வளவு தொலைவில் உள்ளது?

இஸ்ரேல், இரானில் இருந்து 2,100கி.மீ., தொலைவில் உள்ளது. ஏவுகணைகள்தான் இரானை தாக்குவதற்கான இஸ்ரேலின் முக்கிய வழி, என ‘டிஃபென்ஸ் ஐ’ இதழின் ஆசிரியர் டிம் ரிப்லி பிபிசியிடம் கூறினார்.

இரானின் ஏவுகணைத் திட்டம் மத்தியக் கிழக்கில் மிகப் பெரியதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் கருதப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, இரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார்.

சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் படி, இஸ்ரேலும் பல நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்கிறது.

இரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்

கடந்த 1980 முதல் 1988 வரை அண்டை நாடான இராக் உடன் செய்த போரின் நேரத்தில் இருந்து, இரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் சௌதி அரேபியாவை குறிவைத்துத் தாக்கப்பட்ட ஏவுகணைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவை இரானில் தயாரிக்கப்பட்டவை என முடிவு செய்துள்ளனர்.

நீண்ட தூர தாக்குதல்

சிரியாவில் உள்ள இரானிய துணைத் தூதரகக் கட்டடம் ஏப்ரல் 1ஆம் தேதி வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது, அதில் மூத்த இரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்

‘டிஃபென்ஸ் ஐ இதழின் டிம் ரிப்லி கூறுகையில், இஸ்ரேல் இரானுடன் தரைப் போரில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்கிறார்.

“இஸ்ரேலின் பெரிய நன்மை அதன் விமானப் படை, மற்றும் அதன் வழிகாட்டும் ஆயுதங்கள். எனவே இரானில் உள்ள முக்கிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறன் அதனிடம் உள்ளது,” என்றார்.

அதிகாரிகளைக் கொல்லவும், எண்ணெய் நிறுவல்களைக் காற்றில் இருந்து அழிக்கவும் இஸ்ரேலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரிப்லி கூறுகிறார்.

“இதன் மையத்தில் இருப்பது ‘பனிஷ்’ தண்டனை. இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி, இது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி,” என்கிறார்.

கடந்த காலத்தில், இரானின் தாக்குதலைத் தூண்டிய சிரியாவின் தலைநகரில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அழித்தது உட்பட, உயர்மட்ட இரானிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

அதற்கோ, அல்லது இரானின் முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மறுக்கவுமில்லை.

அபு மூசா தீவில் ஒரு பாதுகாப்புப் பயிற்சியின்போது, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை வேகப் படகுகள்

கடற்படையின் பலம் என்ன?

ஐ.ஐ.எஸ்.எஸ் அறிக்கைகளின்படி, இரானின் கடற்படையில் சுமார் 220 கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் சுமார் 60 கப்பல்கள் உள்ளன.

சைபர் தாக்குதல்கள்

சைபர் தாக்குதல் நடந்தால், இரான் இழப்பதைவிட இஸ்ரேல் இழப்பது அதிகம்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இரானின் பாதுகாப்பு அமைப்பைவிட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது. எனவே இஸ்ரேல் ராணுவத்தின் மீது மின்னணு தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக அளவில் சாதிக்க முடியும்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் தேசிய சைபர் இயக்குநரகம், “இணைய தாக்குதல்களின் தீவிரம் முன்பைவிடக் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு இஸ்ரேலிய துறையிலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும். போரின்போது இரான் மற்றும் லெபனானில் இயங்கும் ஹெஸ்பொலா அமைப்பு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையே 3,380 சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அது தெரிவிக்கிறது.

இரானின் குடிமைத் தற்காப்பு அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கோலம்ரேசா ஜலாலி கூறுகையில், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரான் கிட்டத்தட்ட 200 இணையத் தாக்குதல்களை முறியடித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், இரானின் எண்ணெய் அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி, ஒரு இணையத் தாக்குதல் நாடு தழுவிய அளவில் பெட்ரோல் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறினார்.


படக்குறிப்பு, இரான் இஸ்ரேலின் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சாக்கடல் கரையில் கிடக்கிறது

அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல்

இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாகப் பேசுவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.

இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்படவில்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அது அணு ஆயுதங்கள் உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.
நிலவியல் மற்றும் மக்கள்தொகை

இரான் இஸ்ரேலைவிடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 8.9 கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையான 1 கோடியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு.

இரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1.7 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று ஐ.ஐ.எஸ்.எஸ். கூறுகிறது.

Share.
Leave A Reply