ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது கடந்த 26ம் திகதி அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 28-வது மாடியில், வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் பயங்கர வேகத்தில் மோதி வெடித்து சிதறியது. அப்போது, அந்த தளம் மட்டுமின்றி, அதற்கு கீழே, மேலே இருந்த (27, 29-வது மாடிகள்) தளங்களும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கின. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 3 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது:
“ரஷியாவின் கிரோவ் பிராந்தியம், கோட்டல்நிச் பகுதியில்அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து 1,500 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது”
இவ்வாறு அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.