இந்தியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுவது புதிதல்ல. வருடத்தின் அதிக மழைப்பொழிவை பெறும் இந்த காலகட்டத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான்.
ஆனால் காலநிலை மாற்றம், பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது, குறுகிய காலத்தில் பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து நீண்ட கால வறட்சி பதிவாகிறது.
தற்போது விஞ்ஞானிகள் ‘வளிமண்டல நதி’ எனப்படும் ஒருவகையான புயல், இந்த நிலைமையை தீவிரமாக்குகிறது என்று கூறுகின்றனர். இது புவி வெப்பமடைதலால் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து நிலைமை மோசமாகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
‘பறக்கும் நதிகள்’ என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலின் வெப்பம் அதிகரித்து,
கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை.
இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை (band) அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது,
இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, ‘பறக்கும் நதிகள்’ உருவாகின்றன. அதன் பின்னர் மழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது.
இந்த ‘வானத்தில் உள்ள நதிகள்’ பூமியின் நடு அட்சரேகைகள் முழுவதும் நகரும் மொத்த நீராவியில் 90%-ஐ எடுத்துச் செல்கின்றன. அதாவது, சராசரியாக அமேசான் நதியின் வழக்கமான ஓட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை வெளியேற்றுகின்றன.
பல நூறு கோடி மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்
பூமி வேகமாக வெப்பமடைவதால், இந்த வளிமண்டல நதிகள் நீளமாகவும், அகலமாகவும், மேலும் தீவிரமாகவும் மாறி, உலகளவில் பல நூறு கோடி மக்களை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில், இந்தியப் பெருங்கடலின் வெப்பமயமாதல் ‘பறக்கும் நதிகளை’ உருவாக்கியுள்ளது, இது ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும் பருவமழையை பாதிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2023-ஆம் ஆண்டில் ‘நேச்சர்’ என்ற பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியாவில் 1951 மற்றும் 2020-க்கு இடையில் பருவமழை காலத்தில் மொத்தம் 574 ‘வளிமண்டல நதிகள்’ உருவானதாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“கடந்த இருபது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 80% வளிமண்டல நதிகள் இந்தியாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது,” என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, 1985 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையிலான பருவமழைக் காலங்களை ஆராய்ந்தது.
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 10 மிகக் கடுமையான வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஏழு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளால் ஏற்பட்டன என்பதை இந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் இருந்து நீர் ஆவியாதல் செயல்முறை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், வானிலை வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வெள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பருவமழைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி கொண்டு வரப்படும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் அதாவது ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் வளிமண்டல விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் தெரிவித்தார்.
“இதன் விளைவாக, சூடான கடல்களில் இருந்து ஈரப்பதம் அனைத்தும் வளிமண்டல நதிகளால் சில மணிநேரங்கள் முதல் சில நாட்களில் வரையிலான கால அளவில் வெளியேற்றப்படும்.
இது நாடு முழுவதும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது,” என்கிறார்.
`பறக்கும் நதிகள்’ : இந்தியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம்
மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகும் வளிமண்டல நதிகள்
ஒரு சராசரி ‘வளிமண்டல நதி’ சுமார் 2,000கி.மீ (1,242 மைல்கள்) நீளமும், 500கி.மீ அகலமும், கிட்டத்தட்ட 3கி.மீ ஆழமும் கொண்டது. இருப்பினும் இவை சமீக காலத்தில் மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகின்றன. சில நதிகள் 5,000கி.மீ நீளம் வரை உருவாகின்றன. அதே சமயம், அவை மனித கண்களால் பார்க்க முடியாத பண்புகளை கொண்டுள்ளது.
“அவை இன்ஃப்ரா ரெட் மற்றும் மைக்ரோவேவ் அதிர்வெண் பண்புகளைக் கொண்டுள்ளன,” என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல ஆராய்ச்சியாளர் பிரையன் கான் கூறுகிறார்.
“அதனால்தான் உலகெங்கிலும் உள்ள நீராவி மற்றும் வளிமண்டல நதிகளைக் கண்காணிக்க செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று கான் விவரித்தார்.
