“ஒழுக்கத்தை ஊக்குவிப்பதையும், தீயொழுக்கத்தை தடுப்பதையும்” நோக்கமாக கொண்டது என தாலிபன்கள் கூறும் புதிய சட்டங்கள் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் வீடுகளுக்கு வெளியே முகங்களை காட்டுவதையும், பொதுவெளியில் சத்தமாக பேசுவதையும் இந்த சட்டங்கள் தடை செய்கின்றன.
இந்த புதிய சட்டங்களுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இது குறித்து தங்களின் கவலையையும் தெரிவித்துள்ளது.
இந்த சட்டங்கள் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை இருண்டதாக மாற்றியுள்ளது என்று ஞாயிற்றுகிழமை ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
தாலிபனின் அதிவுயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்ஸாடா இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இந்த சட்டத்தில் இருந்து இந்த நாட்டில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்று ஆப்கானிஸ்தானின் ஒழுக்கநெறி அமைச்சகம் கூறியுள்ளது.
ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும்? பொதுவெளியில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் எதை உண்ண வேண்டும்? என்பது தொடர்பான ஆப்கானிஸ்தான் மக்களின் பொதுவாழ்வில், ஒழுக்கநெறி காவலர்கள் (மொஹ்டாசபீன்) தலையிட இந்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன.
இந்த சட்டம், பொதுவெளியில் பெண்கள் பேசுவதும் ஒழுக்கக்கேடான செயலாக அறிவித்துள்ளது.
“தேவை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒரு பெண் தன்னுடைய முகம், உடல், மற்றும் குரல் ஆகியவற்றை மறைக்க கடமைப்பட்டுள்ளனர்,” என்று இந்த சட்டம் தெரிவிக்கிறது.
ஷரியா சட்டங்களின்படி (இஸ்லாமிய மத சட்டங்கள்) ஏற்கனவே இது போன்ற விதிகளை இந்த அமைச்சகம் விதித்து வருகிறது. மேலும், இந்த நடைமுறையை பின்பற்றாத ஆயிரக்கணக்கான நபர்களை பிடித்து வைத்துள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சட்டங்கள் ஷரியா விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அதனை ஒழுக்கநெறி அமைச்சகம் நடைமுறைப்படுத்த உள்ளது என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர். தாலிபன் அதிவுயர் தலைவர் ஏற்கனவே இதற்கு 2022ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வமாக இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் குறித்து இந்த சட்டம் என்ன சொல்கிறது?
‘ஆண்களைக் கவர்வதையும், அவர்களுக்கு தீயொழுக்கம் ஏற்படுவதையும் தடுக்கும் வகையில்’, பெண்கள் எவ்வாறு தங்களது முகம் உட்பட மொத்த உடலையும் கட்டாயம் மறைக்க வேண்டும் என்று இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பெண்கள் அவர்களின் உடலை முழுமையாக மறைக்க வேண்டும்
* ஆண்களை கவர்வதை தடுக்கும் வகையில் பெண்கள் அவர்களின் முகங்களை மறைக்க வேண்டும்
* பெண்களின் குரலும் ‘அவ்ரா’ என்று கருதப்படுவதால் அவர்கள் பொதுவெளியில் பேசக் கூடாது. அரபிய வார்த்தையான அவ்ராவின் பொருள், உடலில் மறைக்கப்பட வேண்டிய பாகங்கள் என்பதாகும். இது ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் உள்ள எந்த பாகமாகவும் இருக்கலாம். பொதுவெளியில், அடுத்தவர்களின் பார்வையில் அவை மறைத்து வைக்கப்பட வேண்டும்.
* பெண்கள் அவர்களின் வீடுகளுக்குள்ளும் பாடவோ, சத்தமாக வாசிக்கவோ கூடாது.
* பெண்களின் ஆடைகள் மெல்லியதாக, குட்டையாக, இறுக்கமாக இருக்கக் கூடாது.
* இரத்த பந்தங்கள், திருமண உறவுகள் வழியாக கிடைத்த ஆண் உறவினர்களை தவிர வேறுயாருக்கும் தெரியாத வகையில் பெண்கள் அவர்களின் உடலை மறைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களின் உடல்களையோ, முகங்களையோ ஆண்கள் பார்க்கக் கூடாது என்றும் அதே போன்று பெண்களும் ஆண்களை பார்க்கக் கூடாது என்றும் சட்டத்தில் விதிமுறைகள் உள்ளன.
ஆண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள்
இந்த புதிய சட்டங்கள், ஆண்களுக்கும் சில தடைகளை விதித்துள்ளது.
ஆண்கள் வீட்டுக்கு வெளியே இருக்கும் போது தொப்புள் முதல் முழங்கால் வரை மறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உடல் பாகங்கள் ‘அவ்ரா’ என்று அழைக்கப்படுவதால் இதனை மறைக்க வேண்டும் என்ற புதிய சட்டம் கூறுகிறது.
