கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குறைவான ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், வீட்டு வசதி, சுகாதார போன்ற பொதுச் சேவைகளில் அந்நாடு சவால்களைச் சந்திப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சியில் சுமார் 97% குடியேற்றம் பங்கு வகித்ததாக கனேடிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கனடாவில் பயின்று அங்கு ஐ.டி., துறையில் வேலை பார்த்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இங்கு இப்போது தொழிலாளர் சந்தை மிக மோசமான நிலையில் இருக்கிறது. சராசரியான சம்பளத்தில் ஒரு சாதாரண வேலை வேண்டுமென்றாலே அதற்கு அதிகமான சிபாரிசுகள் தேவைப்படுகின்றன,” என்கிறார்.

மேலும் ,”வெளிநாட்டினர் மட்டுமின்றி கனேடியர்களும் வேலை கிடைப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வேலையின்மை விகிதம் இங்கு அதிகமாக உள்ளது. இதற்கு இங்குள்ள கனேடியர்கள் குடியேற்றங்களைக் காரணமாகக் கூறுகின்றனர்.

“என்னதான் குடியேற்றப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கனேடிய மக்களின் ஆதரவு அரசுக்கு முக்கியம். ஆகையால் இந்த நிலைமையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ட்ரூடோ அரசுக்கு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.

கனடாவில் அதிகரிக்கும் வேலையின்மை

ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அரசாங்கமும் சேவைகள் அல்லது வீட்டு வசதியை மேம்படுத்தாமல் குடியேற்றத்தை அதிகரிப்பதாக விமர்சிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு மாதங்களில் 6.4% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திட்டத்தை மாற்றியமைப்பதாகக் கூறினார்.

“ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடிக்கப் போராடும் கனேடியர்களுக்கு இது நியாயம் செய்யவில்லை. தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் இது நியாயம் செய்யவில்லை. அவர்களில் சிலர் தவறாக நடத்தப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம்

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் என்பது கனடாவில் இருக்கும் முதலாளிகள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு திட்டம்.

இதுகுறித்து விளக்கிய கனடிய குடியேற்றம் தொடர்பான CANext நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞருமான நடராஜன் ஸ்ரீராம், “ஓர் உணவகத்தின் முதலாளிக்கு சமையல் வல்லுநர்கள் ஐந்து பேர் தேவையெனில், அதற்கான ஒப்புதல்களைப் பெற்று அவர் வெளிநாடுகளில் இருந்து அவர்களைப் பணிக்கு அமர்த்த முடியும். அதற்கு இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் உதவுகிறது,” என்கிறார்.

இந்தத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிநாட்டு மாணவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறும் நடராஜன், “கனடாவில் தற்போது நிகழும் வேலையின்மை பிரச்னை, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதியில் நிலவும் போதாமை காரணமாக இந்த முடிவு அவசியமாகிறது,” என்று கூறுகிறார்.

கோவிட் காலகட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சமநிலையின்மையின் விளைவுகளை அந்நாடு தற்போது எதிர்கொண்டு வருவதால் இந்த மாற்றம் அவசியமாவதாகவும் அவர் விவரித்தார்.

‘நவீன அடிமைத்தனம்’ என்று விமர்சித்த ஐ.நா. அறிக்கை

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் கனடாவில் உள்ள முதலாளிகள் தகுதியான கனேடியர்கள் கிடைக்காதபோது, தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.

இந்தத் திட்டம் தொழிலாளர் நல வழக்கறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் ஐ.நா., இந்த மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது ‘தற்கால அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக’ கூறியது.

பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியரான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, “துஷ்பிரயோகம், தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெறுவது போன்ற புகார்கள்,” தனக்கு வந்ததாகக் கூறினார்.

சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு தொழிலாளர் பற்றாக்குறை உள்ள தொழில்களுக்கு உதவும் திட்டத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்த நிலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பின்படி, 2023-இல், 183,820 தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் அனுமதிகள் வழங்கப்பட்டன. இது கடந்த 2019-இல் வழங்கப்பட்டதைவிட 88% அதிகம்.

கடந்த திங்கள் கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், ‘கனடாவில் திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்துவதைத் தவிர்த்து, சுரண்டுவதற்காக’ இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியதாக வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பு முதலாளிகளை விமர்சித்தது.

Share.
Leave A Reply