கேள்வி: இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது?

பதில்: மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பின் ஆரம்பமாகும்.

இதன் பிரகாரம் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக ஐ தே கட்சியின் சார்பில் ஜே ஆர். ஜெயவர்த்தன பதவியைப் பெற்றார்.

அவரது பதவிக் காலம் என்பது இலங்கையின் அரசியலை முழுமையாக மாற்றிய காலமாகும். 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் சோல்பரி அரசியல்யாப்பின் பிரகாரம் பாராளுமன்ற அடிப்படையிலான ஆட்சி நடைபெற்றது.

பாராளுமன்றம் சட்டவாக்கத்தையும், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்று அதிகாரத்தையும், நீதித்துறை நாட்டின் ஆட்சி முறை அரசியல் அமைப்பின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதாகவும், மீறினால் தண்டனை வழங்கும் சுயாதீனக் கட்டுமானம் என மூன்று தனித்தனி சுயாதீன அமைப்புகளாகச் செயற்பட்டிருந்தன.

ஆனால் 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டிலிருந்த சுயாதீன நிர்வாகங்களை அதிகாரம் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்குள் கொண்டு வந்ததால், பாராளுமன்றம், நீதித்துறை என்ற சுயாதீன அமைப்புகள் யாவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

அரசியல் கட்டுமானம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானமும் அந்நிய மூலதனக் குவிப்பிற்குள் தள்ளப்பட்டது. நாடு வெளிநாட்டுப் பொருட்களின் சந்தையாக மாற்றப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின் நாடு நவ-தாராளவாத திறந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டது.

ஜே ஆர் ஜெயவர்த்தன

ஜே ஆரின் பின்னர் ஐ தே கட்சியின் சார்பில் பிரேமதாஸ இரண்டாவது ஜனாதிபதியானார். அவரது காலத்தில் சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் மிக அதிகளவில் ஐ தே கட்சிக்குள் ஊடுருவியது.

இதுவரையும் மேற்குலக லிபரல் ஜனநாயகத்தின் நிழலாகவும், பின்னர் நவ-தாராளவாத ஜனநாயகத்தையும் பின்பற்றிய அக் கட்சி சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இருப்பிடமாகியது. அதனால் அதன் மேற்குலக குணாம்சங்கள் படிப்படியாக அகலத் தொடங்கின.

பிரேமதாஸ அவர்களின் படுகொலைக்குப் பின்னர் துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயற்பட்ட டி பி விஜேயதுங்க மூன்றாவது ஜனாதிபதியானார்.

இவரது பதவிக் காலம் சில மாதங்களே நீடித்தது. ஜே ஆர் காலத்தில் ஆரம்பித்து கூர்மை அடைந்து சென்ற இன முரண்பாடுகள் மேலும் வளர்ந்து சிவில் யுத்தமாக மாறிய நிலையில் சிவில் யுத்தம் என்பது பயங்கரவாதமாக மாற்றம் பெற்று ராணுவ ஆதிக்கம் அரச கட்டுமானத்திற்குள் படிப்படியாக நுழைந்;தது.

தெற்கில் ஜே வி பி இனது போராட்டங்களும், தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் சிவில் யுத்தமும் வளர்ச்சியடைந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரச பயங்கரவாதம் சொந்த மக்களைக் கொன்று குவித்தது.

இவை நாட்டின் பொருளாதாரத்தையும், அரச ஜனநாயககட்டுமானங்களையும் மிகவும் பின்தள்ளியது. இந் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலில் சந்திரிகா பண்டாரநாயக்கா 1994இல் நான்காவது ஜனாதிபதியானார்.

சந்திரிகாவின் ஆட்சிக் காலம் என்பது ஒரு புறத்தில் சமாதானத்தை கட்டி எழுப்பவும், மறுபுறத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் இரு புறங்களிலும் காணப்பட்ட தீவிரவாத சக்திகள் அவரது முயற்சிகளைத் தோற்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டன.