ஷரியாவுக்கு எதிரான வழியில் ஆண்கள் சிகை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த சட்டங்கள் கூறுகின்றன. ஷரியா விதிகளுடன் தொடர்புடையதால், ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் முகச்சவரம் செய்யவும், ட்ரிம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் ஆண்களுக்கு தாடி நீளமாக இருக்க வேண்டும். அவர்கள் டை கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த மொஹ்டாசபீன்கள்?
ஆப்கானிஸ்தானின் அனைத்து பிராந்தியங்களிலும் இந்த சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு மொஹ்டாசபீன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை இவர்கள் மேற்பார்வையிடுவார்கள். மேலும் குற்றம் செய்யும் நபர்களை அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வார்கள்.
தாலிபன் தலைவர்களின் முழுமையான ஆதரவை இவர்கள் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள சூழலில் முன்பு இருந்ததைக் காட்டிலும் இவர்களுக்கு தற்போது கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
இவர்கள் வீடுகளில் இருந்து வெளியே பெண்களின் குரல் மற்றும் இசை கேட்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். விதிகளுக்கு மீறி ஆண்கள் முடியை வளர்த்தால் அதை வெட்ட சொல்வார்கள்.
அப்பா அல்லது சகோதரன் உட்பட ஆண்களின் துணை இல்லாமலோ அல்லது ஷரியா விதிகளுக்கு உட்பட்டு ஹிஜாப் அணியாமல் வரும் பெண்களுக்கு டாக்ஸி டிரைவர்கள் பயண சேவையை வழங்குவதை இவர்களால் தடுத்து நிறுத்த இயலும்.
ஆண்களும் பெண்களும் காரில் அருகருகே அமைந்து பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுக்க தடை
எந்த ஒரு உயிரினத்தையும் புகைப்படம் எடுக்கவோ, அந்த புகைப்படத்தை வைத்திருக்கவோ அல்லது வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை, விலங்குகள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
சிலைகள் விற்கவும் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடல்கள் ஒலிபரப்புவது போன்ற செயல்களுக்கு டேப் ரெக்கார்டர்கள், ரேடியோக்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தடுக்க மொஹ்டாசபீன்களுக்கு உரிமை உள்ளது. இது ஷரியா விதிகளின் படி ஹராம் என்று கூறப்பட்டுள்ளது.
உயிருள்ள உயிரினத்தை படம் எடுப்பதற்கு, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதில் முரண்பாடு என்னவென்றால், ஒழுக்க நெறித்துறை அமைச்சர் முகமது காலேத் ஹனாஃபி உட்பட அனைத்து தாலிபன் அரசு தலைவர்களும் கேமராவுக்கு முன் நின்று தங்களை புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
என்னென்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளன?
ஒரு நபர் “கண்டிக்கத்தக்க செயல்” ஒன்றை வெளிப்படையாக செய்தால், அவருக்கு பல தண்டனைகள் வழங்கப்படும் என சட்டம் கூறுகிறது.
”கடவுளின் தண்டனை கிடைக்கும் என அச்சுறுத்துவது, அறிவுரை வழங்குவது, அபராதம் விதிப்பது, சிறையில் முன்று நாட்கள் வரை அடைப்பது’ என பல தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சட்டம் கூறுகிறது.
இந்தச் சட்டம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.வின் உதவி குழுவின் தலைவர் ரோசா ஒடுன்பயேவா, “பிரார்த்தனைக்கு தாமதமாக வந்தாலோ, குடும்ப உறுப்பினரைத் தவிர எதிர் பாலினத்தவரை பார்த்தாலோ அல்லது தான் நேசிப்பவரின் புகைப்படத்தை வைத்திருந்தாலோ மக்கள் அச்சுறுத்தப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். ”
“மோசமான மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில், பல ஆண்டுகளாக நடைபெற்ற போருக்குப் பிறகு ஆப்கன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தேவை” என கூறியுள்ளார்.
புதிய விதிகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை
தாலிபன் அரசு ஒரு மதம் சார்ந்த சட்டத்தை விதித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்க போவதில்லை. ஆனால் தலைநகர் காபூல் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இந்த சட்டம் முறையாக பயன்பாட்டில் இல்லை.
இந்த புதிய சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்கி வருவதாக, ஒழுக்கநெறி அமைச்சகத்தை சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
அவை முடிவு செய்யப்பட்டவுடன் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இன்னும் தெளிவு இருக்கும் என்றும் அவர் கூறினார்
இருப்பினும், சட்டத்தின் கீழ் உள்ள பெரும்பாலான பிரிவுகள் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டில், ஷரியாவுக்கு இணங்காததற்காக 13,000க்கும் மேற்பட்டவர்களை ஒழுக்கநெறி காவலர்கள் தற்காலிகமாக பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.