1967 ஜூனில் இஸ்ரேல் அண்டை நாடான எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் என்பனவற்றின் மீது தாக்குதல் நடத்தி சினாய் தீபகற்பம், கோலான் குன்றுகள், மேற்குக்கரை, காசா மற்றும் தெற்கு லெபனான் ஆகியவற்றைக் கைப்பற்றியது.
காசா மற்றும் மேற்குக் கரையில் நடப்பதைப் போலவே, 1967இல் நடைபெற்ற தாக்குதல்களும் அமெரிக்கா, பிரத்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டன.
மேற்குலக தலைநகரங்கள் முழுவதும் மகிழ்ச்சி நிலவியது. அரேபியர்கள் தோற்கடிக்கப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு, பலவீனமாக இருந்தனர்.
அரபு பலவீனத்தை பயன்படுத்தி இஸ்ரேல் தனது போர்க்குற்றங்களை தற்போது வரை தொடருகின்றது, அதேநேரம் அரபு சர்வாதிகாரிகள், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.
அமெரிக்க, ஐரோப்பிய எஜமானர்களின் பலவந்தத்தால் அரபு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
1967 ஜூனில் முதல் இஸ்ரேலின் ஆணவம் மற்றும் காட்டுமிராண்டித் தனத்திற்கு வரம்புகளே இல்லாமல் போய்விட்டது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பலஸ்தீனர்கள் மீது இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை விடுவிக்க போராடும் பாலஸ்தீனிய சுதந்திர இயக்கமான ஹமாஸை தடயமேயின்றி துடைத்தெறியப் போவதாக அறிவித்தார்.
ஆனால் ஹமாஸை அகற்றுவதற்குப் பதிலாக இஸ்ரேல் தான் இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது.
ஹமாஸ் ஈரானால் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் முழுமையாக ஆதரிக்கப்பட்டாலும் அரபு சர்வாதிகாரிகளால் வெறுக்கப்படுகின்ற போராட்ட சக்தியாகவே உள்ளது.
பத்தி எழுத்தாளர் ஸமி அல் ஆரியன், “ஒக்டோபர் 7இல் ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலிய இராணுவம் வெல்ல முடியாதவொரு சக்தி என்ற மாயையை நிரந்தரமாக அழித்தது.
நீண்ட தூர ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் மிகவும் துல்லியமான ட்ரோன்கள் உள்ளிட்ட முன்னேற்றகரமான இராணுவ தொழில்நுட்பத்தின் அண்மைக்கால முன்னேற்றங்களுடன் போராட்டக் குழுக்களால் இஸ்ரேலுக்குள் ஆழமாக ஊடுறுவி விருப்பப்படி கேந்திர முக்கியமான இலக்குகளைத் தாக்க முடிந்தது.
காசாவில் புரிந்துகொள்ள முடியாத பேரழிவு ஏற்பட்ட போதிலும் இஸ்ரேல் தனது இராணுவக் கோட்பாடு படிப்படியாக கரைந்து வரும் நிலையில் பெரிய மூலோபாய தோல்வியை சந்தித்துள்ளது.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகள் இஸ்ரேலுக்கு பின்னால் இருந்த போதிலும் அவற்றின் பொருளாதார, அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவுகளும் அதிநவீன ஆயுத உதவிகளும் உள்ள போதிலும் இது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் முன்னாள் மூத்த அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் யிட்சாக் பிரிக் வீழ்ச்சியடைவது ஹமாஸ் அல்ல, இஸ்ரேல் தான் என்ற வாதத்தை முன் வைத்துள்ளார்.
ஒரேஇலக்குகளை மீண்டும் மீண்டும் தாக்கி இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து சண்டையிட்டால் ஹமாஸை வீழ்த்துவது ஒருபுறமிருக்க ஒரு வருடத்திற்குள் நாமே வீழ்ச்சியடைவோம் என்று எச்சரித்துள்ளார்.
தற்போதைய மூலோபாயங்களின் மூலம் இஸ்ரேல் அதன் இலக்குகளை அடையவில்லை அவை இஸ்ரேலை வெற்றியை விட சாத்தியமான சரிவை நோக்கியே வழிநடத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு உட்பட காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் இஸ்ரேலின் பாதுகாப்பு பிரிவு தடுமாறுகிறது. அதன் இயலாமை, தற்போதைய இராணுவ அணுகுமுறையின் பயனற்ற நிலையை குறிக்கிறது என்று பிரிக் இன்னொரு வாதத்தையும் முன்வைத்துள்ளார்.
இஸ்ரேல் அழித்த சுரங்கங்களின் எண்ணிக்கை ஒரு சில சதவீதம் மட்டுமே என்றும் இஸ்ரேலின் முயற்சிகள் பெரும்பாலும் பயனற்றவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
ஹமாஸை இஸ்ரேல் தோற்கடிக்கவில்லை. அந்த இலக்கில் இருந்து இஸ்ரேல் வெகு தூரத்தில் உள்ளது என்று இஸ்ரேலிய ரிசர்வ் ஜெனரல் தால் ரூசோ ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.