இதன் விளைவாக அவரது முயற்சிகள் அவரது கட்சிக்குள் பல முரண்பாடுகளை உருவாக்கிய நிலையில் 2005ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ ஐந்தாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் என்பது போரை உக்கிரப்படுத்தும் அதே வேளையில் சிங்கள பௌத்த இனவாத அரசாகவும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதாகவும், இலங்கை என்பது சிங்கள பௌத்த தேசம் என்பதாகவும், ஏனைய சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழ்வதாகவும் விளக்கங்களை வழங்கும் காலமாக அமைந்தது.

இதனால் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிகவும் அப்பட்டமாக மறுதலிக்கவும், அதேவேளை ராஜபக்ஸ குடும்பத்தின் வரலாறு என்பது பண்டாரநாயக்கா குடும்பத்தின் வரலாற்றை விட மிக முக்கியத்துவமானது என்ற நிலைக்கு அதிகாரம் என்பது குடும்ப ஆதிக்கமாக மாறிய காலமாகும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதிக்கத்திற்குள் சென்ற நிலையில் நாட்டின் ஜனாதிபதி ஆட்சிமுறை ஏகபோக ராஜபக்ஸ குடும்ப ஆதிக்கமாக அரசியல் யாப்பு மாற்றங்கள் மூலம் மாறியதால் நாட்டிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் எழுந்த முரண்பாடுகள் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஆறாவது ஜனாதிபதியாக தெரிவானார்.

மைத்திரிபால சிறிசேன

இவர் ஓர் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமையாலும், பாராளுமன்றத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தால் ஐ தே கட்சியின் பாராளுமன்ற ஆதரவோடு ஆட்சியை நடத்தினார்.

ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ ஆதரவு சக்திகள் ஐ தே கட்சியின் கூட்டோடு உருவான நல்லாட்சி அரசை நன்கு செயற்பட முடியாதவாறு தொல்லைகளைக் கொடுத்தனர்.

அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 19வது திருத்தத்தை கொண்டு வந்த போதிலும் நாட்டில் முதன் முதலாக பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு ஓர் தோல்வியடைந்த அரசாக மாறியது.

இத் தோல்வியின் விளைவாக 2015ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ஸாக்கள் மீண்டும் தமது குடும்ப ஆதிக்கத்தை தொடரும் வகையில் சிங்கள மக்களின் தனி ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை எட்ட முடியும் என்பதை மிகவும் அப்பட்டமான இனவாத அரசியலின் மூலம் செய்து முடித்தனர்.

2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரான கோதபய ராஜபக்ஸ நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவானார்.

நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராகவும், 2019ம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் காரணமாக உல்லாச பயணத்துறை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்ப இரும்புக் கரங்கள் தேவை என்பதால் அவரைத் தேர்வு செய்த போதிலும் அவருக்கும், அரசியலுக்கும் போதிய அனுபவம் இல்லாமை காரணமாக அவர் வேறு சிலரின் உபதேசங்களைச் செவிமடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி, டொலர் நெருக்கடி எனத் தோற்றம் பெற்று நாடு வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனால் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி விரைந்தார்கள். முடிவில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்

கோதபய அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே 2022ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு வழிகள் மூலமாக நாட்டின் எட்டாவது ஜனாதிபதியானார்.

இவ் வரலாற்று விபரங்கள் தெளிவாக புரியப்பட்டால் மாத்திரமே இத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் நாளாந்த வாழ்வு, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை உணராத அல்லது உணர முடியாத சில சக்திகள் ஜனாதிபதித் தேர்தலை வெறும் தமிழர் உரிமைக்குள் முடக்கி தமிழ் மக்களை இருண்ட அரசியலை நோக்கித் தள்ளுவதன் ஆபத்துக்களை புரிதல் அவசியம். எனவேதான் இப் பதிலும் சற்று நீண்டு சென்றுள்ளது.

கேள்வி: இத் தேர்தல் நான்கு முனைப் போட்டித் தளமாக வர்ணிக்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த நான்கு முனைகளும் எவ்வாறு தனித்தனி அமைகின்றன?

