ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

இது இஸ்ரேல் நடத்திய “திட்டமிட்ட தாக்குதல்” என லெபனான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் இதற்காக “தகுந்த பதிலடி” கொடுக்கப்படும் என்று ஹெஸ்பொலா கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக சில இஸ்ரேல் ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் பொதுவாக ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வரும். இந்த தாக்குதல் இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த வெடிப்புகளுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்பது உண்மையானால், இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அதிக தாக்கத்தை ஏற்பத்திய ஒன்றாக இது இருக்கும். குறிப்பாக இஸ்ரேலின் தேசிய உளவு அமைப்பான மொசாட் முன்பு செய்த பணிகளை நினைவுக்கு கொண்டு வருவதாக இது அமையும்.

தகவல்தொடர்பு சாதனம் வெடித்ததால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா அமைப்பை சேர்ந்த ஒருவரின் இறுதிச் சடங்கு

மொசாட்டின் வெற்றிகள்

மொசாட் பல வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. மிகவும் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

அடோல்ஃப் ஐச்மேன் விசாரணை கூண்டில். பின்னால் சீருடை அணிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி பின்னால் நிற்கிறார்.

இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன்

நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது

1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது நாஜி வதை முகாம்களில் யூதர்கள் துன்புறுத்தப்பட்டு, அவர்களின் இனப்படுகொலைக்கான முக்கிய திட்டம் தீட்டியவராக ஐக்மேன் கருதப்படுகிறார். இதில் சுமார் அறுபது லட்சம் யூதர்கள் இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனியால் கொல்லப்பட்டனர்.

தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார்.

14 மொசாட் ஏஜென்டுகள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

எண்டெபி ஆபரேஷன்

எண்டெபி பணயக்கைதிகள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்

உகாண்டாவில் நடந்த எண்டெபி ஆபரேஷன் இஸ்ரேலின் மிக வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ’மொசாட்’ அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது.

பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார்.

எண்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.

இஸ்ரேலிய படையினர் விமான நிலையத்துக்குள் புகுந்து, மீதமிருந்த 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர் மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர்.

எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் ஒரு மொசாட் ஏஜென்ட் நிற்கிறார்.

1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகினின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது.

இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை தங்கள் மறைவிடமாக அது பயன்படுத்தியது.

அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்டுகளின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர்.

அந்த ஏஜென்டுகள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து விமானம் மற்றும் கடல் வழியாக வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.

ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி

பாலஸ்தீனிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு மக்களுக்கு அஞ்சலி செலுத்த 1972 செப்டம்பர் 6 ஆம் தேதி ம்யூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேலிய அணி உறுப்பினர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

1972-ஆம் ஆண்டு பாலத்தீன ஆயுதக்குழுவான ’பிளாக் செப்டம்பர்’, ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக்ஸ் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.

பின்னர் மேற்கு ஜெர்மன் காவல் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர்.

1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

சில வருடங்களுக்கு பிறகு, மஹ்மூத் ஹம்ஷாரி உட்பட தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை மொசாட் குறிவைத்தது.

பாரிஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு ஹம்ஷாரி கொல்லப்பட்டார்.

யஹ்யா அய்யாஷ் மற்றும் வெடித்த கைபேசி

1996-ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு நடவடிக்கையில், ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிமருந்து நிரப்பப்பட்ட கைபேசியால் படுகொலை செய்யப்பட்டார்.

ஹமாஸின் ராணுவப் பிரிவின் முக்கியத் தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

இது அவரை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் தேடப்படும் முக்கிய நபராக ஆக்கியது. அவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவரானார்.

2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. இஸ்ரேலின் சேனல் 13 தொலைக்காட்சி, அய்யாஷின் கடைசி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது.

ஹம்ஷாரி மற்றும் அய்யாஷ் ஆகிய இருவரின் கொலைகளும், திட்டமிட்டு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு செய்யப்பட்ட கொலைகளுள் ஒன்றாகும்.

மஹ்மூத் அல்- மபூ: கழுத்தை நெரித்து கொலை

மஹ்மூத் அல்- மபூ மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்

2010-ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூ துபாயில் ஒரு ஹோட்டலில் கொலை செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் இது ஒரு இயற்கை மரணமாகவே கருதப்பட்டது. ஆனால் துபாய் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு கொலை செய்த குழுவை அடையாளம் காண முடிந்தது.

அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது.

இந்த நடவடிக்கையை மொசாட் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது. அதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதாண்மை மட்டத்தில் எதிர்ப்புகள் எழுந்தன.

ஆயினும் மொசாட் அமைப்புதான் இந்த தாக்குதல் செய்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கூறினர்.

இது போன்ற விவகாரங்களில் எப்போதும் தெளிவான கருத்தை தெரிவிக்காமல் இருக்கும் இஸ்ரேல், இந்த விஷயத்திலும் அதே நிலைப்பாட்டை கடைபிடித்தது.

தோல்வியுற்ற கொலை முயற்சிகள்

பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது.

காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார்.

1997-ஆம் ஆண்டு ஜோர்டனில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும்.

இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்டபோது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது.

மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார்.

இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை கணிசமாக மோசமாக்கியது.

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்- ஜஹர்

2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது.

லவோன் சம்பவம்

1954 இல் எகிப்திய அதிகாரிகள் ’ஆபரேஷன் சுசன்னா’ என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர்.

சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் ’லாவோன் சம்பவம்’ என்று அறியப்பட்டது. இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

இதில் மொசாட் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்ததாக அறியப்படுகிறது.

யோம் கிப்பூர் போர்

1973 ஆம் ஆண்டு அரபு இஸ்ரேல் போரின்போது இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் சூயஸ் கால்வாயை பார்க்கின்றனர்.

1973 அக்டோபர் 6-ஆம் தேதி, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின.

யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடந்தப்பட்ட இந்தத்தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலை இரண்டு முனைகளில் தாக்கின.

எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியப் படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன.

அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது.

பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது.

2023 அக்டோபர் 7 தாக்குதல்

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் ஒரு திடீர் தாக்குதலால் ஆச்சரியமடைந்தது. இந்த முறை ஹமாஸ் 2023 அக்டோபர் 7-ஆம் தேதி காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கியது.

தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதன் விளைவாக 40,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Share.
Leave A Reply