பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தெலுங்கானாவில் பதற்றம் நிலவி வருகிறது.
ஆஷிபாபாத் மாவட்டத்தில் 45 வயது மதிப்புடைய பழங்குடி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை நெருப்பு வைத்து கொளுத்தினர். இதனால், அப்பகுதி கலவர பூமியானது.
இதனிடையே, பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 31ஆம் திகதி சாலையோரம் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவரை ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மீண்டும் சுயநினைவுக்கு வந்தவுடன், அவர் கூறிய தகவல்கள் பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்தப்பெண் கூறுகையில், “நான் எனது தாயின் சொந்த ஊரான ஜெய்னூருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று விட்டு, ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், கட்டையை வைத்து என்னை தாக்கினார்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முக்தம் மீது, எஸ்.சி.,ஃ எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், கலவரம், போராட்டம் ஆகியவை மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், முக்கிய நகரங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.