நஞ்சுப் பொருட்களைத் தவிர, நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களே சில வேளைகளில் நஞ்சாக மாறிவிடுவதுண்டு.
இதனில் இருவகை உண்டு. ஒன்று, உணவின் அளவு அதிகமாதல், இரண்டாவது உணவில் சேரும் பொருட்களினால் நஞ்சாதல். இதனை அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் மூலம், சேரிடம் அறிந்து சேர் என்பதன் மூலம் அறியலாம். இதனைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:
1. சக்திக்கு மீறிய உணவை அருந்தினால், உணவு செல்லும் வழி பெருத்து, மலம் அடைத்து, தன்னிலை கெட்டு, பெருமூச்சு விட்டு தலையை உருட்டும், வயிறு உப்பும், உடம்பு அனல் பட்டாற் போல் வியர்த்துத் துன்புறுத்தும்.
இதற்கு முறிவு: கீழ் நோக்கிப் பேதிக்கு இஞ்சிக் குடிநீர் (அ) மாத்திரை கொடுத்தல் வேண்டும்.
2. “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்றபடி உப்பை அளவுடன் உணவில் சேர்த்து உபயோகிக்க நலமாம். சோற்றுடன் அதிக உப்புச்சேர்த்து அதிகம் அருந்தினால் உரிய மூச்சு அடைத்து, இதயம் குறுகி, மூச்சுத்திணறி, மலவாய் சுருங்கி, அடைத்து, மலம் விழ முடியாமல் துன்பங்களைத் தரும்.
இதற்கு முறிவு: தயிரையாவது, புளித்த மோரையாவது உடனே கொடுக்கவும். .
3. உடல் வலுவாக, சோற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். இது அதிகப்படியானால் பலம் வாய்ந்த உடம்பானாலும், கை, கால்களை இழுக்கும். உடம்பை இசிவுடன் முறுக்கி, நரம்பையும் விறைப் பாக்கிவிடும்.
4. ஒரே வேளையில் நெய்யை அளவுக்கு மீறி உண்டவர்களுக்கு வயிற்று மந்தமும், செரியாமையும் உண்டாவதோடு, கல்லீரல் பாதிப்பும் உண்டாகும்.
இதற்கு முறிவு: பசுவின் பால் குடித்தால், நெய்யின் நஞ்சு வேகம் தணியும்.
5. வேர்க்கடலையை அதிகமாக உண்டால் வாந்தியும், தலைமயக்கமும் வாயில் நீர் சுரத்தலும் சிலருக்கு கழிச்சலும் உண்டாகும். அழல் அதிகமாக உண்டாவதால், நாவின் சுவை மாறும். நீர் வேட்கை உண்டாகும்.
இதற்கு முறிவு: கரும்பு, வெல்லம் தின்றால் வேர்க்கடலையின் நஞ்சுவேகம் முறியும்.
6. தேங்காயை அளவிற்கு அதிகமாக உண்டால் வாயில் நீர் சுரக்கும். நாவில் சுவை இருக்காது. வாந்தி, கழிச்சல், தலைமயக்கம், தண்ணீர் வேட்கை முதலியன உண்டாகும்.
இதற்கு முறிவு: கரும்பு, வெல்லம் அல்லது பச்சரிசி இவைகளில் ஒன்றை அளவோடு உட்கொண்டால் தேங்காய் நஞ்சு முறியும்.
7. கோழி முட்டையை அளவு கடந்து வேகவைத்தோ, அளவிற்கு அதிகமாகவோ உட்கொள்வதால் பசிமந்தமும், புளிஏப்பமும், செரியாமையும் உண்டாகும்.
இதற்கு முறிவு: முள்ளங்கிக்கிழங்கை உட்கொண்டால் முட்டையினால் உண்டான நஞ்சு வேகம் தணியும்.
8. வாழைப்பழத்தை அதிகமாக உண்டால் வயிறு மந்தப்பட்டு பொறுமும், பலமுறை வயிற்றை வலிக்கும். மலம் மிகவும் சூடாக வெளிப்படும்.
இதற்கு முறிவு : தேயிலைக் குடிநீரை உண்டால் வாழைப்பழத்தினால் உண்டான நஞ்சு நீங்கும்.
9. பலாப்பழம் அதிகமாக உட்கொண்டால் ஐயமும், மயக்கமும். வாய்கரித்தலும் உண்டாவதோடு வேறு பல பிணிகள் உண்டாவதற்கு காரணமாகவும் இருக்கும்.
இதற்கு முறிவு: நஞ்சின் வன்மைத்தகுந்த அளவு நெய் அல்லது தேன் கொடுக்க வேண்டும்.
10. நுங்கினை அதிகம் புசிப்பதால் வயிறு அடிக்கடிபோகும். வயிற்று வலி, வயிற்று உப்பிசம், பசியின்மை, மந்தப்படுதல் போன்றவைகள் உண்டாகும்.
இதற்கு முறிவு: பெருங்காயத்தைப் பொரித்து நோய் வன்மைக்குத் தக்க அளவு கொடுத்தால் நுங்கு நஞ்சு நீங்கும்.
11. மிளகாயை உண்டால் கண்களிலிருந்து நீர்வடியும், கண்சிவக்கும், குடல் தீனிப்பை- மார்பு – வாய் முதலியவை புண்படும், காரம் பட முடியாது. சீதக் கழிச்சலுண்டாகும். சாதாரணமாக மலம் போனாலும் கொதிப்பாக இருக்கும். வயிற்று நோய் உண்டாகும்.
இதற்கு முறிவு: கொத்தமல்லியையும், நெய்யையும் அதிக அளவாகச் சேர்த்து உட்கொண்டால் மிளகாய் வேகம் தணியும்,
12.தேன்,மீன்,கொழுப்பு, எண்ணெய், நீர் இவைகளில் இரண்டோ, மூன்றோ அல்லது அனைத்துமோ சம அளவில் சேர்த்தால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.
13. பாலுடன், மீன், புளிப்புக்கனிகள், கொள்ளு, கம்பு, காட்டுப்பயிறு, கீரைகள் இவைகளுடன் ஒன்றை சேர்த்து உண்டால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.
14. தயிருடன் கோழிக்கறி அல்லது மாமிசத்தை கலந்தால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.
15.தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்தால் நஞ்சுத் தன்மை உண்டாகும்.
16.முள்ளங்கியையும் உளுத்தம் பருப்பும் சேர்த்து உண்டால் நஞ்சாகும்.
17. மணத்தக்காளியுடன், திப்பிலி, தேன், மிளகு, வெல்லம் இவைகளுடன் ஒன்றையோ அல்லது பலவற்றையோ சேர்த்தால் நஞ்சாகும்.
18. மீன், முள்ளங்கி, கீரைகள், புசித்தவுடன் பால் அருந்தினால் நஞ்சு ஏற்படும்.
19. கரும்புதின்றவுடன் நீர் அருந்தினால் நாக்கு புண்ணாகும்..
20. பனம்பழத்தையும்,வாழைப்பழத்தையும் அடுத்தடுத்துப் புசித்தால் நஞ்சத்தன்மையை அடையும்.
பொதுப்பரிகாரம்:
உணவின் குற்றத்தால் உண்டாகும் செரியாமை, மந்தம் முதலிய வினைகளை ஒழிப்பதில் குளிர்ந்த நீரே நல்ல பலன் தரும்
எவ்வித நஞ்சுக்கும் இரண்டு வெற்றிலை, ஐந்து மிளகு எடுத்து கஷாயமாக செய்து காலை, மாலை இரண்டு வேளையாக மூன்று நாள் குடித்து வந்தால் உணவினால் ஏற்பட்ட நஞ்சுகள் போகும். இது பொதுவான பரிகாரமாகும்.
வள்ளுவர் கூறும் உணவு முறை:
நம்முடைய உடல் அன்னமயத்தினால் (உணவினால்) ஆனது என்கிறது சித்தர் மருத்துவம்.
