தாராபுரம்:ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவருக்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தினர்.அப்போது சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சத்யா மீது தாராபுரம் போலீசில் அவரது புதுக்கணவர் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்தபோது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை பிடித்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சத்யா சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அடுத்து கரூரைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரை கரம் பிடித்ததும், பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதும், அடுத்து மற்றொரு வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சத்யாவின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கரான கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அள்ளி ராணி தலைமையிலான போலீசார் கரூர் அருகே வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர், போலீசாரிடம் கூறியுள்ளார்.

தமிழ்செல்வி திருமணமாகி முதல் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். சத்யாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

அப்போதுதான் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் பார்ப்பவர்களை புரோக்கர் என அறிமுகமாகி சத்யாவின் படத்தை அனுப்பி திருமணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வி செய்துள்ளார்.

குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்காக புரோக்கர் கமிஷனாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சத்யாவுக்கு தாய், தந்தை, உறவினர் என ஒரு சிலரை ஏற்பாடு செய்து எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

மேலும் சத்யா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு நீங்கள் தான் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளனர். அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள்.

இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை திருமணமானவர்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, கரூர் சென்று விடுவார்.

இதேபோல் 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தியுள்ளார்.

30-க்கும் மேற்பட்டோர் உடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர்.

இவ்வாறு 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மேலும் சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்காக போடப்பட்ட நகைகள் அனைத்தையும் புரோக்கர் தமிழ்ச்செல்வி பெயரில் வங்கி லாக்கரில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share.
Leave A Reply