பிரிட்டனில் மிக நன்றாக திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்ரேலினால் நிதி உதவி அளிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது பள்ளிவாசல்கள் மற்றும் சொத்துக்கள் மீதான, அவர்களை பிரிட்டனில் இருந்து வெளியேறுங்கள் என்ற கோஷத்துடன் இடம்பெற்ற தாக்குதல்கள் பிரிட்டனில் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல.

காரணம் பிரிட்டனும் சியோனிஸ தரப்பும் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே முஸ்லிம்களுக்கு எதிராக ஒரே அணியில் திரண்ட சக்திகள்.

அமைதிப் பூங்காவாக இருந்த பலஸ்தீனத்தில் எங்கெங்கோ இருந்து கொண்டு வரப்பட்ட யூதர்களைக் குடியேற்றி வன்முறைகளின் மொத்த வடிவமான இஸ்ரேலை உருவாக்கியது முதல் இந்தக் கூட்டணி தொடருகின்றது.

உண்மையில் பாராளுமன்றத்தில் உதித்த பிரிட்டிஷ் – சியோனிஸ யூத சக்திகளின் கூட்டு சதிதான் பலஸ்தீனர்களின் உரிமைகளைப் பறித்தது.

பலஸ்தீன மக்களை அவர்களது சொந்த பூமியிலேயே அகதிகளாக்கியது. இன்னமும் அந்த மக்கள் தமது சட்ட பூர்வமான உரிமைகளை மீட்பதற்காக இரத்தத்தை சிந்தி உயிர்களைத் தியாகம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த கூட்டுச் சதி இன்றுவரை தொடருகின்றது.

இதில் மிக கிட்டிய கால சம்பவம் தான் பிரிட்டிஷ் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட தற்போதைய வன்முறைகள்.

துருக்கி பேரரசின் கீழ் முழு மத்திய கிழக்கும் இருந்த போது முதலாவது உலகப் போரில் அது தோற்கடிக்கப்பட்டது.

இந்த யுத்தத்தில் வெற்றியீட்டிய பிரிட்டனும் பிரான்ஸும் சைக்ஸ் – பிகொட் உடன்படிக்கையின் கீழ் அந்தப் பிராந்தியத்தை தமக்கிடையில் துண்டாடிக் கொண்டன.

அதன் பிறகு தமக்கு விசுவாசமான அரபு சர்வாதிகாரிகளை அங்கு ஆட்சியாளர்களாக நியமித்தனர். இன்றும் அந்த சர்வாதிகாரிகளும் அவர்களது வாரிசுகளும் தான் தமது மேலைத்தேச எஜமானர்களுக்கு பணிவிடை செய்வதில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதலாவது உலகப் போரின் பின் யூத சனத்தொகை வெறும் ஐந்து வீதமாக மட்டுமே காணப்பட்ட பலஸ்தீன பூமி, பிரிட்டனின் புதிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அவர்கள் யூதர்களோடு மிகவும் கைகோர்த்து செயல்பட்டு உலகம் முழுவதிலும் இருந்து யூதர்களை அழைத்து வந்து பலஸ்தீன பூமியில் குடியேற்றினர். இவ்வாறு தான் வன்முறைகளினதும் சூழ்ச்சிகளினதும் அத்திவாரத்தில் யூதர்களுக்கான நாடு உருவாக்கப்பட்டது.

யூத பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகளான மெனாச்சம் பெகின், யிட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் ஆகியோரின் தலைமையில் ஹகானா, ஸ்டேர்ன், இர்குன், ஸவாயி லியும் ஆகிய பயங்கரவாத குழுக்களால் பலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஏவிவிடப்பட்டன.

அவர்கள் பலஸ்தீனர்களைக் கொன்று குவிக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஒரு பேனைக் கத்தியை தன்வசம் வைத்திருந்த பலஸ்தீன நபர் கூட மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

இந்த பயங்கரவாத குழுக்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பக்க பலமாக நின்றது.

அதன் விளைவு டேர் யாஸின், கப்ர் காஸிம் என்பன உட்பட பல பலஸ்தீன கிராமங்களில் உயிர்களும் உடைமைகளும் சூறையாடப்பட்டன. பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வந்த பலஸ்தீனர்கள் பலவந்தமாக துரத்தப்பட்டும் கொல்லப்பட்டும் அவர்களது சொத்துக்கள் காவு கொள்ளப்பட்டன.

இந்த சம்பவங்களின் தொடராக 1947 நவம்பர் 20ல் ஐக்கிய நாடுகள் சபை அச்சுறுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் எல்லைகள் எதுவுமற்ற இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

கால் நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றும் இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் அட்டூழியங்களைத் தொடருகின்றது.

அந்த மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் அங்கு தொடருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் தொடர்ந்தும் ஆயுதங்கள் உட்பட இன்னும் பல உதவிகளை வழங்கி வருகின்றன.

சில அறிக்கைகளின் படி சக்திமிக்க முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் ஆதரவு பிரிவொன்று பிரிட்டனின் தீவிர வலதுசாரி தலைவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

அண்மைய இனவாத வன்முறைகளை ஒருங்கிணைத்து தூண்டிவிட்ட டொமி றொபின்ஸன் மற்றும் கெடி ஹொப்கின்ஸ் போன்றவர்கள் மட்டுமன்றி இன்னும் பலர் முஸ்லிம்களுக்கும் மற்றும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளில் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ள முஸ்லிம்கள் மற்றும் கறுப்பு நிற பிரிட்டிஷ்காரர்கள் இந்த இனவாதிகளின் பிரதான இலக்காக இருந்துள்ளனர்.

பல தலைமுறைகளாக இவர்கள் மோசமான இனவாத வன்முறைகளை தூண்டி வந்துள்ளனர்.

இந்த வலதுசாரி பிரிவினரால் இணைய வழியாக தவறான மோசமான தகவல்களய் துரிதமாகப் பரிமாறப்பட்டதை அடுத்தே அண்மைய வன்முறைகள் தலைதூக்கின.

ஜுலை மாதம் 29ம் திகதி மூன்று சிறுமிகள் மோசமான முறையில் கொல்லப்பட்டமைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று தவறான தகவல்களை இவர்கள் பரப்பினர்.

ஆனால் அந்த தாக்குதலை நடத்தியவர் பிரிட்டிஷ் பிரஜையான ஒரு கிறிஸ்தவர் என்பதும் அவர் ருவாண்டா வம்சாவழியை சேர்ந்தவர் என்பதும் பின்னர் தெரிய வந்தது.

இந்தக் கொலைகளுக்குப் பின் ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத குண்டர்கள் ஒரு கூட்டத்தை ஏவிவிட்டு அந்த இடங்களில் உள்ள பள்ளிவாசல்களைத் தாக்கினர்.

அதன் பிறகு படிப்படியாக பிரிட்டன் முழுவதும் உள்ள பல நகரங்களில் முஸ்லிம் விரோத மற்றும் குடியேற்றவதசிகளுக்கு விரோதமான தாக்குதல்கள் தீவிரப்படுததப்பட்டன. வாகனங்களும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இதன் விளைவு முழு உலகும் பிரிட்டனில் தீவிர வலதுசாரிகளின் இனவாத கலவரங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் காண நேர்ந்தது.

பிரிட்டிஷ் கொள்கைகளினதும் சமூக கட்டமைப்பினதும் நேர்த்தியான தீவிரவாத மற்றும் இனவாத வெளிப்பாடுகளை உலகம் கண்டது.

பிரிட்டிஷ் அரசியலிலும் சமூகக் கட்டமைப்பிலும் பொதிந்து கிடந்த ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதத்தை அது கோடிட்டுக் காட்டியது. தேசிய விவகாரங்களுக்காக பிரிட்டனில் சில குழுக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுவது இது ஒன்றும் புதியதல்ல. இவை வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலியாக இருக்கின்றன.

நாஸி ஜேர்மனியை போல, பாசிச இத்தாலியைப் போல இந்த வரிசையில் அண்மையில் இணைந்து கொண்ட இந்துத்வா இந்தியாவை போல, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவைப் போல காலத்துக்கு காலம் கொந்தளிக்கும் ஒரு விடயமாகவே இது உள்ளது. இவை ஜனரஞ்சக அரசுகளின் சுயரூபங்களாகவே உள்ளன. இந்த அரசுகள் தான் தீவிரமான எதிர்மறை தேசியவாதத்தை ஒரு வகையான சர்வாதிகாரத்தை மற்றும் இனவாதத்தை மக்கள் மத்தியில் தூண்டி விடுகின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இந்தக் குழுக்களின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்தார்.

இவை தனிமை படுத்தப்பட்ட சிறிய குழுக்கள் என அவர் வர்ணித்தார். இந்தக் கலவரங்களிலும் வன்முறைகளிலும் பங்கேற்ற அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கர்ச்சித்தார்.

ஆனால், இந்த தீவிரவாதிகளின் பாரதூரமான நிலை ஒரு புறம் இருக்க அவர்களை ஒரு சட்டவிரோத கூட்டத்தினர் என்றோ அவர்கள் செய்தது அப்பட்டமான பயங்கரவாதம் என்றோ மறந்தும் கூட ஒரு வார்த்தை கூட பிரதமரின் வாயில் இருந்து வரவில்லை என்பதையும் ஒரு பத்தி எழுத்தாளர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த சம்பவங்கள் இடம்பெற்ற போது, பிரிட்டனின் பயங்கர முகத்தை உலகம் பார்த்துக் கொண்டிருந்த போது, வன்முறைகள் தலைவரித்தாடிய போது பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரிவினர் எங்கிருந்தார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

அரசியல்வாதிகள் எவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை. யாரும் அறிக்கைகளை வெளியிடவும் இல்லை. காஸாவில் நடக்கின்ற இனப் படுகொலைகளுக்கு எதிராக பிரிட்டனில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போது அவற்றுக்கு எதிராக கொதித்து எழுந்த, அவற்றை கண்டித்த, வெறுப்புணர்வை தூண்டும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் யூதர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்றும் இன்னும் வேறு பல வார்த்தை ஜாலங்களாலும் அவற்றை வர்ணித்து கோஷமிட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிராவர்மன் கூட இந்த தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக வாய் திறக்கவில்லை.

லண்டன் பல்லைக்கழகத்தின் வருகை தரும் ஆய்வாளரும், யுத்தத்தை நிறுத்தும் கூட்டமைப்பு என்ற அமைப்பின் இணை ஸ்தாபகருமான ஜோன் றீஸ் இவ்வாறு சுறுகின்றார் ‘இத்தகைய கலகங்களைத் தடுப்பதற்கு முஸ்லிம் சமூகத்துடன் அவர்கள் நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்கு முன்வர வேண்டும்.

காரணம் றொபின்ஸன், பராஜ், பழமைவாத கட்சி மற்றும் அரசு ஆகிய பிரிவுகளால் இலக்கு வைக்கப்பட்ட சமூகம் அவர்கள் தான். அது மட்டுமன்றி ஈராக் யுத்தத்தின் பின் அடுத்தடுத்து ஏற்படட அரசியல் மயப்படுத்தப்பட்ட அலைகளால், உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான கூட்டு செயற்பாடு கொண்ட அரசியல் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் பாஸிஸத்துக்கு எதிரான முக்கியமானதோர் அம்சமாகும். பிரிட்டிஷ் வன்முறைகளின் பின்னணியிலும் இதே விடயம் தான் மத்திய மயப்படுத்தப்பட்டுள்ளது. முறிவடைந்துள்ள பிரிட்டனுக்கு தகுந்த மாற்றீட்டை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இடதுசாரி பிரிவு தள்ளப்பட்டுள்ளது.’

Share.
Leave A Reply