காசாவில் முழு இராணுவ இருப்பை இஸ்ரேல் பராமரிக்க முடியாது என்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற முனைகளிலும் அது சவால்களை எதிர்கொள்கிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில் நான்கு மூத்த இஸ்ரேலிய இராணுவ தளபதிகள் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இஸ்ரேல் உள்ளேயும் வெளியேயும் அதன் இருப்புக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இக்கருத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதிக்கான முன்னாள் கட்டளைத் தளபதி அமிராம் லெவின் இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் நாஜி ஜேர்மனியை நினைவூட்டும் வகையில் போர்க்குற்ற செயல்முறைகளில் ஒருதரப்பாக மாறி வருவதாகவும் மேற்குக்கரையின் யதார்த்தம் ‘மொத்த நிறவெறி’ ஆகவே உள்ளது என்றும் இதன் விளைவாக இஸ்ரேல் படைகள் ‘உள்ளே இருந்து அழுகி வருகின்றன’ என்றும் கூறியுள்ளார்
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் இஸ்ரேலின் முடிவு “சுவர் மீது எழுதப் பட்டுள்ளது” என்கிறார்.
ஒரு சுயாதீனமான ஐ.நா.நிபுணரான அவர் மேற்கத்திய அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இஸ்ரேலின் இராணுவத்திற்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதால் கடுமையான போர்க்குற்றங்களுக்கு முகம் கொடுத்துள்ள இஸ்ரேலின் இனப்படுகொலை வன்முறை காசாவிலிருந்து வெளியேறி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்திற்குள் ஒட்டுமொத்தமாக கசியக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.
பல இஸ்ரேலிய முன்னாள் தளபதிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல் உள்ளேயும் வெளியேயும் அதன் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய எழுத்தாளர் ரொபர்ட் மார்ட்டின் “இஸ்ரேலின் முடிவின் ஆரம்பம்” என்று கூறினார். பலஸ்தீனர்களுக்கு அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையும் மற்றும் கண்ணியத்திற்கான உரிமையும் உள்ளது.
இஸ்ரேலிய வரலாற்றாசிரியரும்,அரசியல் விஞ்ஞானியும், முன்னாள் அரசியல்வாதியுமான இலான் பாப்பே, இஸ்ரேலின் வீழ்ச்சியை முன்னறிவிப்பு செய்துள்ளார் இஸ்ரேலிய வரலாற்றாசிரியரும், அரசியல் விஞ்ஞானியும், முன்னாள் அரசியல்வாதியுமான இலான் பாப்பே. ஒக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸின் தாக்குதலை ஒரு பழைய கட்டடத்தைத் தாக்கிய பூகம்பத்துடன் ஒப்பிடலாம் என்றார். விரிசல்கள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன.
ஆனால் அவை இப்போது அதன் அடித்தளங்களிலேயே காணப்படுகின்றன. அதன் தொடக்கத்திலிருந்து 120 ஆண்டுகளுக்கும் மேலாக, பலஸ்தீனத்தில் சியோனிச திட்டம்-ஒரு அரபு, முஸ்லிம் மற்றும் மத்திய கிழக்கு நாட்டின் மீது ஒரு யூத அரசை திணிக்கும் யோசனை சரியும் வாய்ப்பை எதிர்கொள்ள முடியுமா?
வரலாற்று ரீதியாக, ஏராளமான காரணிகள் ஒரு தேசம் மூழ்குவதற்கு காரணமாக இருக்கலாம். அண்டை நாடுகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் அல்லது நீண்டகால உள்நாட்டுப் போரின் விளைவாக இது ஏற்படலாம். குடிமக்களுக்கு சேவைகளை வழங்க இயலாத பொது நிறுவனங்களின் முறிவைத் தொடர்ந்து இது நிகழலாம்.
பெரும்பாலும் இது ஒரு மெதுவான சிதைவு செயல்முறையாகவே தொடங்குவதுண்டு. இது காலப் போக்கில் வேகத்தை பெற்று பின்னர் குறுகிய காலத்தில், குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு முன் திடமாகவும் உறுதியாகவும் தோன்றிய கட்டமைப்புகளைக் சிதைக்கின்றது.
மக்கள் இந்த யோசனையை வரவேற்றாலும் சரி அல்லது ஒதுக்கினாலும் சரி, இஸ்ரேலின் வீழ்ச்சி முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக மாறிவிட்டது. இந்த சாத்தியக்கூறு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த நீண்டகால உரையாடலை தோற்றுவிக்க வேண்டும்.
ஒரு அரபு நாட்டின் மீது யூத அரசை திணிப்பதற்காக பிரித்தானியாவும் பின்னர் அமெரிக்காவினதும் தலைமையிலான நூற்றாண்டு கால முயற்சி மெதுவாக முடிவுக்கு வருகிறது என்பதை மக்கள் உணரும்போது அதுபிராந்தியத்துக்கான நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இருக்கும்.
மில்லியன் கணக்கான குடியேற்ற வாசிகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் அளவுக்கு இது வெற்றிகரமாக இருந்தது. அவர்களில் பலர் இப்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினர். ஆனால் அவர்களின் இன்றைய இருப்பு இன்னும் அவர்கள் வந்தபோது இருந்ததைப் போலவே, மில்லியன் கணக்கான பழங்குடி சுதேச மக்கள் மீது தங்கள் விருப்பத்தை வன்முறையாக திணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
ஆனால் அந்த மக்களோ தங்கள் தாயகத்தில் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடவில்லை. வரவிருக்கும் தசாப்தங்களில், குடியேறியவர்கள் இந்த அணுகுமுறையில் இருந்து விடுபட்டு சமமான குடிமக்களாக வாழ விருப்பம் காட்ட வேண்டும்.