பதில்: சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்போது நான்கு பிரதான கட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதில் முதலாவது இடத்தை சஜீத் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ( Samagi Jana Balavegaya- SJB ) எனவும், இரண்டாவது இடத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி எனவும், மூன்றாவது இடத்தில் சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கரமசிங்க எனவும், நான்காவது இடத்தில் நமல் ராஜபக்ஸவை தேசிய அமைப்பாளராகக் கொண்ட பொது ஜன பெரமுன எனவும் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு வேட்பாளரும் தேசிய பிரச்சனைகளில் மிகவும் வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். இவ் விபரங்களைப் பின்னர் பார்க்கலாம்.

கேள்வி: தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒருவர் போட்டியிடுகிறார். இவரது போட்டி என்பது தேசிய அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

பதில்: ஜனாதிபதித் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதனை எனது முதலாவது பதில் விபரமாகத் தந்துள்ளது. அப் பின்னணியிலிருந்தே இப் பொது வேட்பாளர் என்ற சங்கதியையும் நோக்க வேண்டும்.

இப் பொது வேட்பாளரைத் தேர்வு செய்த முறை மிகவும் கேலியானது. அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் கொண்ட ஒரு பொதுக் கட்டமைப்பு இவ் வேட்பாளரைத் தெரிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் இவ் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் எத்துணை மக்களின் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றன? எவ்வாறு அவ்வாறான முடிவை நோக்கிச் சென்றார்கள்? தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சார்ந்த ஒருவர் அக் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக நியமிக்கப்படுவாராயின் மக்களுக்கு எவ்வாறான செய்தியை கொடுக்கின்றனர்?

இங்கு தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடுவதாக யாரும் போட்டியிடலாம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்புச் சொல்லும் யோக்கியதை போட்டியாளர்களுக்கு அவசியம்.

சிவில் அமைப்புகள் என அழைப்பவர்கள் எவரும் மக்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்களாக தெரியவில்லை. அதே போலவே அரசியல் கட்சிகள் என்போர் தமது பாராளுமன்றப் பதவிகளைத் தமிழரசுக் கட்சி மூலமாகவே பெற்றனர்.

அவ்வாறாயின் இவர்களில் எவரும் ஜனநாயக அம்சங்களை மதிக்கவில்லை என்பது தெளிவு. இப் போட்டியாளர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றினார்கள். இனிமேல் நாம் ஏமாறத் தயாராக இல்லை. எமது பலத்தை எதிரிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கூறுவோம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவரின் கொள்கைகளாக இல்லை.

நாட்டில் ஜனநாயக கட்டுமானங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. அரச கட்டுமானம் ஊழலால் நிரம்பி வழிகிறது. நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தாமல் எதுவும் சாத்தியமில்லை.

ஆனால் இப் பொது வேட்பாளரின் வாயிலிருந்து இப் பிரச்சனைகள் பற்றிய எதுவும் வரவில்லை. ஏன்? இவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால்தான அவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டார்.

தனிமனித ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். இவர் எவ்வாறு ஜனநாயகத்தை மதிக்க முடியும்? கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பார் என எவ்வாறு நம்ப முடியும்?

இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை வேடிக்கைப் பொருளாக, தமது சுயநலன்களைப் பெறும் நோக்கிலான பேரம் பேசும் அரசியலை மேற்கொள்கின்றனர். மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு தமது வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும்.

கேள்வி: இத் தேர்தலில் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டா?

பதில்: மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே தென்படுகின்றன. உதாரணமாக நால்வர் பிரதான போட்டியாளராக இருக்கையில் நால்வரும் இவர்கள் கோரிக்கைக்கு சாதகமான பதிலளித்தால் தமிழர் தரப்பு யாரை ஆதரிப்பது? அவ்வாறான நிலையில் மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும்.

அதாவது அக் கட்சிக்குள் நடைபெறும் இதர அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்வது அவசியமாகிறது.

