மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட எஃப் – 16 போர் விமானங்களை யுக்ரேன் பயன்படுத்த உள்ளது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 65 போர் விமானங்களை யுக்ரேன் பெறுகிறது.

மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று யுக்ரேன் தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.

சில எஃப்.16 போர் விமானங்கள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட சூழலில், ரஷ்யாவுக்கு எதிரான யுக்ரேனின் படையெடுப்பில் பெரிய மாற்றங்களை இது ஏற்படுத்தலாம் என்றும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் எஃப் – 16 போர் விமானங்களை பெற தாமதம் ஏன்?

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, எஃப் – 16 போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கை வைத்தார்.

ரஷ்யாவின் போர் விமானங்களை யுக்ரேனின் எல்லைக்குள் நுழைய விடாமல் கட்டுப்படுத்தவும், யுக்ரேன் படைகளுக்கு வான்வழி மேலாதிக்கத்தை வழங்கவும் இத்தகைய போர் விமானங்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சில எஃப் 16 ரக போர் விமானங்களை பெல்ஜியம், டென்மார்க, நெதர்லாந்து மற்றும் நார்வே என நான்கு ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன.

யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி

இருப்பினும் யுக்ரேனுக்கு இத்தகைய நவீன, பலம் பொருந்திய போர் விமானங்களை வழங்குவது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்த போர் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் அனுமதி வழங்கினார்.

ஏற்கனவே இருந்த எஃப் – 16 ரக போர் விமானங்களை யுக்ரேனுக்கு வழங்கியிருக்கும் நான்கு நாடுகளும் தற்போது தங்களின் விமானப்படையில் அதிக திறன் வாய்ந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எஃப் 35-ஐ பெற்றுள்ளன.

முதல் தடவையாக 10 எஃப் – 16 ரக போர் விமானங்கள் ஜூலை மாத இறுதியில் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மொத்தமாக 65 போர் விமானங்களை யுக்ரேனுக்கு தருவதாக மேற்கத்திய நாடுகள் உறுதியளித்துள்ளன. அவற்றில் சில இந்த வருட இறுதிக்குள்ளும், மீதமுள்ள விமானங்கள் 2025-ம் ஆண்டு இறுதிக்குள்ளும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரேனுக்கு போர் விமானங்களை வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது எஃப் 16 ரக விமானங்களின் பற்றாக்குறையால் அல்ல. போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் இல்லாமல் இருந்ததே காரணம் என்று கூறுகிறார் பேராசிரியர் ஜஸ்டின் ப்ரோன்க். ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டியூட்டில் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் ராணுவ சிந்தனைக்குழுவில் இவர் பணியாற்றுகிறார்.

ஒரு விமானி இந்த போர் விமானத்தை இயக்க குறைந்தது நான்கு முதல் ஐந்து மாதங்கள் பயிற்சி பெற வேண்டும். அந்த போர் விமானத்தில் உள்ள அனைத்து தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்ள பல வருடங்கள் கூட ஆகலாம் என்கிறார் ஜஸ்டின்.

“யுக்ரேனின் நூற்றுக்கணக்கான விமானிகளுக்கு மேற்கத்திய நாடுகள் இத்தகைய பயிற்சிகளை ஒரே நேரத்தில் வழங்கும் என்று அந்த நாடு எதிர்பார்த்தது. ஆனால் அவர்களிடம் அத்தகைய வசதிகள் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

பெல்ஜியம், டென்மார்க, நெதர்லாந்து, நார்வே என நான்கு நாடுகள் யுக்ரேனுக்கு எஃப் 16 ரக போர் விமானங்களை வழங்கியுள்ளன

எஃப் – 16 ரக போர் விமானத்தை யுக்ரேன் எப்படி பயன்படுத்தும்?

எஃப் – 16 ரக போர் விமானங்கள் 1978ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தன. ஏவுகணைகளை ஏவவும், எதிரி நாட்டு விமானங்களை தாக்கவும் இந்த போர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டன.

எதிரிகளின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி, தரையில் முன்னேறிச் செல்லும் படையினருக்கு இந்த போர் விமானங்கள் உதவுகின்றன.

