நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோணப்பிட்டிய, சீனாக்கொலை தோட்டத்தில் கொலைசெய்து புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தே குறித்த பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றும் ஒருவர் பிரதேசத்தை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்தாரநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட பெண் அக்ரபத்தனை பகுதியில் அரச வைத்தியசாலையில் தாதியராக பணிபுரிந்து வந்து நிலையில் கோணப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளதாக அவரது கணவரால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நுவரெலியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து கண்டி பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய பெண்ணை கழுத்தை நெரித்து கொலைசெய்து புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் பன்வில பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி நேற்று வலப்பனை நீதவான் சியபத் விக்கிரமசிங்க முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மந்தாரநுவர பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அவரை கைது செய்ய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply