மகாராஷ்டிராவின் நாக்பூரில் சொத்துக்காக மாமனாரை கூலிப்படை மூலம் மருமகள் கொன்ற நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியது. அதேபோன்ற மற்றொரு நிகழ்வு தற்போது அதே பகுதியில் நிகழ்ந்திருக்கிறது.
32 வயதான மருமகள், தன்னுடைய மாமியாரை கொல்வதற்காக தன்னுடைய உறவினர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எந்த காரணங்களுக்காக மருமகள் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் வைஷாலி ராவத். கொலை செய்யப்பட்டவரின் பெயர் சுனிதா ராவத்.
52 வயதான சுனிதா ராவத் நாக்பூரில் உள்ள மித்ரா நகரில் தன்னுடைய கணவர் ஓம்கர் ராவத் மற்றும் மகன் அகிலேஷ் ராவத்துடன் வசித்து வந்தார். தன்னுடைய மகனுக்கு வைஷாலியை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார் அவர்.
2016-ஆம் ஆண்டு கணவர் ஓம்கரை இழந்த சுனிதா கடந்த ஆண்டு அகிலேஷையும் இழந்தார். அகிலேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, உடல் நலக்கோளாறால் உயிரிழந்தார். மகன் மரணத்திற்கு பிறகு சுனிதா, வைஷாலியுடன் மித்ரா நகரில் வசித்து வந்தார்.
சொந்தமாக வீடு வைத்துள்ள சுனிதா அதில் இருந்து வரும் வாடகையை நம்பி வாழ்ந்து வந்தார். குறிப்பிடத்தக்க வகையில் குடும்ப சொத்தும் அவருக்கு இருந்தது.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று சுனிதா கொலை செய்யப்பட்டார். ஆனால் சுனிதா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று வைஷாலி நாடகமாடியுள்ளார்.
காவல்துறை நடத்திய விசாரணையில், 10 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று அது கொலை என்று தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜ்னி காவல்துறையினர் வைஷாலி மற்றும் அவருடைய உறவினர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொலைக்கு காரணம் என்ன?
பிபிசி மராத்தியிடம் பேசிய அஜ்னி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் நிதின் சந்திர ராஜ்குமார், “மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்றது.
மேலும் வைஷாலியின் நடத்தை மீது சுனிதாவிற்கு சந்தேகம் இருந்தது. திருமணத்திற்கு முன்பே வைஷாலி கர்ப்பமாக இருந்திருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தி பேசி வந்துள்ளார்.
மேலும், குழந்தையை கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு வைஷாலியிடம் சுனிதா சண்டையிட்டுள்ளார். மாமியாரின் இந்த பேச்சைக் கேட்டு கோபம் அடைந்த வைஷாலி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியிருக்கிறார்.
மாமியாரை கொலை செய்ய மத்திய பிரதேசத்தில் உள்ள பந்துர்னா பகுதியில் வசித்து வரும் தன்னுடைய உறவினர் ஶ்ரீகாந்த் ஹிவ்ஸெவின் உதவியை நாடியுள்ளார் வைஷாலி,” என்று விவரித்தார்.
காவல்துறை அளித்த தகவல்களின் படி, ஶ்ரீகாந்த் ஆரம்பத்தில் வைஷாலியின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் வைஷாலி, ஶ்ரீகாந்துக்கு ரூ. 2 லட்சம் தருவதாக கூறினார். மேலும் ஆன்லைன் மூலம் அவருக்கு பணம் அனுப்பியுள்ளார்.
மேலும், சுனிதாவை கொலை செய்யவில்லை என்றால், ஶ்ரீகாந்தின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியும் உள்ளார் வைஷாலி.
இந்த மிரட்டலுக்கு பணிந்து போன ஶ்ரீகாந்த் தன்னுடைய உறவினர் ஒருவரை உடன் சேர்த்துக் கொண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக சுனிதாவை கொலை செய்வது குறித்து திட்டம் தீட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி அன்று ஶ்ரீகாந்த் மற்றும் அவரின் உறவினர் சுனிதாவின் வீட்டிற்கு வந்து அப்பகுதியை நோட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடியே ஆகஸ்ட் 28-ஆம் தேதி அன்று வீட்டின் கதவை திறந்துவிட்டு சென்றிருக்கிறார் வைஷாலி.
ஶ்ரீகாந்த் அவருடைய உறவினர் ஒருவருடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து வைஷாலியுடன் சேர்ந்து சுனிதாவை கொலை செய்துள்ளார்.
இந்த கொலை நள்ளிரவு 11 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. பின்னர் ஶ்ரீகாந்தும் அவரின் கூட்டாளியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.
அடுத்த நாள் காலை, உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பில் தன்னுடைய மாமியார் இறந்துவிட்டார் என்று வைஷாலி நாடகமாடியுள்ளார்.
ஆரம்பத்தில் இதனை சுனிதாவின் உறவினர்கள் நம்பினார்கள். ஆனால் சுனிதாவின் முகத்தில் இருந்த காயங்களை பார்த்த சிலருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது.
அவரின் உடலை எரிப்பதற்கு முன்பு அவரின் முகத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் வைஷாலியின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்க துவங்கினார்கள்.
வைஷாலியுடன் சேர்ந்து சுனிதாவை கொலை செய்த வைஷாலியின் உறவினர் மற்றும் அவரின் கூட்டாளி
சிறுமி மூலம் வெளிச்சத்திற்கு வந்த கொலை
சுனிதா கொலை செய்யப்பட்ட இரவில் வைஷாலியும் அதே வீட்டில் இருந்தது சுனிதாவின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சுனிதாவின் சகோதரர் அக்கம் பக்கத்தில் வைஷாலியின் நடவடிக்கை குறித்தும், சுனிதா இறந்த இரவு அங்கே என்ன நடந்தது என்றும் விசாரிக்க ஆரம்பித்தார். அங்கே இருந்த சிறுமி அன்றைய இரவு இரண்டு ஆண்கள் வீட்டுக்கு வந்ததாக அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
அக்கம்பக்கத்தினர், சுனிதாவுக்கும் வைஷாலிக்கும் இடையே நடைபெற்ற சண்டைகள் குறித்து உறவினர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் வைஷாலியின் போனை, அவர் இல்லாத நேரத்தில் எடுத்து பார்த்த போது, கொலை நடப்பதற்கு முதல் நாள் அவருடைய உறவினருக்கு அடிக்கடி அழைப்பு விடுத்ததை அறிந்து கொண்டனர்.
அவரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அஜ்னி காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.
விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வைஷாலி கூறியிருக்கிறார். தன்னுடைய உறவினரை கொலையில் ஈடுபடுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் காவல்துறையினர் அவருடைய செல்போனை ஆய்வு செய்த போது, அவர் தொடர்ச்சியாக ஶ்ரீகாந்திற்கு அழைப்பு விடுத்தது தெரிய வந்துள்ளது. ஶ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்திய போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அதன் பின்னர், வைஷாலி, ஶ்ரீகாந்த் மற்றும் ரித்தேஷ் ஹிவ்ஸே ஆகியோரை காவல்துறை கைது செய்தது என்கிறார் நிதின் சந்திர ராஜ்குமார்.
இதே போன்று நடந்த ஒரு நிகழ்வு
சொத்துக்காக மாமனாரை பெண் ஒருவர் கொலை செய்த நிகழ்வு மே மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. அரசு அதிகாரியான அர்ச்சனா பர்லேவர் புத்தேவர் தன்னுடைய சகோதரருடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்த ரூ. 17 லட்சத்தை கூலிப்படைக்கு கொடுத்துள்ளார். அர்ச்சனா தன்னுடைய மாமனார் விபத்தில் இறந்ததாக கூறினார்.
தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவமும் கிட்டத்தட்ட மே மாதம் நிகழ்ந்த சம்பவத்தோடு ஒத்துப்போகிறது.
தன்னுடைய மாமியாரை கொல்ல வைஷாலி ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறார். பிறகு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.