உதாரணமாக நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை ஜனநாயக வழிக்கு மீட்டெடுப்பதாயின் ஊழல், சட்டம், ஒழுங்கு, கட்சியிலுள்ள மிக முக்கிய தலைவர்களின் கடந்தகால அரசியல், அக் கட்சியின் உட் கட்டுமானத்தின் செயற்பாடுகள் என பல அம்சங்களில்; கவனம் செலுத்த வேண்டும். நாம் பேரம் பேசச் செல்லும் வேளையில் அக் கட்சிகளும் எமது தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பும் நிலை ஏற்பட வேண்டும்.

பேரம் பேசச் செல்லும் தமிழர் தரப்பினர் அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குப் பலத்தினை வழங்கும் ஒரு தரப்பினராக அவர்கள் நம்ப வேண்டும்.

இவை யாவும் தேர்தலுக்கு முன்னரான தொடர்புகளிலிருந்தே ஆரம்பமாகும். ஏற்கெனவே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவதற்கான சில அத்திவாரங்கள் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே அது சாத்திமாகும்.

தற்போதுள்ள தேர்தல் சூழலில், சஜித், அநுர ஆகியோர் புதியவர்கள். ரணில், நாமல் ஆகியோர் ஏற்கெனவே ஒரு வரலாற்றுச் சுமையை வைத்திருப்பவர்கள். பிற்பட்ட இருவரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை ஏற்கெனவே இழந்த நிலையில் முற்பட்ட இருவர் தொடர்பாக மக்கள் ஆழமாக விவாதிக்க வேண்டும்.

கேள்வி: தமிழர் தரப்பு வெறுமனே தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள். நாம் எமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும். சர்வதேசமும், சிங்கள அரசியல் சக்திகளும் அப்போதுதான் பேச வருவார்கள் எனக் கூறும் அரசியலில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?

பதில்: இந்த பேரம் பேசும் அரசியல் புளித்துப்போன ஒன்றாகும். தமிழர் தரப்பில் பல்வேறு குழுக்களாக இந்த அரசியல் சக்திகள் செயற்படுகின்றன.

தூரத்தில் நின்று ஒற்றுமை பற்றிப் பேசுகின்றனரே தவிர ஒற்றுமைக்கான முயற்சிகள் எதுவும் இல்லை.

அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாத நிலையில் தனி நபர் அடையாளங்களே முன்னிலையில் உள்ளன. சிவில் மற்றும் அரசியல் தரப்பு என இரு வேறு பிரிவினரின் கூட்டு என்பதே பொதுக் கட்டமைப்பு என விளக்கம் தரப்படுகிறது.

ஆனால் சிவில் அமைப்;பு, அரசியல் அமைப்பு என வேறுபடுத்தும் அளவிற்;கு பாரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாவிடினும் சிவில் அமைப்பு என தம்மை அழைப்பவர்களில் பலர் பிரிவினை அரசியலை ஆதரிப்பவர்களாக அதிகம் உள்ளனர்.

தலைவர் என்பவர் கட்சி ஒன்றின் உரித்தாளராக இருத்தல் அவசியம் என்ற நிலையில் ஆளுக்கொரு கட்சி உண்டு. இவர்கள் மத்தியில் பேரம் பேசி ஒரு பொது உடன்பாட்டிற்கு செல்ல முடியாமல் உள்ள இவர்கள் அரசியல் எதிரிகளிடம் எந்த அடிப்படையில் பேரம் பேசுவது?

தற்போது பணப் பட்டுவாடாவும் பிரதான பங்கை வகிக்கிறது. சிங்கள அரசியல்வாதிகளுக்கு யாரை விலைக்கு வாங்கலாம்? என்பதும், யாரைப் பயமுறுத்தலாம்? என்பதும் நன்கு தெரியும். பலரின் குற்றப் பத்திரிகைகள் இவர்களிடம் உண்டு. இந் நிலையில் பேரம் என்பது பணப் பட்டுவாடாவுடன் முடியும்.

கேள்வி: அவ்வாறாயின் தேசிய இனப் பிரச்சனையின் எதிர் காலம் எவ்வாறு அமையும்?

பதில்: முதலில் தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைதல் பொருத்தமானது என்பதிலிருந்தே நாம் ஆரம்பிக்கலாம்.

ஏனெனில் தமிழ் அரசியல் மிகவும் சிக்கலடைந்து சில சந்தர்ப்பவாத சக்திகளின் கரங்களில் தமிழ் அரசியல் சிக்கியிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்று வரும் உள் முரண்பாடுகள் அதனையே அடையாளப்படுத்துகின்றன.

தமிழரசுக் கட்சி குறித்து பலருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் இக் கட்சி தோல்வி அடையுமெனில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் தோல்வியை நோக்கிச் செல்லும் என்பதே எனது எண்ணமாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பாரக்கலாம்.

தமிழ் அரசியலில் அதாவது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவே ஒலிக்கிறது.

இருப்பினும் கட்சியில் காணப்படும் சந்தர்ப்பவாத சக்திகளின் ஊடுருவல்கள், தலைமைத்துவ பண்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், மிதவாத, தீவிரவாத சக்திகளின் உள் மோதல்கள் அதனால் ஏற்பட்ட தொலைநோக்கற்ற அரசியல் மாற்றங்கள் அக் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகளை உருவாக்கின.

இருப்பினும் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் மக்களின் நம்பிக்கைக்குரிய இன்னொரு கட்சியை இதுவரை எவராலும் தோற்றுவிக்க முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக அக் கட்சியின் ஆதிக்கத்தைப் பறித்த போதிலும் போரின் பின்னரும் அதாவது போரின் அனுபவங்களின் பின்னரும் புதிய கட்சியை, புதிய பாதையை உருவாக்க முடியவில்லை. மீண்டும் தமிழரசுக் கட்சியே அத் தலைமையை மீட்டெடுத்தது.

எனவே தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்பது தமிழ் மக்களின் ஓர் அரசியல் வரலாறாகவே இன்னமும் உள்ளது. மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் வடிவம் என்பது தமிழரசுக் கட்சிக்கு வெளியில் பலமாகத் தோற்றம் பெறாத இச் சூழலில் மாற்றுத் தேர்வு என்ன? என்ற கேள்வி எழுகிறது.

கட்சிக்கு வெளியில் மாற்றத்திற்கான நிலமைகள் தோற்றம் பெறாவிடினும் அக் கட்சிக்குள் எழுந்துள்ள உள் முரண்பாடுகள் புதிய அரசியல் வடிவத்தை நோக்கிய விவாதங்களாக மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம். எனவே புறவயத்தில் வாய்ப்புகள் இல்லாவிடினும், அக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் பாரிய அரசியல் மாற்றத்தை நோக்கியதாகவே உள்ளன.

எனவேதான் தமிழரசுக் கட்சிக்கான மாற்று அரசியல் தலைமை என்பது அங்கிருந்தே தோற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளதால் எமது கவனம் அங்கு குவிக்கப்படுதல் அவசியம் என்கிறேன்.

குறிப்பாக தமிழரசுக் கட்சியை அதாவது பலமான மாற்று அரசியல் கட்சி தமிழரசுக் கட்சிக்கு வெளியில் தோற்றம் பெறாத நிலையில் இக் கட்சியை அழிப்பது என்பது விடுதலைப் புலிகளின் ஆளுமை தமிழ் அரசியலில் இருந்த போது காணப்பட்ட பலம் அந்த அமைப்பின் அழிவுடன் பாரிய வெற்றிடமாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படினும் அதுதான் இன்னமும் நிலமையாக உள்ளது.

அவர்களுக்குப் பதிலான மாற்றுத் தலைமை இல்லாத காரணத்தால் இன்று எதிர்ப்பு இயக்கம் என்பது இல்லாதொழிந்தது. மக்கள் இன்று வரை அதன் தாக்கத்தை உணர்கிறார்கள். எனவே தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்துதான் மாற்றங்கள் தோன்ற வேண்டும். சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் அந்த ஏக்களிப்பில் இன்றும் வாழ்கிறது. அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியின் தோல்வி தமிழ் அரசியலின் தோல்வியாக மாறலாம் என்ற அச்ச உணர்வே அல்லாமல் அக் கட்சியைக் காப்பாற்றும் நோக்கமல்ல.

கேள்வி: தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய முரண்பாடுகளின் எதிர் காலம் என்னவாக அமையலாம்?

பதில்: தமிழரசுக் கட்சிக்குள் தற்போது அதன் எதிர்கால அரசியல் போக்கு குறித்த முரண்பாடுகளின் உருவமாகவே காண்கிறேன். வெளிப் பார்வையில் அவை சில தனி நபர்களின் முரண்பாடுகளாகக் காணப்படினும் அவை அடிப்படையில் அரசியல் அம்சங்களை வற்புறுத்துகிறது.

கடந்த 30 வருட கால சிவில் யுத்தம் மிகவும் காத்திரமான, ஆழமான அரசியல் வடுக்களை தமிழ் அரசியலில் விதைத்திருக்கிறது. போர் தோற்றிருக்கலாம். உலகில் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி அடைந்ததை விட தோல்வி அடைந்தவை ஏராளம். எனவே இத் தோல்வி என்பது தற்காலிகமானது. ஆனால் இப் போராட்டம் விட்டுச் சென்ற அரசியல் குறித்தே எமது கவனம் செல்ல வேண்டும்.

உதாரணமாக, இலங்கையில் பெரும்பான்மை சிங்கள, பௌத்த பெரும் தேசியவாதம் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து நிராகரித்துச் செல்லுமாயின் அங்கு போருக்கான சூழல் எப்போதுமே நீறு பூத்த நெருப்பாக இருக்கும்.

அதே போராட்ட அனுபவங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் மாற்றுத் தேர்வுகளையும் வழங்கிச் செல்லும். தமிழ் அரசியல் பலமாக இல்லாத நிலையில் மக்களுக்கு மேலும் துன்பங்களை வழங்காத வகையில் அணுகுமுறைகளை வகுப்பது கட்டாயத் தேவையாக மாறுகிறது.

இவ்வாறான ஒரு அனுபவ வெளிப்பாடே தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளாகும். பிரிவினைக் கோரிக்கையை ஆழமாக நம்பிய காரணத்தினால்தான் மிகவும் கணிசமான தொகை இளைஞர்கள் தம்மை ஆகுதியாக்கினார்கள்.

அதில் பங்களித்த பலர் இன்னமும் அது சாத்தியம் என நம்புகின்றனர். இவர்கள் எதிரிகளல்ல. போராட்டத்தின் கூறுகள்.

இவர்களை எவ்வாறு இணைத்துச் செல்வது என்பதே புதிய தலைமையின் ராஜதந்திரமாகும். உலகம் தீர்வுகளைத் தரும் என நம்புவதை விட எமது ராஜதந்திர செயற்பாடுகளே நம்பிக்கை தர வேண்டும்.

இப் பிரச்சனையில் பாலஸ்தீன அனுவபங்கள் வேறு பதிலைத் தருகின்றன. போரும் அதன் பின்னரான அனுபவங்களும் தமிழ் அரசியலில் இரு வேறு அரசியல் முகாம்களை உருவாக்கியுள்ளது.

ஒட்டுமொத்த இலங்கைத் தேசியத்திற்குள் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் சமாதானத்தோடும், அமைதியோடும் வாழ்வதற்கான பாதை உண்டு என நம்பும் அரசியல் போக்கு தற்போது வளர்ந்துள்ளது.

இதற்குப் பிரதான காரணம் சிங்கள சமூகத்திற்குள் இனவாதமற்ற அரசியல் விழிப்புணர்ச்சி காத்திரமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் அது ஒரு போதும் சாத்தியமில்லை என நம்புவோர் தொடர்ந்தும் பழைய அனுபவங்களை உதாரணம் காட்டி பிரிவினைக்கான நியாயங்களை வற்பறுத்துவோரும் உண்டு. இப் பிளவுகள் பலவீனமடைந்தால் மாத்திரமே தமிழ் அரசியல் தழைக்க வாய்ப்பு உண்டு.

கேள்வி: இப் பதில் ஒரு நம்பிக்கை தருவதாக அமையவில்லையே? அவ்வாறெனில் அதற்கான வாய்ப்பே இல்லையா?

பதில்: சமூகத்தில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் மாற்றங்களைத் தரும் அடிப்படைகளைக் கொண்டிருக்காத நிலையில் எப் பதிலும் போலியாக அமைந்து விடும்.

போர் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழ் அரசியலில் உள்ளார்ந்த அடிப்படையில் ஓர் நல்லிணக்கம் ஏற்படவில்லை.

இயக்கப் பிளவுகள் இன்னமும் கனதியாக உள்ளன. போரில் மரணித்தவர்கள் தமக்காக, சுயநலத்திற்காக செல்லவில்லை.

அப்போதிருந்த அரசியல் சூழல்களின் அடிப்படையில் கிடைத்த வாய்ப்புகளினடிப்படையிலேயே தமது இயக்கத்தைத் தேர்வு செய்தார்கள். அனைவரும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காகவே தம்மைப் பலி கொடுத்தார்கள்.

இவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் புதல்வர்கள். எனவே இயக்க வேறுபாடுகளின்றி சகலருக்கும் ஒரே மரியாதை வழங்குவது சமூகத்தின் கடமை. ஆனால் பல்வேறு தேவைகளுக்காக சமூகம் இன்னமும் பிளவுகளைக் கொண்டாடுகிறது.

இந்த நிலை மாறாத வரை அதாவது எமது சமூகத்திற்குள் உள்ளளார்ந்த அடிபபடையில் நல்லிணக்கம் ஏற்படாத வரை அரசியல் கட்சிகள் மத்தியில் அல்லது சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை, நல்லிணகக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தேர்தலில் வாக்குக்காக ஒற்றுமை எனக் குரல் கொடுப்பது வெறும் ஏமாற்று.

தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்க அடிப்படையிலான தீர்வா? என்பது குறித்த தெளிவான விவாதம் தீர்மானகரமான விதத்தில் மேலெழாத வரை எந்த அரசியல் தீர்வும் சாத்தியமில்லை.

இவற்றைத் தனிநபர் பிளவுகளாக சில ஊடகங்களும் விபரிக்கின்றன. இதனால்தான் ஒருவர் காலை மற்றவர் இழுத்து வீழ்த்துவது வரலாறாக தொடர்கிறது. அத்துடன் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் எம்மைப் பிரித்தாளுவதற்கான வாய்ப்பாகவே அது அமையும்.

கேள்வி: எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது உசிதமானது?

பதில்: இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே எனது கரிசனையாகும். ஏனெனில் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் தமிழ் மக்களினதோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்களையோ ஏற்படுத்தி விட முடியாது.

அந்த அளவிற்கு நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே நாடு ஒரு புதிய வழியில் செல்வதற்கான கொள்கை, கோட்பாடுகள், அரசியல் தலைமை அவசியமாகின்றன. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதலில் ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்படுவது அவசியம் என்பது எனது அபிப்பிராயம். அவற்றை சற்று ஆழமாகப் பார்க்கலாம்.

இலங்கையின் அரசியலில் மிக மோசமான தாக்கங்களைச் செலுத்திய அல்லது நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு எடுத்துச் சென்ற இரு கட்சிகளில் ஐ தே கட்சி மிக முக்கியமானது. நமது தேசத்தில் இனவாதத்திற்கான அடிப்படைகளாக கல்லோயா, மாவலி போன்ற அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமர்த்தி ஏனைய சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழிக்கக் காரணமாக இருந்தது அக் கட்சியாகும். தற்போதும் ரணில் தனது பிரச்சாரங்ககளில் டி எஸ்; செனநாயக்காவை நினைவூட்டுவது ஏன்?

இக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்றைய இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மேற்கு நாடுகளின் உற்பத்திகளின் சந்தையாக மாற்றி, நாட்டில் நிலவிய உள்நாட்டு பொருளாதாரத்தையும் சீரழித்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் தாராளவாத திறந்த பொருளாதாரமே இன்று எமது நாட்டை வங்குறோத்து நிலமைக்குத் தள்ளியது.

நாட்டின் பிரதமராக 6 தடவைகள் பதவி வகித்த ரணில் இப் பாதக செயல்களுக்கு பொறுப்பில்லை என யாரும் கருத முடியுமா? தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பினை சந்திரிகா முன் மொழிந்த வேளையில் அதனை எரித்து நிராகரித்தது ரணிலாகும்.

நாட்டில் இனவாதத்தின் மூலம் தேசிய அரசியல் வாழ்வை சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை நோக்கித் திருப்பிய கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அடையாளம் இல்லாமல் போய்விட்டது.

நாம் ரணிலைத் தோற்கடிப்போமாயின் அவருடன் ஐ தே கட்சியும் அடையாளம் அற்றுப் போய் விடும். எனவே தமிழ் மக்கள் எமது சமூதாயத்தின் எதிர்காலம் கருதி இனவாதக் கட்சிகளைத் தோற்கடிப்பது தற்போது அவசியமானதே. எனவே இத் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குகளைச் செலுத்த வேண்டும்.

கேள்வி: ரணில் சிறைக் கைதிகளை விடுவித்தார் எனவும், பறித்த காணிகளை விடுவித்தார் எனவும், 13வது திருத்தத்தை அமுல்படுத்த முனைந்தார் எனவும், தற்போது வடக்கிலும், கிழக்கிலும் பொருளாதார வலையங்களைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளாரே! மக்கள் அவரை வேறு விதமாகப் பார்க்கிறார்களே?

பதில்: தமிழ் மக்களின் அரசியல் அனுபவங்களை அறியாதவர்கள், அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று தமது சொந்த நலன்களை வளர்க்க எண்ணுபவர்கள் இவ்வாறான சில அற்ப சலுகைகளை பிரமாண்டமாக வர்ணிக்கலாம்.

ஆனால் அவர் மேற்கொள்ளும் இச் செயல்கள் தமிழ் மக்கள் உலக நாடுகளின் மேல் போட்ட அழுத்தங்களின் விளைவாக குறிப்பாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மிக அதிகமான அழுத்தங்களே ரணிலின் சில நடவடிக்கைகளுக்குக் காரணமே தவிர இவை அவரது அரசியல் சிந்தனையின் விளைவானது அல்ல.

தமிழ் மக்கள் தமது சந்ததியின் எதிர்காலத்திற்கு தேவையான தீர்வுகளை மையமாக வைத்தே இத் தேர்தலை அணுக வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஒரு புறத்தில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என ஒப்பமிட்ட பின்னர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏன் நடத்தினார்கள்? அவர்கள் வாங்கிய பணப் பெட்டிகளுக்கு வகை சொல்ல அல்லது மதுபான சாலை உத்தரவுப் பத்திரங்களுககுப் பதில் சொல்லவே அங்கு சென்றார்கள்.

உதாரணமாக, ரணில் பாராளுமன்;றத்தால் ஜனாதிபதியாக 134 வாக்குகளால் தெரிவு செய்;யப்பட்;;டார்.

இவர்களில் தமிழர் தேசியக் கூட்;டடமைப்பின் சில உறுப்பினர்;களும் அடங்குவர். சம்பந்தன் அவர்கள் டல்லஸ் அழகப்பெருமா அவர்களைத் தமது கட்சி ஆதரிக்கும் எனத் தெரிவித்;திருந்தார்.

ஆனால் பின்னனர் பணம் கைமாறியதாக டல்லஸ் கூறுகிறார். இவர்களில் தமிழ் உறுப்பினர்களும் அடங்குவர். இவ்வாறான சந்தரப்பவாத அரசியல்வாதிகள் எவ்வாறு எமது சந்ததியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள்?

மக்கள் ரணிலின் அரசியற் கட்சியையும், அதன் அரசியலையும் ஆழமாக அவதானித்தே தமது வாக்கைச் செலுத்த வேண்டும். இத் தீர்மானகரமான வேளையில் அற்ப சலுகைகளைக் காரணம் காட்டி வாக்களித்தால் தமது தலையில் தாமே மண் அள்ளி வீசுவதற்குச் சமானமானது.

— வி.சிவலிங்கம் —

தொடரும் …….

Share.
Leave A Reply