மேற்கத்திய இடையூறு (western disturbances), பருவமழை மற்றும் சூறாவளி போன்ற பிற வானிலை சூழல்களும் வெள்ளத்தை ஏற்படுத்தும்.
ஆனால் 1960-களில் இருந்து வளிமண்டல நீராவி 20% வரை அதிகரித்துள்ளதாக உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன.
வளிமண்டல நதிகள் தெற்காசியாவில் 56% தீவிர மழைப்பொழிவுக்குக் (மழை மற்றும் பனிப்பொழிவு) காரணம் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர், இருப்பினும் இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
அண்டை நாடான தென்கிழக்கு ஆசியாவில், வளிமண்டல நதிகள் மற்றும் பருவமழை தொடர்பான கனமழை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கப் புவி இயற்பியல் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்றில், பருவமழையின் ஆரம்ப காலத்தில் (மார்ச் மற்றும் ஏப்ரல்) கிழக்கு சீனா, கொரியா மற்றும் மேற்கு ஜப்பானில் 80% வரை அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டது.
“கிழக்கு ஆசியாவில் 1940 முதல் வளிமண்டல நதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது,” என்று ஒரு தனி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா எம் வல்லேஜோ-பெர்னல் கூறுகிறார்.
“அப்போதிலிருந்து அவை மடகாஸ்கர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் மீது மிகவும் தீவிரமாக உருவானதை நாங்கள் கண்டறிந்தோம்.” என்று விவரித்தார்.
படக்குறிப்பு, இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இந்த பருவத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு தான்
பிற நாடுகளில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் சமீபத்திய சில பெரிய வெள்ளங்களை வளிமண்டல நதிகளுடன் தொடர்புப் படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இராக், இரான், குவைத் மற்றும் ஜோர்டான் அனைத்தும் கடுமையான இடி, ஆலங்கட்டி மழை மற்றும் விதிவிலக்கான மழைக்குப் பிறகு பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
2005-ஆம் ஆண்டில் இதேபோன்ற நிகழ்வை விஞ்சும் வகையில், இப்பகுதி முழுவதும் உள்ள வானில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை வானிலை ஆய்வாளர்கள் பின்னர் கண்டறிந்தனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சிலி நாட்டில் மூன்று நாட்களில் 500மி.மீ மழை பொழிந்தது. பெரும் மழைப்பொழிவு பதிவானது. அது ஆண்டிஸ் மலையின் சில பகுதிகளில் பனியை உருக்கி, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வளங்களை அழித்த பெரிய வெள்ளத்தை உருவாக்கியது.
பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சூறாவளிகளைப் போலவே வளிமண்டல நதிகள் அவற்றின் அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் சூறாவளிகளைப் போல அனைத்து வளிமண்டல நதிகளும் தீங்கு விளைவிப்பதில்லை, குறிப்பாக அவை குறைந்த தீவிரத்தில் உருவாகும் போது. நீண்டகால வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைப் பொழிவை ஏற்படுத்தினால் நன்மை பயக்கக்கூடும்.
வளிமண்டல நதிகள் உருவாவது வேகமாக வெப்பமடைந்து வரும் வளிமண்டலத்தின் முக்கியமான சமிக்ஞை ஆகும்.
பிற இயற்கைச் சீற்றங்களை ஒப்பிடும் போது ‘வளிமண்டல நதிகள்’ குறித்து தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
“வானிலை ஆய்வாளர்கள், நீர்வியலாளர்கள், மற்றும் காலநிலை விஞ்ஞானிகளிடையே பயனுள்ள கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது சவாலாக உள்ளது.
ஏனெனில் இந்த வளிமண்டல நதிகள் இந்த பகுதிக்குப் புதியவை. மக்கள் மத்தியில் இது பற்றி அறிமுகப்படுத்துவது கடினம்,” என்று ஐ.ஐ.டி இந்தூரில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் ரோசா வி லிங்வா கூறினார்.
ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்தப் புயல் மற்றும் அதன் சாத்தியமான பேரழிவு தாக்கத்தை ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறுகிறார்.