தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி, கருவறையில் உள்ள மூலவர்களின் மீது விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இது எப்படிச் சாத்தியமானது?
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதுபோல வடிவமைக்கப்பட்ட கோவில்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் சங்கரனார் கோவிலில் செப்டம்பர், மார்ச் மாதங்களில் தலா மூன்று நாட்களில் சூரிய ஒளி மூலவர் சிலை மீது விழும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் ஆவணி மாதத்தின் குறிப்பிட்ட தினத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள எழுத்தறிநாதர் கோவிலிலும் இதுபோல குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி மூலவர் மீது விழுவதைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் உள்ள சிவன் கோவிலிலும் இதுபோல சூரிய ஒளி அங்கிருக்கும் மூலவர் மீது விழுகிறது. இந்தக் கோவிலுக்கு வேறு சில சிறப்புகளும் இருக்கின்றன.
வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது என்ன?
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செங்கற்களால் கட்டப்பட்டு, பிறகு கருங்கற்களால் புனரமைக்கப்பட்டது என்கிறார் விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ்.
“சோழர் காலத்தில் இருந்து நாயக்கர் காலம் வரை பல்வேறு மாற்றங்களுக்கு இந்தக் கோவில் உட்பட்டிருந்தாலும் கருவறை கட்டுமானம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனின் அனுக்கியான பரவை நங்கை நினைவாக இந்த ஊருக்கு பரவை புறம் எனப் பெயர் சூட்டப்பட்டது. அது மருவி தற்போது பனையபுரம் என அழைக்கப்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.
‘இராஜ ராஜ வள நாட்டில்
பனையூர் நாட்டு பொறையூர் நாட்டு
தனியூர் பரவைபுரம்’ என்ற கோவில் கல்வெட்டுத் தொடர் மூலம் இதை அறிய முடியும்.
கி.பி.1051 – 63ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டும் அதி ராஜேந்திரனின் கி.பி.1070ஆம் ஆண்டு கல்வெட்டும் இந்தக் கோவிலில் உள்ளன.
“சோழர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோவில் 73 சென்ட் நிலப்பரப்பில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோலின் கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை. இதன் ராஜகோபுரம் 60 அடி உயரத்தில் நான்கு நிலைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கோபுரமும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை. இக்கோவிலின் கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராக, கிழக்கு முகமாகக் காட்சியளிக்கிறார். கல்வெட்டுகளில் இம்மூலவர், ‘கண்ணப்ப நாயனார்’ என்றும் ‘பரவை ஈஸ்வரம் உடைய மகாதேவர்’ என்றும், ‘திருப்பனங்காடு உடைய மகாதேவர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார்,” என்று கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.
கோவில் கட்டுவதற்கான இடத்தின் தேர்வு
படக்குறிப்பு, பனையபுரம், இலவனாசூர் கோட்டை, மதுரை போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் சூரிய ஒளி கருவறையில் படுமாறு கட்டப்பட்டுள்ளன
சிவன் சன்னிதிக்கு இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவியின் பெயர் மெய்யாம்பிகை. புறவம்மை, சத்யாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றையெல்லாம் கடந்து கருவறையில் உள்ள மூலவர் மீது விழுகின்றன.
இதற்குப் பிறகு, ஒளி மெல்லக் கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகிறது. இங்கே சூரிய ஒளி பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள மெய்யாம்பிகையின் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இப்படித் தொடர்ந்து ஏழு நாட்கள் நிகழ்கின்றன.
குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி மூலவரின் மீது படுவதுபோல கோவில்கள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன?
அதற்குக் காரணமாக கோவில்களைக் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட முறையைக் குறிப்பிடுகிறார் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுவைச் சேர்ந்த ஸ்தபதி தட்சிணாமூர்த்தி.
படக்குறிப்பு, தென்னிந்தியாவில் உள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி, அந்தக் கோவில்களின் மூலவர் மீது விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன
“கோவில்களை கட்டுவதற்கு ஏற்ற இடங்கள் அக்காலத்தில் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் வானியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதுபோன்ற கோவில்கள் கட்டப்படுகின்றன,” என்கிறார் அவர்.
பனையபுரம், இலவனாசூர் கோட்டை மதுரை போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் சூரிய ஒளி கருவறையில் படுமாறு கட்டப்பட்டுள்ளன.
இம்மாதிரி கோவில்களில் “கிழக்கு நோக்கிய வகையில் கருவறை அமைக்கப்படும். சூரிய ஒளி விழும் இடத்திற்கான சோதனை பல மாதங்கள் நடைபெற்று, அதன் அடிப்படையிலேயே அந்த இடத்தில் கருவறை நிர்மாணிக்கப்படுகிறது. பனையபுரம் சிவன் கோவில் அப்படித்தான் கட்டப்பட்டது” என்கிறார் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி.
ஸ்தபதிகள் கூறுவது என்ன?
ஸ்தபதி தட்சிணாமூர்த்தியின் கூற்றுப்படி, இதுபோன்ற அமைப்புடன் கோவிலைக் கட்டுவதற்கு ஸ்தபதிகளுக்கு நேர்த்தியும் மிகுந்த பொறுமையும் தேவைப்படும். “வெகு நாட்கள் காத்திருந்து, குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளிக் கதிர்கள் விழும் இடத்தைத் தேர்வு செய்து, கருவறையை அமைத்தனர்.”
பெரும்பாலும் சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது விழுமாறுதான் இதுபோன்ற கோவில்கள் கட்டப்படும். சில கோவில்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தூண்களில் சூரிய ஒளி விழுமாறும் கட்டப்பட்டுள்ளன.
பெரும்பாலும் சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது விழுமாறுதான் இதுபோன்ற கோவில்கள் கட்டப்படும்
ஆனால், தற்காலத்தில் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவில்கள் கட்டப்படுவதால் இதுபோல கட்டுவதில்லை என்கிறார் தட்சிணாமூர்த்தி.
கன்னியாகுமரியில் “மகாத்மா காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் 1956இல் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சூரியக் கதிர்கள் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் விழும்படி இம்மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது” என்கிறார் தட்சிணாமூர்த்தி.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள முக்தீஸ்வரர் கோவில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு திருமூலநாதர் கோவில், வேலூர் மாவட்டம் மேல்பாடி சோளீஸ்வரர் சிவன் கோவில் ஆகியவையும் இதுபோல குறிப்பிட்ட தினங்களில் சூரிய ஒளி மூலவரின் மீது விழும்படி கட்டப்பட்டுள்ளன.