இருப்பினும், யுக்ரேன் தன்னுடைய பாதுகாப்புக்காக தான் இந்த போர் விமானங்களை பயன்படுத்தும் என்று தெரிவிக்கிறார் பிலிப்ஸ் ஓ பிரையான். இவர் ஸ்காட்லாந்தின் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் போர் வியூக படிப்பு துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

விண்ணிலேயே ஏவுகணைகளை அழிக்கும் வகையிலும் பதில் தாக்குதல் நடத்தும் வகையிலும் எஃப் 16 போர் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

யுக்ரேனிய படைகள் மற்றும் பொதுமக்கள் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த விமானங்களை யுக்ரேன் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கிறார் அவர்.

இந்த விமானங்கள் ஏற்கனவே யுக்ரேனில் உள்ள, நிலத்தில் இருந்து வான்வெளியில் வரும் ஏவுகணைகளை தாக்கும் பாதுகாப்பு அமைப்புடன் சேர்த்து உபயோகிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா யுக்ரேனுக்கு வழங்க இருக்கும் எஃப் 16 ரக போர் விமானங்கள் அதி நவீனமானவை என்று கூறுகிறார் ப்ரோன்க். “அமெரிக்காவில் உள்ள அதி நவீன போர் விமானங்கள் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியில் சிறப்பானவை இல்லையென்றாலும் கூட ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் வலிமை கொண்டவை இவை,” என்றும் அவர் தெரிவித்தார்.

“எதிர் வரும் குளிர்காலத்தின் தீவிர தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இதர வெப்பமூட்டும் மையங்களை குறிவைத்து நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல்கள் முறியடிக்கப்படும் பட்சத்தில் யுக்ரேனிய மக்கள் இந்த போர் விமானங்களை வரவேற்பார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

எஃப் 16 ரக விமானங்கள் விண்ணில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை. இவை ரஷ்யாவின் ராணுவ மையங்கள், ஆயுத விநியோக மையங்கள் போன்றவற்றை மிக தொலைவில் இருந்து தாக்க இயலும் என்றும் பேராசிரியர் ப்ரோன்க் கூறுகிறார்.

இருப்பினும்,”போர்க்களத்தில் யுக்ரேன் ராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் இந்த போர் விமானங்கள் பயன்படுத்த இயலாமல் போகலாம். ஏன் என்றால் ரஷ்யாவின் விமானப்படை மிகவும் வலிமையானது. யுக்ரேனியர்களால் அதனை நெருங்குவது கடினம்,” என்றும் எச்சரிக்கிறார் அவர்.

யுக்ரேனிய துருப்புகள் மற்றும் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் க்ளைட் (Glide) ரக வெடிகுண்டுகளை தடுப்பது எஃப் 16 ரக விமானங்களுக்கு சவாலான காரியம் என்று பேராசிரியர் ஓபிரையான் தெரிவிக்கிறார்.


ரஷ்யாவின் ஏவுகணைகளை தாக்க எஃப் 16 விமானங்கள் உதவக்கூடும்

யுக்ரேன் ரஷ்யாவை தோற்கடிக்க எஃப்-16 போர் விமானங்கள் உதவுமா?

அமெரிக்காவில் அமைந்திருக்கும் சிந்தனை குழுவான தி சென்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் அண்ட் இண்டெர்நேஷனல் ஸ்டடீஸ் (CSIS) வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த 65 போர் விமானங்களை விட அதிகமான ஆயுதங்கள் யுக்ரேனுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமின்றி எஃப் 16 ரக விமானங்கள் யுக்ரேனின் எல்லையில் இருக்கும் ரஷ்யாவின் விமானப்படைகளையும் தாக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை எல்லையில் இருந்து வெளியேற்றவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எஃப் 16 ரக விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு 2022ம் ஆண்டில் இருந்து யுக்ரேனிய மக்கள் அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்

12 விமானப்படைப் பிரிவுகள் இருந்தால் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிரான போரில் தேவையான உதவிகளை யுக்ரேன் விமானப்படை வழங்க இயலும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு பிரிவுக்கு 18 போர் விமானங்கள் என மொத்தமாக யுக்ரேனுக்கு 216 எஃப் 16 போர் விமானங்கள் தேவைப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

இருப்பினும் பேராசிரியர் ப்ரோன்க், மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே தங்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட எஃப்16 ரக போர் விமானங்களையே யுக்ரேனுக்கு வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இது வெறும் ஆரம்பம் தான். யுக்ரேனின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் எஃப் 16 ரக விமானங்களை அதன் விமானப்படையில் இணைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும்,” என குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply