யுக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது நாளாக மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை தொடர்கிறது.

ரஷ்ய விமானம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது குறித்து செவ்வாய்கிழமை அதிகாலை யுக்ரேனிய அதிகாரிகள் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளை வெளியிட்டனர்.

ரஷ்யா போர் விமானங்களைக் கொண்டு மட்டுமின்றி பெரி யஅளவில் டிரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதும் பதிவாகியுள்ளது.

இதனால், யுக்ரேனின் வான் பாதுகாப்புப் படைகள், அந்நாடு முழுவதும் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில், நீண்ட தூர வான் மற்றும் கடலில் இருந்து துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் மூலம் யுக்ரேனில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்புகளை தாக்கியதாக கூறியுள்ளது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களால், யுக்ரேனில் ஒரே இரவில் குறைந்தது 6 பேர் இறந்தனர். யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதால் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

யுக்ரேனில் மின்சார உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால் பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் தாக்குதல்களை “அட்டூழியமானது” என்று விமர்சித்துள்ளார். யுக்ரேனின் எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

“சிவில் உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் கோழைத்தனமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் இது” என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல்

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள க்ரிவி ரிஹில் நகரத்தில் திங்கள்கிழமை பிற்பகுதியில் ரஷ்ய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலரை காணவில்லை.

ஜபோரிஷியா பிராந்திய நிர்வாகத் தலைவர் இவான் ஃபெடரோவ், ஜபோரிஷியா நகரில் ஒரு ஆண் கொல்லப்பட்டதாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். இந்த சம்பவத்தில் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல ஹைப்பர்சோனிக் கின்சால் (டாகர்) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை இடைமறித்து தாக்கி அழிப்பது என்பது யுக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புக்கு கடினமான ஒன்றாக உள்ளது.

அந்நாட்டின் கர்ஸ்க் பிராந்தியத்தின் ஒரு பகுதியை யுக்ரேன் சமீபத்தில் கைப்பற்றிய பிறகு, இந்த போர் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சியாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.


ஸெலென்ஸ்கி, யுக்ரேன் அதிபர்

அமெரிக்காவுக்கு யுக்ரேன் வேண்டுகோள்

பிப்ரவரி 2022 இல் தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பத்தில் இருந்தே யுக்ரேனின் ஆற்றல் உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்து வருகிறது.

சமீப மாதங்களில், யுக்ரேனிய மின்சார உள் கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷ்யா புதுப்பித்துள்ளது, இதனால் யுக்ரேன் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இந்தப் போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி செய்யும் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகள், அந்த ஆயுதங்களை பயன்படுத்த விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் உள் பகுதியில் தாக்குவதற்கு அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க சில மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த யுக்ரேன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்த மேற்கத்திய நாடுகள் அனுமதிக்கவில்லை.

ஐரோப்பிய விமானப்படைகள் யுக்ரேனின் வான் பாதுகாப்புடன் இணைந்து செயல்பட்டால், “உயிர்களைப் பாதுகாக்க நாம் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும்” என்று ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply