கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (02) மாலை 06.50 மணியளவில் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டோஹாவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த இளைஞனின் கடவுச்சீட்டை சோதனையிட்டு பார்த்த போது குறித்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
மேலும் , இளைஞனின் பயணப் பையில் இருந்த இத்தாலிய கடவுச்சீட்டில் பல போலி முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்று செவ்வாய்க்கிழமை (03) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்“கை எடுக்கப்பட்டுள்ளது.