ஒருவருடைய ஆரோக்கியமும், நோயும் அவன் உண்ணும் உணவையே சார்ந்து இருக்கின்றது.
உணவில் ஏற்படும் தவறுகளினால் அஜீரணம் உண்டாகிறது. இந்த அஜீரணத்தினால் நஞ்சுத் தன்மை உருவாகி எல்லா அணுக்களையும் கெடுக்கிறது.
தீபாவளி அன்று எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை சாப்பிட்டால் அதற்கு மருந்தாக தீபாவளி லேகியம் செய்து சாப்பிட்டு வந்தார்கள் நம் முன்னோர்கள்.
சர்க்கரைநோய், கொழுப்பு மற்றும் பல நோய்கள் தவறான உணவு முறைகளாலேயே வருகிறது.
இவற்றையெல்லாம் அறிந்த மாமருத்துவராகிய வள்ளுவர் உணவின் பெருமைகளையும், தவறான உணவினால் வரும் நோய்களையும் அழகாக ‘மருந்து’ என்ற அதிகாரத்தில்.
ஒருவன் முன்பு உண்ட உணவு ஜீரணம் ஆகிவிட்டதா என்பதை நன்றாக அறிந்து பின்பு அடுத்த வேளை உணவு உட்கொண்டால் அவரின் உடலுக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்றும்,
செரிமானம் ஆகும் உணவை மட்டும் பசி வந்தபின் உண்டு வந்தால் நோய் வருவதில்லை என்றும், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவை மட்டுமே உண்டு வந்தால் நோய் வராது என்றும் திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அறுசுவை அதிக மானால் வரும் பாதிப்புகள்:
1. இனிப்பு சுவை சார்ந்த உணவுப் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கொழுப்பு, கபம் சார்ந்த நோய்கள் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும், பசி குறையும். சோம்பல், மெத்தனம் போன்றவை மனதளவில் அதிகரிக்கும்.
2. புளிப்பு அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் தளர்ச்சி, பார்வை மங்கல், ரத்தசோகை, வீக்கம், கொப்புளம் போன்றவை ஏற்படும். மன அளவில் எரிச்சலையும், கடுப்பு தன்மையும், சிடுசிடுப்பையும் உண்டு பண்ணும் .
3. உப்பு உணவில் அதிகம் சேர்த்து உண்டு வந்தால் தலை வழுக்கை, நரை, நாவறட்சி, தோல் நோய்கள் போன்றவற்றை உண்டாக்கும். அதிகமாக உப்பு எடுப்பவர்கள் உணர்ச்சிவசப்படுவார்களாகவும், கோபதாபங்கள் உடையவர்களாகவும், ரத்த கொதிப்பு உடையவர்களாகவும் காணப்படுகின்றன.
4. கசப்பு சுவை உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலில் வறட்சியும், சிந்திக்கும் ஆற்றலில் குறைபாடும், எண்ணங்கள் வேகமாக செலுத்த இயலாத தன்மையும் ஏற்படும்.
5. காரம் நிறைய சாப்பிடுபவர்களுக்கு பலம் குறைவு, தோல் சுருக்கம் நடுக்கம், இடுப்பு மற்றும் முதுகு முதலிய இடங்களில் வலி, சுக்கிலம் குறைவு போன்றவை உண்டாகும்.
6. துவர்ப்பு சுவை உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், சுக்கில குறைவு, உடல் இளைப்பு போன்றவற்றை உண்டாக்கும். மன அளவில் பொறாமை போன்றவற்றை ஏற்படுத்தும்.
அறுசுவை உணவு பொருட்களையும் அளவோடு உண்டு நோயில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு கற்றுக் கொள்வோம்.
ஆதாரநூல்கள்:
1.நோயில்லாநெறி, 2.நஞ்சுமுறிவுநூல்,
3.திருக்குறள் 4.மருத்துவத்தனிப்பாடல்கள்