நீதிக்கும் அநீதிக்கும் நடந்த யுத்தமே குருசேத்திரப் போர். இங்கு பாண்டவர் எண்ணிக்கையில் குறைவாயினும் நீதி வென்றது. காரணம் அவர்களது ராஜதந்திர நகர்வுகள்.

இலங்கையில் தொன்மையான சமூகமான தமிழர்களை மொத்தமாக அழித்து அல்லது நாட்டை விட்டு விரட்டி அல்லது சிங்களத்திற்குள் கரைத்து தீவு முழுவதையும் சிங்கள – பௌத்த நாடகமாக மாற்றுவது என்ற இனமேலாதிக்க வெறிகொண்ட சிங்கள அரசியற் சமூகத்திற்கும் – இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆதி தொட்டு தொடர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் தாயக பாதுகாப்பிற்குமிடையிலான யுத்தமே இனமோதலாகும்.

பன்னிரெண்டு வீதமான தமிழர்களுக்கும் 75 வீதமான சிங்களவர்களுக்குமிடையிலான யுத்தமே இலங்கையின் இனமோதலாகும். 70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வடிவங்களில் தொடரும் இந்த யுத்தமானது சிங்கள – பௌத்த மேலாதிக்க வெறி என்கிற அநீதிக்கும். தமிழர்களின் அடையாளங்களுடனான இருப்புக்கான சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிக்கும் இடையிலான யுத்தமே இனமோதலாகும்.

குருஷேத்திரத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு அஸ்திரங்களை பாண்டவர் பயன்படுத்தியது போன்றே தமிழ்த்தலைமையும் காலத்திற்குக் காலம் பல வழிமுறைகளைப் பயன்படுத்தியது. இந்த வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கியிருப்பது தமிழ்த் தலைமையின் இதுவரை பயன்படுத்தாத புதிய அஸ்திரமாகும். இப்புதிய அஸ்திரம் சிங்கள வேட்பாளர்களுக்கு பதட்டத்தையும் கலக்கத்தையும் கொடுத்துள்ளது.

அதன் பிரதிபலிப்பே பதின்மூன்றுக்கு குறைவாக நிறைவேற்றுவேன் என்ற ரணிலின் குரலும் 13 ஐ குறைவின்றி நிறைவேற்றுவேன் என்கிற சஜித்தின் குரலுமாகும். இவர்களது 13 ஐ நடைமுறைப்படுத்தல் பற்றிய கருத்துக்களை தென்னிலங்கையின் வழக்கமான தேர்தல் கால வெற்றுக் காசோலை இதுவெனக் கண்டு தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என கூறியுள்ளார். இன்னோர் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இவர் 13 பற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை, மாறாக மைத்திரி – ரணில் ஆட்சியில் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட தீர்வு செயற்பாடுகளைத் தொடர்வேன் என விளக்கமற்ற கருத்தை உதிர்த்திருக்கிறார்.

இம்மூவரும் கடந்த எந்தத் தேர்தலையும் விட வடக்கு – கிழக்கில் மிக அதிகாரத்தையும் வழங்களையும் செலவிட வேண்டிய நெருக்கடியைச் சந்தித்துள்ளார். பொதுவேட்பாளரைக் களமிறக்கிய தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புடன் பேச அதிக அழைப்புகள் விடுவதும் தமிழ்த் தேசியத் தலைமையின் புதிய அஸ்திரமான பொதுவேட்பாளர் களமிறங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களே தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றி என்பது சிங்களக் கட்சித் தலைவர்களின் ஜனாதிபதிக் கனவின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி சார்ந்து ஜனாதிபதி ரணிலிடம் சாணக்கியன் 60 கோடி தொகுதி அபிவிருத்திக்கும் சுமந்திரன் 5 கோடியும் பெற்றுக்கொண்டு சில தினங்களிலேயே சஜித்துக்கு ஆதரவு தருவதாக பகிரங்கமாக அறிவித்ததுடன் சஜித்துடன் படமெடுத்து ஊடகங்களில் வெளிவரவும் செய்தனர். கடந்த 3 வருடமாக சுமந்திரனும் சாணக்கியனும் ரணிலை தனிப்பட்ட எதிரிபோல் நாடாளுமன்றத்தில் வறுத்தெடுத்தனர். ஆனால் இப்போது அவரூடாக பெருந்தொகை பணத்தைப் பெற்று ஒரு சில தினங்களிலேயே சஜித்திற்கு ஆதரவு தெரிவித்தமை அரசியல் அவதானிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவர்கள் உண்மையில் யார் பக்கம் என்பதே குழப்பம். இதுபற்றி நேற்று தாயகம் வானொலியில் எனது செவ்வியில் கேட்கப்பட்டது. சஜித்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றவே இவர்களுக்கு இப்பெரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாகவே நான் உணர்கிறேன். தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினால் சிங்கள தேசியவாதிகளின் வாக்குகள் சஜித்திற்கு போகாது தனக்கே வரும் என்பதே ரணிலின் கணிப்பாகும். இதை நிறைவேற்றியதே சுமந்திரன் தரப்பின் தீர்மானமாகும். இவ்வாறு செவ்வியில் பதிலளித்திருந்தேன். அதை சந்தேகமின்றி நிரூபிக்கும் வகையில் ரணில் காய் நகர்த்தியிருக்கிறார்.

சுமந்திரன் தலைமையில் சஜித் ஆதரவுத் தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டமையைப் பாராட்டும் வகையில் முன்னர் கொடுத்த 5 கோடிக்கு மேலதிகமாக ஐந்து கோடி ஒதுக்கியிருக்கிறார். தனது எதிர் வேட்பாளருக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து செயற்படும் ஒருவருக்கு ரணில் மேலதிகமாக 5 கோடி ஒதுக்கினால் அதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும். சுமந்திரனின் சித்து விளையாட்டு இன்னோர் விடயத்தையும் புலப்படுத்தியிருக்கிறது. அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. கொள்கை அடிப்படையில் வேட்பாளர்களை ஆதரிப்பவருமல்ல. மாறாக ஓர் அரசியல் தரகர் என்பதாகும். அதிலும் ஒரே நேரத்தில் இருவேட்பாளர்களை திருப்திப்படுத்தும் இரண்டை முகவர் என்பதை வெளிப்படுத்தியமை மிக நல்லதே.

இவர் குருஷேத்திரத்தில் சகுனியின் இடத்திற்கு ஒப்பிடக்கூடியவர். எனினும் குருசேத்திரத்தில் கௌரவர்கள் கடைசி வரை மாமா சகுனியை நம்பினர். ஏற்றுக்கொண்டனர். இறுதியில் தோல்வி கொண்டனர். ஆனால் சுமந்திரனை தமிழ்த் தேசியப் பரப்பு தெளிவாக அடையாளம் கண்டு தள்ளி வைத்துவிட்டமையால் அவர் பாவம். தமிழின அழிப்பாளர்களின் முகவராக தமிழ்த் தேசிய முகமூடியிட்ட கறுப்பாடு என்பது அம்பலமாகியிருக்கிறது. எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிடுதல் மூலம் தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய கபட தாரிகள், தமிழ்த் தேசிய நடிகர்கள் என்போரை மக்களுக்கு இனம் காட்டும் முக்கிய விளைவுகளும் நடந்தேறும் என்று தோன்றுகிறது.

பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் பழையவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என புதிய சுலோகங்களுடன் வருவதும் அவர்களது சிந்தனையை புதிய சுலோகங்கள் மூலம் மடைமாற்றம் செய்ய முற்படுவதும் வழமை. அதில் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாற்ற 70 ஆண்டு காலமாக இத்தகைய தந்திரங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

‘இயலும் ஸ்ரீலங்கா என்பது ரணிலின் கோஷம்” தமிழ்மக்களைப் பொறுத்தவரை

1. தீர்வு என்கிற குழையைக் காட்டிக் கொண்டே தமிழ் மக்கள் என்கிற ஆட்டுமந்தையை என்பின்னால் வரச் செய்ய என்னால் இயலும்.

2. எந்தத் தீர்வும் கொடுக்காமல் எவ்வளவு காலமும் ஏமாற்ற என்னால் இயலும்.

3. மாகாண சபைகளை 10 வருடங்கள் செயலிழக்கச் செய்ய என்னால் முடியும்.

4. அரசியல் யாப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மாட்டேன் எனக் கூறியே தமிழ்மக்கள் வாக்கை எடுக்க என்னால் இயலும்.

5. அரச யந்திரங்களை தமிழ் மக்களின் இருப்புக்கெதிராக திருப்பி விட்டு அவர்களை என் காலடியில் விழ வைக்க என்னால் இயலும்.

இனமோதல் தீர்வுக்கான தமிழர்களின் நீதிக்கான சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க என்னால் இயலும்.என்ற தெளிவான விடயத்தை கொண்டுள்ளார்கள்.எனவே இயலும் ஸ்ரீலங்கா கோஷத்தால் தமிழ் வாக்காளர்களை கவரமுடியாது.

சஜித் பிரேமதாச தேர்தல் அறிவிக்கப்படும்வரை இலங்கை இனமோதல் தீர்வு பற்றி வடக்கு-கிழக்கு சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கெதிராக கடந்த 15 ஆண்டுகளாக தொடரும் போராட்டங்கள் தொடர்பில் வாயே திறக்காதவர்.

1123 பௌத்த விகாரைகளும் 1000 பௌத்த சமய பாடசாலைகளும் அமைப்பேன் என பிரகடனப்படுத்தியதன் மூலம் உலகம் முழுதும் பிச்சையெடுத்தேனும் புத்த கோவில்கள் கட்டுவேன் என்ற சிறந்த பொருளாதார கொள்கையையும் இனமோதலுக்கு தீர்வுகாணும் தெளிவையும் வெளிப்படுத்தியவர்.நாவற்குழி விகாரையைத் திறந்துவைத்தவரும் அவரே.அங்கு இராணுவத்தால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு காணி உறுதி வழங்கியவரும் அவரே.இவரால் தமிழர் வாக்குகளை கவரமுடியுமா?

அனுரகுமார திஸாநாயக்க பற்றி பேசவேண்டியதே இல்லை.ஏனெனில் மகிந்தவுடன் சேர்ந்து 18 ஆண்டுகள் இணைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழிருந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தை பிரித்த சமத்துவவாதிகள்இசோஷலிச வாதிகள்.இதற்கான காரணத்தை அவர்களால் சொல்லமுடியவில்லை. ஏனெனில்இசோசலிசம் பேசும் இன வெறியர்கள் என்பது அம்பலமாகிவிடும் என்பதால்.

சஜித் பிரேமதாசவை போன்றே தேர்தல் அறிவிக்கப்படும் வரை தமிழினம் என்ற ஒரு இனம் இருப்பதாகவே அவர்களுக்கு தெரியாது.ஏனெனில்இதேர்தல் அறிவிக்கப்படும் வரை நாடாளுமன்றத்திலோ வெளியிலோ இனமோதல் பற்றி அதற்கான தீர்வு பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.இவர்கள் தொடர்பாகவும் தெளிவாகவே உள்ளனர்.

எனவே தமிழ் மக்களுக்கான தெரிவு இலகுவானது-வெளிப்படையானது.எமது வாக்கு இல்லாவிடினும் இம்மூன்றிலொருவர் ஜனாதிபதியாக வருவார்.ஆனால்இவழக்கம்போல் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இன அழிப்புத் திட்டங்களை தொடரவிடாமல் நிரந்தர தீர்வுக்கான களங்களை திறப்பதற்கான திட்டங்களை தமிழ்த் தலைமை செயற்படுத்த வேண்டும்.அதற்கு தமிழ்த்தலைமைக்கு தமிழ் மக்களின் ஆணை என்கிற அதியுயர் வாக்குப்பலம் வேண்டும்.

பொது வேட்பாளருக்கு அனைத்து தமிழரும் வாக்களிப்பதன் மூலமே தமிழ்த்தரப்பு பலமடையும்.தமிழ் மக்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கமுடியும்.நிரந்தர தீர்வு நோக்கிய நகர்வுகளுக்கான கதவுகளை திறக்க முடியும்.சிங்களத்தலைமை தமிழ்த்தரப்பை மதித்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகும்.மக்கள் ஆணை என்ற பலத்துடன் பேசமுடியும்.

எனவே இத்தேர்தல் தமிழ் மக்களின் மனசாட்சியை வெல்வதா?கொள்வதா?,

இன அழிப்பாளரை தோற்கடிப்பதா?வெல்லவைப்பதா?

எமது இருப்பை உறுதி செய்வதா? இழப்பதா?

வருங்கால சமூகத்துக்கு வழிசமைப்பதா? குழி வெட்டுவதா? என்பதற்கு விடைகாணும் தேர்தல்.

பொதுவேட்பாளரின் வெற்றி தமிழ் தமிழ் மக்களின் வெற்றி.அவர்களது அரசியல் எதிர்பார்ப்புகளை அடைவதை நோக்கி நகரும் வெற்றி.தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்கும் வெற்றி.

உங்களை நீங்களே வெற்றிபெற செய்யும் தேர்தல்.

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

Share.
Leave A Reply